If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
5. சித்தர் நெறி

சித்தர்
அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப் பொருளாகச் சித்தன் கிருத கிருத்தியன்செய்ய வேண்டுவன வற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன் எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கின்றவன் என்று விளக்குகிறார்.

சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துகளை உண்டாக்கி, பக்தி நெறியல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தனர் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும், மு. அருணா சலமும் தெரிவிக்கின்றனர்.

சித்தர் தன்மைகள்

சித்தர்கள் சமயக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கென்றொரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழி ஒழுகினர். மத மாச்சரியங்கள், சாதி பேதங்கள், உயர்வு தாழ்வு இவை அனைத்தையும் கடந்து நின்றார்கள். சித்தர்களைப் பற்றிய பல்வேறு கதைகளும் கருத்துகளும் நாட்டில் நிலவி வருகின்றன. சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் செவி வழியாகவும் நூல் வழியாகவும் மட்டுமே கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.

சித்தர்கள், உலகத்தின் பொருள் வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வழியை வகுத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் காணப்படுகின்றனர்.

நோயற்ற வாழ்வும் சாகாநிலையும் மனிதன் அடையக் கூடிய இடம் என்று நிரூபித்தனர். சித்தர்களின் முறைகள் அறிவியல் பார்வைக்கு உடன்பாடாக இருக்கின்றன.

சித்தர் செயல்களைத் தோற்றுவித்தவராகச் சிவனையும், தமிழகத்தில் சித்தர் மரபை உருவாக்கியவராகத் திருமூலரையும் குறிப்பிடலாம்.

சிவன்

சிவம்பொருள் விளக்கம்

‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் –“The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought.” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி ((Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின1 என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.

சதாசிவம்

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.2

வழிபாட்டில் சிவன்

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன்3 என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது.

பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்

முக்கண் செல்வன்4 கரை மிடற்றண்ணல்5 காரி உண்டிக் கடவுள்6 தாழ் சடையன்7 புரமெரித்தோன்8
கொன்றை மாலையன்9 ஆலமர் கடவுள்10

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்11 என்பர்.

மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

“சேயோன் மேய மைவரை யுலகம்”12 எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.13 என்பதும் சரியாகத் தோன்றவில்லை.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.

சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது14 என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

முதல் சித்தன் சிவன்

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16

“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17
“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18
“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19
“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20
“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21
“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22
“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23
“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24
“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.

மருத்துவ நூல்களில் சிவன் மரபு

தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர் க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப் பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது.

சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடு கின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம்.

இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்திகுறியீடு

“கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு”26

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்”27

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

“திரிந்து பார் தவாரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும் பாழென் றெண்ணாதே சிவமென்றெண்ணு”28

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

“மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு”29

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர் மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம்.30 என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்.

சிவன் சித்தர்

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”31

மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.

“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து”32

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்”33

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்.

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

திருமூலர்

திருமூலரின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளவை சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துள் திருமூல நாயனார் புராணமும், நம்பியாண்டார் நம்பி திரு மூலரைப் பற்றிப் பாடிய பாடலும்34 ‘தமிழ் மூவாயிரம்’ என்னும் திரு மந்திரப் பாயிரத்தில் உள்ள ‘திருமூலர் வரலாறு’ என்னும் அதிகாரமு மாகும். இவற்றுள், பாயிரத்தில் உள்ள பல பாடல்கள் இடைச் செருகலாக உள்ளன.

திருமூலர் பொதிகை மலையில் அகத்தியரைக் காண்பதற்காகக் கயிலை மலையிலிருந்து தென் திசைக்கு வந்தார் என்ற பெரிய புராணச் செய்திக்குத் திருமந்திரப் பாயிரத்தில் ஆதாரம் யாதுமில்லை. மாறாக, ஆசிரியர் நூலினுள் அகத்தியரின் வரலாற்றைஅவர் பொதிய மலைக்கு வந்த காரணத்தை ஒரு புராணக்கதை போலக் கூறுகின்றார்35. அகத்தியர் பற்றிய வரலாறுகள் பல. அவற்றுள் எந்த அகத்தியர் திரு மூலருக்குச் சம காலத்தவர் எனத் தெரியவில்லை.

‘திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார், ஆண்டுக்கு ஒரு பாடலாகத் திருமந்திரப் பாடல்களை இயற்றினார்’ என்று சேக்கிழார் கூறும் செய்தி அவர் செவி வழிக் கேட்டதாதல் வேண்டும். திருமூலர் யோக ஆற்றலால் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால், யோகத்தில் 3000 ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொரு பாடலாகத் திருமந்திரத்தைப் பாடினார் எனக் கொள்ளுதற்குச் சான்றில்லை. மாறாக, திருமந்திரத்தின் பல பகுதிகளை நோக்கும் போது, அவை ஒருங்கே ஒரு காலத்தில் செய்யப்பட்டனவாகத் தோன்று கின்றனவே அன்றி, ஆண்டுக்கொரு பாடலாக வெளிப் போந்தவையாகத் தோன்ற வில்லை.

இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் திருமூலரின் காலத்தைக் கண்டறிவதில் இடர் பாடுகள் உள்ளமையைத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இங்கு ஒரு சில அகச் சான்றுகளைக் கொண்டு அவரது காலத்தை வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் திருத் தொண்டத் தொகையுள் ‘நம்பிரான் திருமூலர்’ எனக் குறிப்பிடுகின்றமையால், 8ஆம் நூற்றாண்டையே திருமூலரின் காலத்திற்குப் பின் எல்லையாகக் கொள்ளலாம். திரு மந்திரத்துள் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்னும் குறிப்பு வருகிறது36 சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுடன், கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் சேர்ந்து ஐந்து மண்டலங்களாக எண்ணப்படும் வழக்கு உண்டான பின்னரே திருமூலர் நூல் பாடியிருக்க வேண்டும். சங்க இலக்கியத் திலும், சிலம்பிலும் கொங்கரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன என்ற போதிலும் கொங்கு மண்டலம் என்ற குறியீடு இல்லை. தொண்டை மண்டலம் என்ற வழக்குப் பல்லவர் ஆட்சிக்குப் பின்னரே உண்டாயிற்று. பல்லவரின் ஆட்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம்நூற்றாண்டு வரை நிலவியது. திருமூலர் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார்37 சிற்றம்பலத்தில் முதன்முதலில் பொன்வேய்ந்தவன் 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னாகிய சிம்மவர்மன்1 ஆவான்.

தேவார காலத்திலும் அதற்குப் பின்னும் சமய, காப்பிய இலக்கியங்களைப் பல்வகை விருத்தயாப்புகளில் பாடும் வழக்கம் இருந்தது. திருமூலரோ கலிவிருத்த யாப்பையே மேற்கொண்டுள்ளார். இக்காரணத்தால் அவர் தேவார காலத்திற்கும் முன்பிருந்தவராதல் வேண்டும்.

வெள்ளை வாரணனார் திருமந்திரத்தின் சொற்கள், தொடர்கள் ஆகியவை மூவர் தேவாரத்திலும் ஆளப் பெற்றமையை எடுத்துக் காட்டுகின்றார்.

மேற்குறித்த காரணங்களைக் கொண்டு திருமூலர் நூல் பாடிய காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினை யொட்டிச் சற்று முன்பின்னாகக் கொள்ளப் படலாம்38.

நந்தியின் சீடர்கள்எண்மர். அவர்கள் ‘நாதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றவர். அவர்கள் நான்கு நந்திகள், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர், திருமூலர் என்போர்.39

திருமூலருக்குச் சிவன் ஏழுலட்சம் முறைகளைக் கூறினார். அவைகளைத் திருமூலர் செய்து பார்த்துத் தேர்ந்தார் அம்முறைகளைச் சுருக்கிச் கொங்கணர் பாடினார்.40

திருமூலர் அறிந்த முறைகளைக் கொங்கணர் பாடினார் என்றதனால் கொங்கணர் திருமூலரின் மாணவராதல் வேண்டும்.

திருமூலர் சோழனின் வேண்டுகோளுக்கிணங்க சிதம்பரத்தில் நடராசன் சிலையைத் தங்கத்தால் வார்த்துத் தந்தார் என்று அகத்தியர் குறிப்பிடுவதனால் திருமூலருக்கு அகத்தியர் சமகாலத்தவராகவோ அல்லது பிற்பட்டவராகவோ இருக்கலாம்.

“வெல்லுமே யினியென்ன இராசாளி முன்னே
மேவுமோ கொக்குகள் கொங்கணரே ஐயா
சொல்லுமே சட்டைமுனி சொன்ன வாரே
தூண்டினதை மூலரென் சிறிய தந்தை
பல்லுறவை படித்தாரே பிண்ணாக் கீசர்
பாடுமென்ற உரைப்படி பாடி னேனே”41

என்னும் மச்சமுனி உரையால், திருமூலர், கொங்கணர், சட்டைமுனி, பிண்ணாக்கீசர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவராவர்.

“செய்யவே திருநீல கண்டர் வைப்பு”
“நீலகண்டர் உரைத்திருத்த பாண்டம் கூட”
“உள்ளபடி திருநீல கண்டர் வித்தை
உற்றுப்பார் திருமூலர் உரைத்தா ரப்பா”42

என்பதனால், திருநீலகண்டரும் மச்சமுனியும் சமகாலத் தவராக கருதலாம்.

“பான்மையாம் கொங்கணரும் இந்த பாகம்
பாரினிலே களங்கமறச் சொல்ல வில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தி யருக்கு
மேதினியில் விளக்கமறச் சொல்ல வில்லை
வாண்மையுடன் புலிப்பாணி இந்த பாகம்
வசனித்தார் ஆயிரத்துவன் னூருக்குள்”43

“ஆமேதான் அகத்தியரும் முன்னே செல்ல
அன்பான தேரையரும் பின்னே செல்ல”44

எனவரும் போகரின் குறிப்புகளால் கொங்கணர், அகஸ்தியர், புலஸ்தியர், புலிப்பாணி, தேரையர் ஆகியோர் போகரின் காலத்தவர்களாகவோ முற்பட்டவர்களாகவே இருக்கலாம்.

“பொய்யுரையான் சத்தியங்கள் மெத்த வுண்டு
ஆகனவன் திண்டுடலன் குச்சிக் காலன்”45

போகர், பொய்யுரைக்காத வாய்மையாளர் என்றும் தடித்த உடலும் குச்சிக் காலும் கொண்டவர் என்றும் உரைப்பதனைக் கொண்டு, காகப்புசண்டரும் போகரும் சமகாலத்தவர் என்று கொள்ளல் தகும்.

“மெச்சுவேன் யாகோபு தேரை யாரை
வேணபொருள் வைத்திருக்கும் அகஸ்திய நாதன்
குச்சுப் போற் தானிருக்கும் கோரக்கன் தன்னை
குடுகுடுக்கைக் கஞ்சாவைக் கொட்டி மேய்ந்தான்”46

என்றதனால் யாகோபு, தேரையர், அகத்தியர், கோரக்கர் ஆகியோரின் காலமே காகப்புசண்டர் காலமும் ஆகலாம்.

“ஆளான ரோமரிஷி பாட்ட னுக்கு
அழகாக வந்துதித்த இராம தேவன்”47

ரோமரிஷி, இராமதேவர் ஆகியோரை போகரின் காலத்தொடு கூறலாம்.

“தெள்ளுதமிழ்க் கவிவாணர் இவர்க்கு ஈடுண்டோ?
செந்தமிழின் சுவையறிந்த சிவ வாக்கியர் தான்”48

என்றதனால் போகருடன் சிவ வாக்கியரை இணைத்துக் காணத் தோன்றும்.

நபிகள் நாயகத்தை யாகோபு கண்டு வந்ததாகப் போகர்49 குறிப்பிடுவதிலிருந்து நபிகள் காலமே சித்தர்களின் காலமும் ஆகலாம்.

சட்டமுனியின் உபதேசத்தால் ஞானம் பெற்ற பாம்பாட்டிச் சித்தர், வெகுகாலம் வாழ்ந்திருந்து, சமாதி அடைந்தார்50.

“சேக்கிழார் அறுபத்து மூவர் தானோ”51

என, காகப்புசண்டர் உரைப்பதனால் சேக்கிழார் காலத்திற்குப் பிற்பட்டவர் காகப்புசண்டர் எனலாம்.

“கோரக்கரும் போகரும் சம காலத்தவர் என்றும், இவர்கள் காலத்திலேயே பதினெண் சித்தர்களும் வாழ்ந்தனர் என்றும், அது கி.பி. மூன்றிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் பேராசிரியர். ந. சேதுரகுநாதன் கருதுகிறார்.”52

“போகர் சீன நாட்டைச் சேர்ந்த மண்பானை முதலியவற்றைச் செய்பவர் என்பர். இவரைப் பௌத்தத் துறவி என்றும் சீனப்பயணியாக 1600 ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டுக்கு வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான சில இடங்களைக் தரிசித்துவிட்டு தமிழ் நாட்டுக்கு வந்தவ ரென்றும் கூறுவர்”53

“கேளேநீ கலியுகத்தில் இருநூற் றைந்தில்
கேசரிபோல் புலிப்பாணி பேரும் பெற்றேன்”54

என்பதிலிருந்து கலி205இல் புலிப்பாணி என்னும் பெயரைப் பெற்றதாக உரைப்பதிலிருந்து இவரின் காலம் (கிறித்து ஆண்டு, கலியாண்டு 3101லிருந்து துவங்குகிறது) 3101205 = 2896, கி.மு. 2896 என்றாகிறது. புலிப்பாணி போகரின் மாணவராகக் கருதப் படுவதனால் அதுவே, போகரின் காலமாகலாம்.

“சோழ நாட்டில் காவிரி நதியின் பாங்குற்ற கொள்ளிட நதி தீரத்தில் அமைந்துள்ள பரூர்ப்பட்டி என்னுஞ் சிற்வுரில் உள்ள, சடையப்ப கவுண்டன் என்பவர் என்னை அனுசரித்து வாழ்த்தி நின்றார். ஆங்கே, பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில், சமாதி நிலையுடைந்தேன். சித்தனாகிய எனக்கு மரணம் என்பதோ இல்லை. அதே போன்று, பரிவிருத்தி ஆயிரத்து நூற்றியிருப்பதாறாவது ஆண்டில் சமாதி அடைந்த சித்தர்களுடன் வெளியே வந்து, கருணையுடன் மக்களை ஆள்வோம்.”55 என்பதால் கோரக்கர் காலம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 என்றாகும்.

“உத்தமஞ்சி வாடுசுமி நீ வெனவே
மனர் வடுகி லுரைத்தல் போல்”56

என்று தெலுங்கு வேமன்னரைக் குறிப்பிடுவதனால், வேமன்னர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர்57 என்பதால் தேரையரையும் 15ஆம் நூற்றாண் டெனலாம். மேலும் “உருளைக் கிழங்கு கற்பம்” பற்றி கரிசலில் குறிப்பிடுவதனால், உருளைக் கிழங்கு தென்னிந்தியாவுக்கு வந்தது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு என்று அறிவதனாலும் தேரையர் சற்றேறக் குறைய 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு58 என்பர்.

உருளைக் கிழங்கு, தேரையர் காலத்தை அறியப் பயன்படுமா என்பதில் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் விளை பொருளாக ஆனது 16 ஆம் நூற்றாண்டு அவ்வளவே, பொருளாகவோ, மருந்தாகவோ அதற்கு முன்பிருந்தும் வந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் வேமன்னர் பற்றிய குறிப்பு காணப்படுவதிலிருந்து ஓரளவுக்கு வேமன்னர் காலத்தொடு தொடர்பு இருப்பதாகக் கருதலாம். என்றாலும், பதிகப்பாடல்கள் மூலநூலாசிரியர் தான் இயற்றினார் என்பதிலும் ஐயம் தோன்றுகிறது.

தமிழில் உள்ள மருத்துவ நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிவதில் பெருத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளைக் கூறுமிடத்து ஒன்றுக் கொன்று மாறுபட்ட தகவல்களாகவே இருக்கின்றன.

அகத்தியர் என்னும் சித்தர்காலத்தைக் கண்டறிந்த அறிஞர்கள், அகத்தியர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியம் போன்றவற்றில் 37 பேர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களில் மருத்துவம் போன்ற முறைகளைச் செய்த அகத்தியர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகவும் கருதுகின்றனர்.

மருத்துவ நூலுள் காணப்படும் செய்திகளைக் கொண்டு பார்த்தால், திரு மூலருக்கும் அகத்தியருக்கும் தொடர்பிருந்தது தெரிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரோடு எப்படித் தொடர்பு கொண்டிருக்க முடியும்?

கோரக்கர் நூல், கோரக்கர் கி.பி. 1233இல் சமாதி அடைந்தாகக் கூறுகிறது. ஆனால், அந்நூல் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

போகர், 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பர். புலிப்பாணி, தன்நூலில் போகருக்குப் பின் தான் பழனி கோயில் முறையைச் செய்யத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிடும் போது, அது கி.மு. 2896 எனத் தெரிகிறது. அப்படியானால் புலிப்பாணி போகரின் மாணவர் என்பது பொருந்தாது. அதே போல் தேரையர் கி.பி. 16ஆம் நூற்றாண்டு என்பர். இவரும் போகரின் மாணவர் என்பர் இதுவும் பொருந்தவில்லை.

திருமூலரும் போகரும் சமகாலத்தவராக மருத்துவ நூல் கூறுகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரும், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போகரும் எப்படிச் சமகாலத்தவராகக் கருத முடியும்? என்றாலும், ஒரு சில ஆண்டுகள் முன் பின்னாக இருந்து, இவ்விருவரும் சமகாலம் என்பது ஓரளவுக்கு ஒத்துப் போகலாம். மற்ற சித்தர்கள் காலம் ஒத்துக் காணப்படவில்லை.

எனவே, தற்போது வழங்கி வரும் நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிய முயல்வது முறையாகத் தோன்றவில்லை. அவை அனைத்தும் பிற்காலத்தில் பலரால் இயற்றப் பெற்றவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்பைத் தங்கள் மனம் போனவாறு இணைத்துக் கூறியுள்ளனர்.

சித்தர்கள் எண்ணிக்கை

சித்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளோ ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுவுமே காணக்கூடியதாக இல்லை. இந்நிலையில் சித்தர்கள் எத்தனைபேர்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் 59 சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பதினெண் சித்தர்கள்

தில்லையில் திருமூலர், அழகர் மலையில் இராமதேவர், அனந்த சயனத்தில் கும்ப முனி, அருணையில் இடைக்காடர், வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி, எட்டுக்குடியில் வான்மீகர், மருதாசலத்தில் பாம்பாட்டி, மாயுரத்தில் குதம்பை, ஆருரில் கமல முனி, பழநியில் போகர், பரன்குன்றில் குதம்பை, திருப்பதியில் கொங்கணர், இராமேசுரத்தில் பதஞ்சலி, காசியில் நந்தி, கருவூரில் காங்கேயர், பொய்யூரில் கோரக்கர், சோதிரங்கத்தில் சட்டமுனி, மதுரையில் சுந்தரானந்த தேவர்60 எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிறது.

பதினெண்மர் என்னும் எண்ணிக்கை எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது என்பது விளங்கவில்லை. சித்த மருத்துவத் தொகையகராதியில் மொத்தம் இருபது பட்டியல்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒருவரோ பலரோ விடுபட்ட நிலையில் புதிதாகச் சிலர் சேர்க்கப்பட்டும் இருக்கக் காணலாம்.

பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்பன போல பதினெண் சித்தர்கள் என்னும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. சித்தர்கள் அனேகம் கோடி என்று சட்டமுனி குறிப்பிடுகின்றார். எனினும் பதினெண்மர் என வரையறை செய்ததன் நோக்கம் விளங்கவில்லை. ஆயினும் சித்தர்கள் வரிசையைத் தொகுத்த காலத்தில் இருந்த எண்ணிக்கையாகவோ அல்லது இக்கூட்டத்தில் தலைசிறந்த களாகவோ அல்லது நூல் மூலமாகப் புற உலகுக்கு அறிமுக மானவர்களாகவோ இருத்தல் வேண்டும்61 என்று இரா. மாணிக்கவாசகம் கருதுகிறார்.

“அக்கினிக் கலை 64இன் குணங்களைச் சைவத்தில் 64 திருவிளையாடல் களாகவும் சிவனடியார்களாகவும் சந்திரகலை 12ஐயும் வைணவத்தில் நாயன்மார் களாகவும் வழங்குகின்றனர்” என வடலூர் வள்ளலார் கருதுவது போல, இவை பதினெட்டும் தத்துவங்கள் எவற்றையாகிலும் உணர்த்துவ தாக இருத்தல் கூடும்62 என்னும் கருத்தும் ஏற்புடையதாக அமையக் காணலாம்.

இலக்கியத்தில் சித்தர்

அகத்தியரை, ‘தென்தமிழை இயம்பியவன்‘, ‘காவேரி யளித்தவன்’ ‘விந்தம் அடக்கியவன்’ ‘இசைமேதை’ ‘சிவனை நிகர் பொதியமுனி’ என்றெல்லாம் தமிழ் இலக்கியம் கூறும். திரு மூலரை ‘யோகி’ ‘சிவனடியார்’, ‘திருமந்திர ஆசிரியர்’ என்பதும் இலக்கியம் தரும் செய்தி. நந்தி, சைவசித்தாந் தத்தின்முதல்வராக எண்ணப்படுகிறார். இடைக்காடரைத் திருவிளையாடல் புராணம் கூறும். இவர்களைப் பற்றி இத்தனை செய்திகளைக் கூறும் தமிழ் இலக்கியம், சித்தர் என்று இவர்களைச் சுட்டவில்லை. மேலும் பதினெண் சித்தர்கள் என்னும் வழக்கே தமிழ் இலக்கியத்தில் இடம் பெறவில்லை. சித்தர் என்னும் ஒரு பிரிவு தமிழ் நாட்டில் இருந்திருந்தால் சேக்கிழாரும், பரஞ்சோதி முனிவரும் குறிப்பிடாமல் இருதிருக்கமாட்டார்கள். சேக்கிழார் காலத்தில் பதினெண் சித்தர்கள் என்னும் வழக்கு இருந்திருந் தால் அதில், திருமூலரும் இடம் பெற்றிருந்தால், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திருமூலரைக் குறிப்பிட்ட சேக்கிழார், சித்தர் என்றும் குறிப்பிடிருப்பார். பெரிய புராணச் செய்திகள் வரலாற்று நோக்கில் தரப்படும் செய்திகளாக இருக்கும் போது, சித்தர் பற்றிய செய்தி காணப்படாததற்குரிய காரணம் புலப்படவில்லை.

அதே போல், இசை, குதிரை, நவமணிகள் போன்ற செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்ற பரஞ்சோதி முனிவர், சித்தர்களைப் பற்றிக் கூறும் வாய்ப்பு இருந்தும் கூறவில்லை எல்லாம் வல்ல சித்தரான படலம், கல்யானைக்குக் கரும்பருந்திய படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்னும் மூன்று படலங்களில் சித்தர்களைக் குறிப்பிடும் சூழல் இருந்ததால் கூறியிருக்கலாம்63 என்று சே. பிரேமா கருத்துத் தெரிவிக்கின்றார்.
சேக்கிழாரும், பரஞ்சோதி முனிவரும் குறிப்பிட வில்லை என்பதால் சித்தர்கள் யாரும் இல்லை என்பது பொருந்துவதாகத் தோன்றவில்லை. பெரிய புராணம், சித்தர் புராணமில்லை; திருவிளையாடல் புராணம் சித்தர்களின் திருவிளையாடலைக் கூற இயற்றப்பட்டதன்று. இவ் விரண்டும் சைவ மத நூல்கள். திருவிளையாடலில் எல்லாம் வல்ல சித்தர் என்னும் தொடர் சித்தரைப் போலச் சிவபெருமானும் என்று சித்தரிக்கப் படுகின்றார் என்பதையே காட்டும். “பாண்டியர் பாண்டிய நாடு என்னும் இவற்றைச் சிறப்பித்துக் கூற இயற்றப் பட்டதே திருவிளையாடல் புராணம்”64 என்றதால் சித்தர்கள் பற்றிய செய்தி இடம் பெறவில்லை. சிவனே முதல் சித்தன் என்னும் போது, அவனுக்குப் பின்தானே மற்றவர்கள். அதனால், சிவனைக் குறிப்பிடும் காலத்தில் வேறு எவரும் சித்தர் நிலைக்கு உயர்ந்தவராக இல்லை என்றும் கருதலாம்.

அல்லது, சித்தர்கள், வேந்தர்களாகவோ, மதம் சார்ந்தவர்களாகவோ இருந்திருந்தால், இலக்கியமும் வரலாறும் இயம்பியிருக்கும். அந்நிலையில் சித்தர்கள் இருந்ததாகக் குறிப்பிடவில்லை என்றும் கருதலாம்.
மனித வாழ்வில் இயல்பாக நிகழ்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் என்ன? என்ன? என்று கேட்டுக் கொண்டு செல்கின்றவர்களாகவும் அவை, தேவையற்ற செயல் என்று கருதக் கூடியவர்களாகவும் இருந்ததனால் சித்தர்களுக்கு மக்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் வரலாறும் இலக்கியமும் சித்தர்களைச் சுட்ட வில்லை எனலாம்.

சித்தர்களின் இருப்பிடம்

சித்தர்கள் தங்கள் இருப்பிடமாக மக்கள் வாழ்விடங்களைத் தேர்வு செய்யாமல், மலைகளிலேயே இருந்திருந்ததாகத் தெரிகிறது. மலை என்பது, தனிமை, அமைதி, மூலிகை போன்றவற்றின் இருப்பிடம் என்பதால் அவ்விடங்கள் சித்தர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருந்தன.

பொதிகை மலையில் அகத்தியரும், மேருவுக்கு வடக்கே தட்சிணா மூர்த்தியும் காவி உடையுடன் வாழ்ந்தாகத் தெரிகிறது.65 சதுரகிரி மலையின் வடபாகத்தில் பலர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.66 சித்தர்களும் அவரவர்தம் ஆசிரமங்களும் மொத்தம் 207 என மலைவாகடம் குறிப்பிடுகிறது.67 விராலி மலையில் தொன்மையான சித்தர் முனி குடியிருப்பு இருந்தது. அம்மலையில் சுனையுண்டு. உதகமுண்டு68 என்று குறிப்பிடப்படுகிறது. விராலி மலை உச்சியில் கணேசர் கோயில், கல்லால மரம், ஓட்டை மண்டபம், புலி உறங்கும் வாய்க்கால், ஆயக்கால் மண்டபம், கரு நெல்லி போன்றவை இருக்கும். அந்த நெல்லி மரத்தடியில் தென் பாண்டிச் சித்தர் ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க வீற்றிருந்தார். அவ்வேளையில் பரஞ்சோதி முனிவர் அங்கு வந்து, பாண்டிச் சித்தரிடம் உபதேசம் பெற்றார்69 என்பர். விராலி மலையில் பாண்டிச் சித்தர் ஆயிரம் பேர் முன்னிலையில் வீற்றிருந்தார் என்பது மிகையாகும். சித்தர் முன் வீற்றிருப்போரெல்லாம் அவரின் மாணவர்கள் எனலாம். பரஞ்சோதி முனிவர் கி.பி. 1647ல் பாண்டி நாட்டில் வாழ்ந்தவர்70 என்பர். பொதிகை மலையில் வாயு மூலைப் பக்கத்தில் பெரிய அசோக மரத்தின் கீழே அமர்ந்து அறுபத்து மூன்று பேர்களுக்கு எண்வகையான யோகத்தைக் கற்பித்ததாகப் போகர் குறிப்பிடுகிறார்.71 கொங்கணர், தன்னைப் போகரின் மாணவர் என்றும் அவருடன் சேர்த்து 557 பேர்கள் மாணவராக இருந்ததாகவும்72 கூறக் காணலாம்.

இவ்வாறாக சித்தர்கள் பலர் மலைகளில் குடில் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தாகத் தெரிகிறது. ஆனால், சித்தர்களின் எண்ணிக்கை என்ன என்று கூறமுடியாத அளவுக்கு மிகுந்து காணப்படுகிறது. சித்தர்கள் பதினெண்மர் என்று கூறும் மரபு முறையானதாகத் தோன்றவில்லை. அந்த எண்ணிக்கை ஏதோ ஒன்றன் குறியீடு எனக் கொள்வதே சரியாகும். கீழ்க்கணக்கு, மேல்கணக்கு,புராணம் என்பன பதினெட்டாகக் கொள்ளப் படுதல் போன்று சித்தர்களும் பதினெண்மராகக் கருதப்பட்டிருக்கலாம்.

சித்தர்களில் ஆசிரியர் மாணவர்

சித்தர்களுக்குச் சித்தர் ஆசிரியராகவும் மாணவராகவும் இருந்தது தெரிய வருகிறது. ஒரு சில முறைகள், ஒரு சிலரின் தனித்தன்மையாக இருக்கும். அதனைப் பிறர் அறிய நேர்ந்தால், அவரிடமிருந்து அதைக் கற்றேன் என்றும், அவர் எனக்கு உபதேசித்தார் என்றும் கூறுகின்ற பண்பு சித்தர் களிடம் காணப்படுகிறது. அவ்வாறு கற்றுக் கொள்ளும் போது ஆசிரியர்மாணவர் என்னும் நிலையில் கற்கப்படுகிறது.

ஆசிரியர் மாணவர் ஆசிரியர் மாணவர்
நந்தி சிவயோகமுனி அகத்தியர் போகர்
சிவயோகமுனி காலாங்கி நாதர் தேரையர் யூகி முனி
காலாங்கி நாதர் போகர் போகர் கோரக்கர்
போகர் கொங்கணர் திருமூலர் காகப்புசண்டர்
போகர் புலிப்பாணி ரோமரிஷி இராமதேவர்
நந்தி திருமூலர் அகத்தியர் திருவள்ளுவர்
சிவன் திருமூலர் சட்டமுனி மச்சமுனி
திருமூலர் கொங்கணர் திருமூலர் பிண்ணாக்கீசர்

என்று, சித்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கொண்டிருக்கும் தொடர்பைக் கொண்டு ஆராய்ந்தால், அனைவரும் சமகாலத் தவர்கள் போலத் தோன்றும்.

சித்தர்கள் காலம் கடந்தவர்கள் எனக் கருதப் படுவதால், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவரோடு ஏற்பட்ட தொடர்பைக் குறிப்பதாகவே கருத வேண்டும். போகர்7000 என்னும் நூல், சித்தர்களின் தலைமுறை, பிறந்த நட்சத்திரம், தாய் தந்தையர், மொழி, சாதி போன்ற பல தகவல்களைக் குறிப்பிடுகிறது73. இவை நம்பக் கூடிய தகவல்கள் என்பதற்கு வேறு சான்றுகள் எதுவும் புலப்படவில்லை.

சித்தர்கள் குடும்பம்

சித்தர்கள் யோக நெறியில் முத்தி பெற்றவர்கள். மனைவி மக்கள் என்னும் பாச எல்லையைக் கடந்தவர்கள். துறவு நிலையடைந்தவர்கள் என்னும் கருத்துக்கு மாறாக, பதினெண் சித்தர்கள் எனக் குறிப்பிடப்படும் அனைவரும் இல்லற இன்பத்தில் ஈடுபட்டு மனைவி மக்களுடன் வாழ்ந்திருந்தார்கள் என்று கோரக்கரின் முத்தாரம் கூறுகிறது.74 (சித்தர்கள் குடும்பம் இணைப்பு 16)

போகர் என்னும் சித்தரைத் தவிர பிற சித்தர்களின் மனைவியர் 173 ஆகவும் மக்கள் 1867 ஆகவும் குறிப்பிடப் படுகிறது. அதிக எண்ணிக்கையில் மனைவியை உடையவ ராகப் பாம்பாட்டிச் சித்தர் (16) குறிப்பிடப்படுகிறார். அதேபோல் அதிக எண்ணிக்கையில் மக்களைப் பெற்ற மகராசனாக இராமதேவர் (200) குறிப்பிடப்படுகிறார். இத்தகவலும் உண்மையாகவும் உண்மையில்லாமலும் இருக்கலாம். உண்மையறிய சான்றுகள் இல்லை.
நம்நாட்டில் சமயத் தலைவர்கள், புலவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விடவும் அதிகமாகச் செவிவழிச் செய்தியே வழங்கப்படுகின்றன. அச்செய்திகளைச் சற்றும் ஆராயாமல் அப்படியே நம்பும் பழக்கம் நம்மிடையே மிகுந்து காணப்படுகிறது. இம்மயக்கத்திலிருந்து தெளிவடைந்து வரலாற்றை வரலாறாகப் பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்75 என்பதை ஏற்றுக் கொண்டு வரலாற்றுக்குரிய அடிப்படைச் சான்றுகள் திரட்டப்பட வேண்டும். சித்தர்களின் உண்மை வரலாறு வரையப்பட வேண்டும்.

சித்தர் பருவதம்

சித்தர்கள் மலைகளிலேயே தங்கள் குடிலை அமைத்துக் கொண்டு மருந்தாய்விலும் யோக நெறியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த மலை ‘சித்தர் பருவதம்’ என்று வழங்கப்படும். சதுரகிரி மலையையே சித்தர் பருவதம் என்பர். இம்மலையில் அனேக சித்தர்கள் வாழ்ந்ததாகச் சதுரகிரிமலை தலபுராணம் கூறுகிறது. சதுரகிரி மலையைச் சித்தர்கள் பல பெயர்களால் வழங்கினர். போதகிரி, பொதிகைகிரி, சூரிய கிரி, மயேந்திர கிரி, கும்ப கிரி, பரம கிரி, கயிலாயம் என்னும் வேறு வேறு பெயர்களால் குறிப்பிடும் போது, இடங்களைக் கண்டறி வதில் மயக்கம் உண்டாகிறது.

சித்தர் மரபில் பெண்

சித்தர்கள் என்றால் அவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள். காடு மேடு என்றும் பாராமல் மலைகளிலும் குகைகளிலும் வாசம் செய்வார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால், ஆண்களைப் போலவே பெண்களும் சித்தர்களாக இருந்திருக்கிறார்கள். ‘சுவாலை‘ என்னும் பெண் திருமூலர் மரபில் தோன்றிய சித்தராகக் கருதப்படுகிறார். திருமூலரின் மரபு வழி மாணவர்களில் ஒருவரான ‘சுவால மூர்த்தி’ என்பவர், சுவாலை என்னும் பெண்ணுக்குச் சித்தர் நெறியையும் யோக முறைகளையும் கற்றுத்தந்தவர் என்பர். சித்தர் நிலையை அடைந்திருந்த சுவாலையை, செகத்துவாசன் என்னும் மன்னன் கூடி தாய்மை நிலையை அடையச் செய்தான்77 எனத் தெரிவிக்கின்றார்.

சித்தநெறிகளைப் பெண்ணும் பின்பற்றலாம் என்பதும், சித்த நிலையை அடைந்த பின்னும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிகிறது.

சித்தர் தோற்றம்

சித்தர்கள் பல்வேறு தோற்றங்களில் இருந்துள்ளனர் எனத் தெரிகிறது. தாடியுடன் கூடிய சடைமுடியுடனும், நிர்வாண கோலத்திலும், லங்கோட்டோடும், வெளுத்த செம்மறியாட்டுத் தோலாலான வெள்ளைப் போர்வை யுடனும், புலித்தோலாலான ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும் காட்சியளித்துள்ளனர்.

உடை

அகத்தியர், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் காவியாடை அணிந்தது தெரியவருகிறது.

உடைமை

சித்தர்களிடம் வீரவட்ட சங்கிலி, லாட சங்கிலி, இரும்பு சங்கிலி, ஊசி போன்ற குறடு, வேல் போன்ற கைத்தடி, செய கண்டி, தாமிர பாத்திரம், திருவெண்ணீறு போன்றவையும் காணப்படுகின்றன.

சித்தர்கள் பயன்படுத்திய உணவுப் பொருள்கள் வருமாறு:

அரிசி : தினை அரிசி, மூங்கிலரிசி, வெப்பாலரிசி போன்றவை.
கறிகள்: சிவப்புக் கற்றாழை, கரு நொச்சி, கல்தாமரை, சிவப்பு நாயுருவி, சிட்லாங் கிழங்கு, காட்டுப் பிரண்டை போன்றவை.
கிழங்குகள் : காட்டுக் கருணை, ஆட்டுக் கால் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, தாமரைக்கிழங்கு, தேள் கொட்டிக் கிழங்கு, நிலப்புரண்டிக் கிழங்கு என்பன.
கீரைகள்: எலிக்காது கீரை, ஆத்துப் பசலை, இரத்த விராலிக் கீரை, கொக்குக் கீரை, பேய்ப் புடலைக் கீரை, நரிக்கீரை, வெள்ளைக் குண்டுமணிக் கீரை, நிலாவரைக்கீரை என்பன.
குடிநீர்: இலையுதிர் விருச்சிகமரத்திலான பாண்டத்தில் சுனைநீர் சேமிக்கப்பட்டு, அதில் பேய்ப் புடலை, அந்தர கொத்தான், தாலிமரத்தின் ஓலை, செந்நெருக்கன் வேர், வெள்ளைக் கல்யாணி மரப்பூ, கல் மதப்பூ, சிறு களாப் பூ, அத்தி விதை, வெப்பாலைப் பால் போன்றவை கலந்து ஊறிய பின்னர் உண்டனர். அந்நீரில், திகைப்பூண்டு, மருவமத்தன், மதிமயங்கி, சடகஞ்சா ஆகியவை கலந்த மதுபானமும் உண்டனர்.
பாத்திரங்கள்: எருமை விருச்சிக மரத்திலான தட்டுகள், ஜோதி மரத்திலான குவளைகள் பயன்படுத்தப் பட்டன.
பற்பொடி : ஜோதிப்புல் என்னும் மூலிகை பற்பொடியாகப் பயன்பட்டது.

மேலும் தவசு முருங்கை மனைக்கட்டை, சந்தன மரத்தில் பாய்ந்த புல்லுருவி பாய், ஏர் அழிஞ்சில் கைத்தடி, போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்று எம்.எம். ஜெயராமன் கூறுகிறார்.79

சித்தர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் சமவெளிகளில் காணப்படாத மலை நிலப் பொருள்களாக இருக்கக் காணலாம். இவர்கள் உண்ட கிழங்கு வகை உடலைப் பாதுகாக்கும் தன்மைகள் கொண்டவையாகவும், கீரை வகைகள் இரத்ததையும் உடல் தாதுப் பொருள்களையும் தூய்மைப் படுத்துவதுடன் வளர்த்துச் செழிப்படையச் செய்யக் கூடியவை என்றும் கூறப்படுகிறது.

ஆசனங்கள்

சித்தர்கள் தங்கள் உடலில் ஆற்றலை மேம்படுத்த உணவுகளைக் கையாண்டது போல, எட்டுவகையான யோக முறைகளைப் பயன்படுத்தும் போது, ஒன்பது வகையான இருக்கைகளை மேற் கொண்டனர். இந்த இருக்கைகள் ஆசனம் என்றும் யோகத்திற்காகப் பயன்பட்டதினால் யோகாசனம் என்றும் கூறப்படுகிறது. யோகாசனங்கள் மொத்தம் 126 எனச் சித்தர் நூலுள் கூறப்பட்டாலும் இவற்றுள் ஒன்பது ஆசனங்கள் சிறப்பானவையாகக் கூறப்படுகின்றன. அவை,

1. கோற்றிகம்; 2. சிங்கம்; 3. பத்திரம்; 4. முத்து 5. கோமுகம்; 6. வீரம்; 7. பத்மம்; 8. மயூரம்; 9. சுகம்;80 என்பனவாகும்.

சித்தர் சமாதி

சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர். சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.

அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன. சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது. ஆனால் புறநானூற்றுப் பாடலில் அதற்கான காரணம் விளங்கக் கூடியதாக அமைந்திருக்கக் காணலாம்.

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளியேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பிரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளு மிலவே”81

தமிழர்கள் வழிபடுமிடங்களெல்லாம், போர்க்களத்து வீர மரண மெய்திய வீரர்களின் நடுகல் அல்லாது, நெல்லைத் தூவி வழிபடும் தெய்வ வழிபாடு என்பது இல்லை என்கிறது. தமிழர்களின் பண்டைய வழக்கின்படி தெய்வ வழிபாடு என்பது இல்லை. எல்லா வழிபாட்டு இடங்களும் நினைவுச் சின்னங்கள் என்பதே பொருந்தும். சில இடங்களின் வரலாறு மறைந்து இருந்தாலும் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து நடைபெறும்.

புறநானூற்றுச் செய்தியின்படி வீரர்களுக்கு மட்டுமே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதாகக் கருத முடியாது. புறநானூறு வீரத்தையும் வீரர்களின் புறச் செயல்களையுமே குறித்து இயற்றப் பெற்ற இலக்கியம் என்பதால், நினைவுச் சின்னங்கள் தோன்றுவதன் அடிப்படைகளுள் ஒன்றினைப் புறநானூறு கூறுவதாகக் கொள்ளலாம்.

கோயில்கள்

இறந்த மன்னர்கள், மெய்யறிவாளர்கள் முதலியோரின் நினைவிற்கு அறிகுறியாக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது கட்டப்படும் கோயில் பள்ளிப்படை அல்லது கல்லறைக் கோயில் அல்லது சமாதிக் கோயில் எனப்படும். இச்சமாதிகளுக்கருகில் அவர்கள் வழிபட்ட தெய்வங் களுக்கும் கோயில்கள் எழுப்பப்படுவதுண்டு.

வடார்க்காடு மாவட்டம் சோழபுரம் என்னும் ஊரில் இராசாதிய சோழன் தன் தந்தையின் புதைக் குழிக்கருகில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினான். தொண்டை மானாடு (சித்தூர்) என்னுமிடத்தில் முதலாம் ஆதித்த சோழனைப் புதைத்த சவக்குழிக்கருகில், அவன் மகனான முதலாம் பராந்தகன் ஆதீத்தீசுவரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். முதலாம் இராசராசன் தன்மனைவி, பஞ்சவன் மாதேவியார் என்பவருக்காகப் பழையாறையில் அவள் புதைக் குழிக்கருகில் பஞ்சவன் மாதேவீசுவரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். இவ்வாறு கூறப்படும் சான்று களிலிருந்து கோயில்கள் பண்டைய திராவிடரின் கல்லறையிலிருந்தே தோன்றியவை என்பதும் அக்கல்லறையின் புனிதச் சின்னமாகக் கருதப்பட்ட பொருள்கள் சிவன் என்னும் உருவில் வழிபாடு செய்யப்பட்டுப் பின்னர் ஆரிய ருத்திரனோடு திராவிடச் சிவன் கலந்து தொல்கதைகளின் நாயகனாகி விட்டதால் அவை தொல்கதைகளைச் சித்திரிப்பனவாக மாறிவிட்டன என்பதும் தெளிவாகிறது.

தலமரங்கள்

தொல்காலத்து மக்களுக்கு வெட்டவெளி வாழ்க்கை இன்பமயமாகப் பட்டது. வெட்டவெளியிலுள்ள மரம் அவர்களின் இடுகாட்டின் இடமாயிற்று. எனவே தான் அதனடியில் புதைந்து அதனையும் தம் மூதாதையாரைப் போலவே புனிதச் சின்னமாகக் கொண்டு வணங்கினார்கள். ஆரியம் புகுந்தபின் இஃது ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு தனி மரமாகப் பிரிக்கப்பட்டுப் பின்னர் அக் கடவுளின் சின்னமாகக் கொள்ளப்பட்டன. (இந்தியக் கலை வரலாறு. பக். 317337) என்று கலை வரலாற்று ஆய்வு தெரிவிப்பதால் சித்தர்சமாதிக்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.

தமிழ்ச் சமுதாயத்தில் ஆற்றல் மிக்க மனிதர்களுக்கும் சிறப்புக்குரிய முன்னோர்களுக்கும் சமூகத்தொண்டில் முனைப்புடனிருந்தவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் தோன்றின. அவ்வாறு உருவானதே சித்தர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் திருக் கோயில்கள். யோகத்தினால் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இருக்குமிடங்களிலும் அடக்கமாகிய இடங்களிலும் அவர்களின் ஆற்றல் ஒளிக் கதிர்கள் சூழ்ந்திருக்கும். அந்த ஆற்றல் ஒளிக்கதிர்கள் எவர் மீது பட நேர்ந்தாலும் அவர்களுக்கு உற்ற உடல்துன்பம் மனத்துன்பம் போன்றவை நீங்கிவிடும் என்பது யோகியர்களின் கருத்து. அதனால், யோகியர்களும் சித்தர்களும் அடக்கமாகிய இடங்களுக்கு மக்கள் செல்ல நேர்ந்து, வழிபாட்டு நிலையங்களாக மாறின. ஆரம்ப காலத்தில் இருந்த சித்தர் என்னும் நினைவு மாறி தெய்வம் என்னும் நினைவு தோன்றின. காலப்போக்கில் சித்தன் சிவனாகி, சிவன் சிவமாகி சிவம் தெய்வமாகி இருக்கிறது. அதேபோல் சமாதி இல்லம் என்றாகியும் சித்தர் தலைமையைப் பெற்றதால் தலைவன் கோ என்றாகி, கோ இருக்குமிடம் கோவில் என்று மாற்றமடைந்திருக்கிறது.

இவற்றை காரணங்களாகக் கொண்டு உண்மையை ஆராய்ந்ததால் சிவன் கோயில்களுக்கும் சித்தர் சமாதிக்கும் உரிய தொடர்பும் காரண காரியத்துடன் விளங்கக் கூடியதாக இருக்கிறது.

சித்துகள்

‘சித்து’ எனப்படும் இயற்கை மீறிய ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. இதன் அடிப்படையில், ‘சித்துகள் கைவரப் பெற்ற அனைவரும் சித்தர்கள்’ என்று தீர்மானிக்க முயல்வது பொருந்தாது. அது உண்மைக்கு மாறானதுங்கூட.

சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்று வடமொழியில் கூறுவர். இவற்றைத் தமிழில் முறையே ‘அணுவைப் போல் நுண்மையாதல்’, ‘மிகப் பெரியதாதல்’, ‘மிக நுண்மையாதல்’, ‘மிக எடையாதல்’, ‘எங்கும் செல்லும் ஆற்றல்’, ‘எண்ணியது எய்தும் ஆற்றல்’, ‘எதையும் ஆக்கும் ஆற்றல்’, ‘எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்’ எனக் கூறலாம்.

இராமலிங்க சுவாமிகள் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்துக்களை முப்பெரும் பிரிவுகளாக்கிக் கூறுகின்றார். மரபாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளும், தேகத்தைக் கல்பசித்தி செய்தலும் கரும சித்தி எனப்படும். இச்சித்துகளின் கால அளவு மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் ஆண்டுகள் வரை என்பர். பிராண கல்பதேகி புதைந்த தேகத்தைக் கெடுமுன் உயிர்ப்பித்தல் போன்ற அறுபத்து நான்கு சித்திகளை யோக சித்தி என்பர். இது பிற சித்துகளை உள்ளடக்கியது; பிற சித்திகளைக் காட்டிலும் பெருமை வாய்ந்தது. சித்துகளின் எண்ணிக்கை பலகோடி எனும் குறிப்பு திருவருட்பாவில் பல இடங்களில் காணப்படுகிறது.

சித்துகளின் எண்ணிக்கை வேறுபட்டாலும் பொருள் வேறுபடவில்லை. ‘சித்து‘ என்றால், ‘இயற்கை கடந்த செயல்‘ என்றே எல்லா இடங்களிலும் பொருள் படுகிறது. இயற்கைச் செயல்களுக்கு எண்ணிக்கை இல்லை. அது போலவே, இயற்கை கடந்த செயல்கட்கும் பட்டியல் வரைய இயலாது. என்றாலும், சித்துகள் அனைத்தையும் பொதுவாக எண்வகையாக்கியே கூறுகின்றனர்.82

சித்தாடும் வல்லமையைப் பாம்பாட்டிச் சித்தர் பின்வருமாறு கூறக் காணலாம்.

கட்டுக் கடங்காத பாம்பைக் கையிலெடுத்து ஆட்டுவோம். இந்திரன் உலகத்தை இங்கே காட்டுவோம். தூணையும் துரும்பாகவும் துரும்பைப் பெருந்தூணாகவும் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ஆக்கிக் காட்டுவோம். எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிவோம் ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம். மண்டலத்தைக் கையால் மறைப்போம். வானத்தை வில்லாய் வளைப்போம். நெருப்புக்குள் மூழ்கி விடுவோம் நீருக்குள் முழ்கி மூச்சை அடக்குவோம். பாயும் புலியைத் தாக்கி விடுவோம். இப்பெரிய உலகைச் செம்பொன்னாக மாற்றுவோம். செங்கதிரைத் தண் கதிராகச் செய்வோம். இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்.

அறுபத்து நான்கு கலைகளையும் அறிவோம்; அதற்கு மேல் ஒரு கலையும் அறிவோம்; சீறும் புலி, யானை, யாளி, சிங்கம் முதலான எல்லாம் எங்கள் சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம். வீறுபெற்ற கடவுள்களை எங்களோடு விளையாடச் சொல்வோம்.83 என்று ‘சித்தி‘ பெற்ற சித்தர் தங்களின் வல்லமையை உரைக்கக் காண்கிறோம். சித்தி என்பது, வெற்றியென்னும் பொருளில் இங்கே வழங்கப் பெறுவது அறியத்தக்கது. தங்களின் ஆற்றலையும் முயற்சியையும் கொண்டு பெற்ற வெற்றியை உரைப்பதாகக் கொண்டால் அது சாலச் சிறப்புடையதாக இருக்கும்.

சித்துகள் அறுபத்து நான்கெனவும் அதற்கும் அதிகமான சித்துகள் உண்டென்றும், அச்சித்துகளைக் கைக்கொண்டவர் வல்லமையும் மேலே காட்டப் பெற்றன. சித்துகளின் விளக்கங்கள் புராண இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங் களிலும் காணக் கிடைக்கின்றன.

தஞ்சை மன்னன் சரபோஜி அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அதற்கு பட்டர் பௌர்ணமி என்றார். ஆனால் அன்றைய தினம் அமாவாசை திதி என்பதை அறிந்த மன்னர் இன்று பௌர்ணமி திதியானால், நிலவைக் காட்ட முடியுமா? என, அவரும் காட்டுவதாகக் கூறி, காட்டியதாகக் கூறுவர். அதனால், இயற்றப்பெற்ற நூல் அபிராமி அந்தாதி என்பர்.84

“காரப்பா திகைப்பூண்டு தனைக்க ருக்கி
கருவான ஏரண்டத் தெண்ணெய் விட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத் தாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சங் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே”85

என்று மை செய்யும் முறையைக் கூறி அந்த மையை அமாவாசை இருட்டில், திலக மிட்டுக் கொண்டு, நாலு திக்கிலும் பார்த்தால் அழகான மதி தோன்றுவது தெரியும். அதே வேளையில் இடது கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் சூரியன் தெரியும். ‘நாரான மானிடர்க்கு அப்படியே காணும்’ என்றதனால்86 இந்த சித்துமுறையின் மறுவடிவமே அபிராமி பட்டர் அமாவாசைத் திதியைப் பௌர்ணமி திதி என்றுரைத்த தாகக் கருதலாம்.

இறந்தவனை எழுப்புதல்

திருநாவுக்கரசர், பாம்பு தீண்டி இறந்தவரை எழுப்பியதாகக் கூறப்படும். ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்மே’ என்ற பாடல் சான்றாக அமையும். அவ்வகைச் சித்தொன்றும் சித்தர்கள் ஆடிய சித்தில் காணப்படுகிறது.

“காரப்பா அரவினுட நஞ்சுப் பித்துங்
கருவாக மத்தித்து ரவியில் வைத்து
தீரப்பா ரெண்டு பத்து நாளைக் குள்ளே
சிவசிவாஎன் சொல்வேன் கருவாய் நிற்கும்
ஆரப்பா அறிவார்கள் ஐங்கோ லத்தில்
அழுத்திமிக மத்திக்க மையாய்ப் போகும்”87

என்னும் மையைப் பாம்பு கடித்து இறந்தவர் கண்ணில் தீட்டி தலையில் ஒரு தட்டு தட்ட விஷம் இறங்கி எழுந்து நிற்பார் என்பதிலிருந்து, சித்துகளோடு தொடர்புடைய நிகழ்ச்சியே திருநாவுக்கரசர் செய்தது எனத் தெரிகிறது. மேலும் திருநாவுக்கரசரைக் கல்லைக் கட்டி கடலில் வீசியதும்88 ஒருவகைச் சித்துவினால்தான் தண்ணீரில் மூச்சடக்கியிருந்து வெளியே வந்தார் எனக் கருதலாம்.

திருவிளையாடற் புராணங் கூறும் நரிபரியானதும் பரி நரியானதும் சிவபெருமானின் திருவிளையாடலாகக் காட்டப் பெறும். அதுவும் ஒரு வகைச் சித்து எனக் கூறப்படுவதைக் காணலாம்.

“வாங்காமல் நரிபரியாஞ் சித்து சொல்வேன்
வணக்கமுடன் வாங்கினதோர் தைலந் தன்னை
தீங்கில்லாப் புழுகொடு சவ்வாத சேர்ந்து
சிவசிவா மத்தித்து ரவிக்கண் ணாடி
பாங்காக பரி நரியாய்ப் பாரு பாரு
பறக்கிறதோர் குதிரையைப் போல் கண்ணில் காணும்”89

பாரதத்தில் சூரியனைக் கிருஷ்ணன் மறைத்ததும், இராமாயணத்தில் ஜானகி அக்கினிப் பிரவேசம் செய்ததும், அனுமன் சஞ்சீவி மலையைக் கையில் சுமந்து வருவதும் சித்தர்கள் கூறும் சித்துகளின் வடிவங்களாகும். புராணங்களின் பாத்திரங்களை உயர்த்திக் காட்ட வேண்டுமென்பதற்காகக் காட்டப்பட்ட காட்சிகளாகக் கொள்வதில் தவறுண்டாகாது.

நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது கேட்ட, கற்ற ஒரு செய்தியைப் புராணம் படைப்போரும் இலக்கியம் படைப்போரும் தத்தம் படைப்புகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்திக் காட்டுவது படைப் பாளர் கொள்கைக்கு ஏற்புடையதே என்பதால், சித்தர்களின் சித்து முறைகளின் தாக்கம் புராணங்களில் இருப்பதை மறுப்பதற்கில்லை. காரணம் சிவமதம் சித்தர்கள் மூலமே உருவாகிறது என்பதை வேறொரு பகுதியில் ஆராயப் படுகிறது.

சித்தர் நெறி

சித்தர் நெறி சமயம் கடந்தது. அதே சமயத்தில் சமயத்தோடு தொடர்பு கொண்டது. என்றாலும், சமயம் வேறு, சித்த நெறிவேறு. சித்த நெறி சமயத்துள் இருக்கிறது. ஆனால், சமயநெறி சித்த நெறியில் இல்லை.

“சித்தர் நெறியை மதங்களோடு இணைத்துப் பேசலாம். ஆனால், மதங்களில் உயர்வு தாழ்வு காண்பது சித்தர் நெறிக்குப் பொருந்தாச் செயல். சித்தர்கள் தங்களுடைய இறையனுபவத்தைத் தம்மைச் சுற்றியுள்ள மக்கள் சார்ந்துள்ள மதக் கோட்டுபாடுகளின் வடிவமைப்பில் சொல்லி யிருக்கிறார்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தங்கள் அனுபவங்களைச் சமயச் சொற்களில் சொல்லியிருக்கின்றார்கள். சித்தர்கள் பயன் படுத்திய சொற்களைக் காரணம் காட்டி அவர்களையும் அச்சமய எல்லைக்குள் அடக்க முற்படுவது சரியாகாது. எந்த மதத்தையும் பண்பாட்டையும் சாராமல் தனித்தியங்கும் ஆற்றலுடைய பொது நெறியே சித்த நெறி (Encyclopaedia of Americana Vol.19. p.673) என்று சித்தர் நெறியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சித்தர் நெறியும் சமய நெறியும்

சித்த நெறியையும் சமய நெறியையும் பிரித்தறியாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதனால் இந்த நிலை ஏற்படுகிறது. ‘இறை’ என்ற ஒன்றனைப் பற்றிய சிந்தனையில் சித்தமும் மதமும் வேறு வேறு திசையில் நிற்பன. அச்சொல்லைப் பயன்படுத்துவதில் மட்டுமே ஒரே நிலையிலிருந்தாலும் ‘இறை’ எனச் சுட்டிக் காட்டுவதில் வேறு வேறானவை.

“தத்துவமும் மதமும் கலந்து உருவானது சித்தர் நெறி என்று மேலை நாட்டார் கருதுகின்றனர்.

ஐம்பொறிகளின் வழிவரும் புறஉலக அனுபவம், வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உடையதாக இருக்கிறது. எனவே, அதனை ஒதுக்கிவிட்டு உள்ளுணர்வில் சித்தனையைச் செலுத்தி உலகியலை விலக்கி இறைவனையே எண்ணி யிருப்பவர்கள் சித்தர்கள்”90

என்று சமய நெறியிலிருந்து சித்தர் நெறி வேறானவை என்பது விளக்கப் பட்டுள்ளது.

சித்தர் நெறியும் உலக மதங்களும்

“சித்தர்கள் மேற்கொண்ட யோகம் ஞானம் ஆகிய இரண்டுமே சமய எல்லைகட்கு உட்பட்டவை அல்ல. இவை இரண்டுமே நேர்க்கோட்டு நெறிகள். இடையில் தடைசெய்ய எவருமில்லை. ஆலயம், உருவ வழிபாடு, சடங்குகள் முதலியவற்றால் சமயங்கள் வேறுபடுகின்றன. இவ்வேறு பாடுகள் முரண்பாடுகளாகி மக்களிடையே கசப்பையும் வெறுப்பையும் உருவாக்கிப் பூசலையும் போரையும் விளைவித்திருக்கின்றன. சமய எல்லையைக் கடந்து விட்டால் வேறுபாடுகள் இல்லாத ஒருமை நிலையைக் காணலாம். யோகமும் ஞானமும் சமய எல்லைக்கு அப்பாற் பட்ட நெறிகள். இவ்விரு நெறிகளையும் பொதுப் பெயரால் சித்தர் நெறி எனலாம். சமய எல்லையைக் கடந்து நின்று இறையின்பம் காண முயன்றவர்கள் எல்லா மதங்களிலும் நாடுகளிலும் உண்டு. கிறித்துவத்தில் ‘மிசுடிக்குகள்’ என்றும் சீனத்தில் ‘தாவோக்கள்’ என்றும் இசுலாத்தில் ‘சூபிகள்’ என்றும் உரைக்கப்படுகின்றனர். இவர்கள் காட்டிய நெறிகளிடையே ஒரு பொதுத்தன்மை காணப்படுகிறது. எனவே சித்தர் நெறி என்ற பொதுப்பெயரில் இவர்கள் அனைவரின் கோட்பாடுகளையும் அடக்கலாம்.

சித்தர்கள் உலகெங்கும் இருந்தனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் வெவ்வேறு பெயர்களை உடையவர்கள்; வேறுபட்ட இறைக் கோட்பாடும் பாரம்பரியமும் பழக்க வழக்கங் களும் உடையவர்கள். அவர்களின் அடிப் படையான உணர்வுகளும் செயல்களும் எல்லா நாட்டுச் சித்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியன வாக இருக்கின்றன. உலகியலை வெறுத்து ஒதுக்குவது அல்லது பெரும்பான்மையோரின் இயல்புக்கு மாறாக உலகியலை நோக்குவது என்பது இவர்களிடையே காணப்படும் பொது நோக்கு.”91

என்னும் கருத்தின் படி, உலக மதங்களில் குறிப்பிடப்படும் சித்தர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்பு நோக்கிப் பொதுமைக் கருத்து கண்டறியப்பட்டது.

சித்தர்களின் குறிக்கோள்

சித்தர்கள், இந்த உலகத்திலுள்ள பொருளியல்சார் வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள். தாங்கள் எண்ணிய ஒரு இலக்கை நோக்கிச் சென்று அதன் பயனை அறிந்து ஆனந்தம் கொள்பவர்கள்.

“கால இட எல்லைக்குள் அடைபடும் இவ்வுலகையும் அதிலுள்ள பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவதும் கட்டுப் படுத்துவதும் அதனால் மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள் அல்ல. இவற்றை யெல்லாம் கடந்து மேல் செல்வதே அவர்களின் குறிக்கோள்”92
சித்தர்கள் தங்களின் நோக்கங்களை ஒரு எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டு முடங்கிவிடாமல், மேலும் மேலும் கடந்து சென்று புதிய புதிய அனுபவங்களைப் பெற்று ஆனந்தம் அடைபவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

“பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துறந்து
மதமற்று எனதுயான் மாற்றிவிட்டு ஆங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே”93

என்னும் திருமந்திரச் செய்யுள், மூன்று புறச்சமய நெறிகள் பழுதானவை எனக் கண்டறிந்து, அவற்றின் நெறிமுறை களைக் கைவிட்டு விட்டு, பாசம் என்னும் இருளையும் விலக்கிவிட்டு, ஆணவத்தையும், யான் எனது என்னும் செருக்குகளையும் கழியவிட்டு விட்டு, இதமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவ்வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் சித்தர்கள் என்கிறது.

சித்தர்களும் சமுதாயமும்

சமுதாய நெறிமுறைகள் என்னும் இலக்கண வரையறைக்கு அப்பாற் பட்டதாக இருக்கும் சித்தர்களின் நெறிகளில், சமுதாயத்தின் சீர்த்திருத்தில் சித்தநெறிக்கு என்றொரு தனித்த இடம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
‘மருந்து, மந்திரம், யோகம் முதலியவற்றால் உயர்ந்த இவர்கள் மருந்து, மந்திரம் முதலியன கண்ட காரணத்தால் இவர்களைப் புதியன கண்டோர் (Inventors) எனலாம். சாதி, மதம், சமயம், சடங்கு முதலியனவற்றைச் சாடியவர்கள் ஆதலின் இவர்களைச் சமுதாயச் சீர்திருத்த வாதிகள் (Social Refromers) எனலாம்.94 சித்தர்கள், சமுதாயத்திற்காகப் புதியன கண்டறியும் சீர்த்திருத்தவாதிகள் என்பதால், அவர்களையும் இச்சமுதாயத்தின் அங்கமாகவே கருதலாம்.

சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து மூடநம்பிக்கைகளுக்கு இடந்தராதவர்கள். சடங்குகளையும், சடங்குகளோடு தொடர்புடைய வழிபாடுகளையும் ஏற்காத வர்கள். தங்கள் வாழ்க்கையில் கண்டறிந்த உண்மை களைத் தெளிவாக எடுத்துரைப்பதுவே இவர்களின் நோக்கம். இவர்கள் தத்துவ ஞானிகள்; மெய்ஞ்ஞானிகள்; யோகிகள்; மருத்துவர்கள் எனும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.

சித்தர் ஒழுக்கம்

இயற்கை நிகழ்வான மரணத்தைத் தவிர்ப்பது சித்தர் நெறியின் நோக்கமாகும். அதனைத் தொடர்ந்து அமைந்ததே சித்தர் ஒழுக்கமுமாகும். உடல் உயிர் ஆகிய இரண்டிலும் மாசு என்னும் குற்றம் நீங்கினால் மரணம் தவிர்க்கப்படும் என நம்பினர். வாழ்வதும் சாவதும் யார் கையிலும் இல்லை. அது நம்கையில்தான் இருக்கிறது என்று அறிந்தனர்

“சாவதும் வாழ்வதும் நம்மால் தானே”95

.என்று வினவியவர்கள், உடம்பின் அசுத்தம் அதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி”96

என்றவர்கள், அந்த உடம்பிலிருந்த மாசுகளை நீக்கிவிட்டு, உடலை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்பமுறை யால் கண்டறிந்தார்கள்.

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”97

அதன் பயனாக உடம்பு வளர்ந்தால், உயிரும் உடன் வளர்ந்தது எனலாம். உடம்பையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டவர்கள் பலர் இருந்திருக்கக் கூடும். பலரும் பல வழிமுறைகளை மேற்கொண்டிருக்க, அந்த வழிமுறைகளைத் திருமூலர் திருத்துகின்றார்.

“அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கில்லை”98

ஐந்து புலன் உணர்வுகளையும் அடக்கு என்பது அறிவுடைமை ஆகாது. அவ்வாறு அடக்கினால், நாம் தேடுகின்ற மூலப்பொருளாகிய பரம்பொருள் அங்கே காணப்பட மாட்டாது என்று விளக்கக் காண்கிறோம்.

“அஞ்சு பஞ்ச பூத மறிந்தா லனித்தியம் போம்
அஞ்சு வசப்படுவ தாண்டனில் அஞ்சும்
கண்டறி வோர் ஞானக் காட்சி மதி நினைவு
விண்டறிய லாமே விதி”99

ஐந்து பூதங்களையும் அறிந்தால் மரணம் போய்விடும். அது ஓராண்டுக்குள் நிறைவேறும். ஐந்து பூதங்களையும் கண்டறி கின்றவர்கள் ஞானம் பெற்று, அறிவு தோன்றி என்றும் இருக்கும் நிலையை அடையலாம் என்று ஒழுக்க நெறிக்கு விதி படைக்கக் காண்கிறோம்.

“சாகாமல் இருப்பதற்குக் கல்வி யுண்டு
சாக்காடு கொள்வதற்கு விபர முண்டு”100

சாகாத நிலையைப் பெறுவதற்குரிய அரிய கல்விமுறை சித்தர்களால் கண்டறியப் பட்டது. கல்வியாளன் என்பவன் மரணத்தை வெல்லும் வழிமுறைகளைக் கற்றவன் என்றே கருதப்பட்டதால், கற்றவன் மீண்டும் பிறப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் திருவள்ளுவர், கற்க, நிற்க அதற்குத் தக101 என்றார்.

சித்தர்கள் மேற்கொண்ட ஒழுக்க முறையில், ‘பொய்ம்மை மொழியாது, வாய்மை வழி நடத்தல், சூது, வாது, கபடு, தந்திரம் இவைகளை அகற்றிவிட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மைகளைச் செய்வது, சான்றோர் களைப் பணிவது, ஆன்றோர் வகுத்த நெறியின் படி ஒழுகுவது102 ஆகியன சித்தர் ஒழுக்கத்தில் இடம் பெறக் காணலாம். இந்நெறிகள் அனைத்தும் குறள் கூறும் நெறிகளுள் அடங்கியிருப்பதும் கருதத் தக்கது.

சித்தர்கள் ஆத்திகரா? நாத்திகரா?

‘கடவுள் நம்பிக்கை‘ என்றொரு பொதுவான அளவு கோலைக் கொண்டு மக்களை ஆத்திகர், நாத்திகர் எனப் பிரிப்பர். சித்தர்களை எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கொள்வது? கடவுள் உண்டு என்று நம்புவதால் சித்தர்களை ஆத்திகர் எனலாம். வேதம், வேதச் சடங்குகள் அனைத்தையும் சாடுவதால் அவர்களை நாத்திகர் எனலாம். ‘கடவுள் உண்டு‘ என்ற கொள்கையில் சித்தர்கள் வேறுபடவில்லை. வேதங்களின் நம்பிக்கையில் சிறிது வேறுபடுகின்றனர். காலத்தால் முற்பட்ட சிவ வாக்கியர், அகப் பேயார், பாம்பாட்டியார் போன்றோர் வேதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வேதத்தின் சிறப்பை மறுத்து நிற்கின்றனர். காலத்தால் பிற்பட்ட கடுவெளிச்சித்தர் ‘வேத விதிப்படி நில்லு‘ என வலியுறுத்தி வேத நெறிக்கும் சித்தர் நெறிக்கும் இடையே சமரசம் காண முயல்கின்றார்.103

ஆத்திகம், நாத்திகம் என்னும் இரு வேறு நிலைகளும் வேதத்தை ஏற்பதையும் வேதத்தை மறுப்பதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதால் வைதீகச் சடங்குகள், மூடப்பழக்க வழக்கங்கள் என்பதெல்லாம் ஆத்திக நாத்திகப் பாகுபாட்டிற்குள் வரவில்லை போலும்.

“அள்ளியிடவே குணமா மென்று சித்தர் வேதம் உரைப்பதுவே”
“மாணாய்ப் பிறப்பை யறுத்திடுவோன் வகுத்த சித்தர் நன்மொழியே”
“சித்தர் மாமறை கூறு மறிந்து”

என்றும், சித்தர்கள் வகுத்த நெறியை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியிருப்பது, சித்தர் வேதத்தைக் குறிப்பிடுவதாகும். அதை விடுத்து, வடமொழி நூலை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியதாகக் கொள்வதும், சித்தர்களைப் பற்றிய ஆய்வுக்குள் புகுத்துவதும் முறையன்று.

வேதம் என்னும் சொல், வடமொழி நூல்களில் மிகவும் பழமையான இருக்கு வேதத்திலும், எசுர் வேதத்திலும் புற்கட்டு என்னும் பொருளைத் தருவதாகவே அமைந் திருக்கிறது. பாரதப்போர் நிகழ்வதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் ‘நான்மறை’ என்னும் சொற்றொடர் காணப் படுகிறது. வடமொழியில் வேதங்கள் தோன்றுவதற்கு முன்னரே நான்கு வேதம் என்பது தமிழில் காணக் கூடியதாக இருக்கிறது. அவை ‘மறை’ என்னும் பெயரால் வழங்கியும் வந்திருக்கிறது என்று மறைமலையடிகள்ஏ தெரிவிக்கின்றார்.

எனவே, வேதம் என்பதும் நான்மறை என்பதும் வேற்று மொழிக்கே உரியதாகக் கருதிக் கொண்டு, சித்தர்களுக்கும் அவற்றுக்கும் தொடர்புபடுத்திக் கூறப்படுவதும் முறையன்று.

சித்தர்களும் கடவுளும்

சித்தர்கள் கூறும் தெய்வத்துக்கும் மதங்கள் கூறும் தெய்வத்துக்கும் சொல் ஒன்றாக இருந்தாலும் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆலயங்களிலும் வேறு சில இடங்களிலும் காணப்படும் வடிவங்கள் தெய்வத்துக்கு உரியதா? என்றால் பதில் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.

“பாணி யென்ற தெய்வமதைக் கண்ட துண்டோ”104

என்பது முகமதியர் ஒருவரைப் பார்த்து சித்தர் கேட்கும் கேள்வியாக அமைகிறது. தெய்வம் தண்ணீர் வடிவமாக இருக்கும் எனக் கருத நேரிடுகிறது. தண்ணீர் வடிவத்தில் தெய்வத்தை யாரும் கூறியதாகத் தெரியவில்லை.
மனிதன் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ வேண்டுமானால் காற்று வேண்டும். காற்றே உயிரினங்களைக் காக்கிறது. உயிரினங்களைக் காப்பது, கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.

“காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”105

என்று, காற்றைப் பிடித்தால் மரணத்தை வெல்லலாம் என்பர்.

மூக்கின் வழியாக உடம்பினுள் செல்கின்ற காற்று இடது மூக்கின் வழியாக 16மாத்திரை அளவு உள்ளே இழுத்து, 64மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி, வலது மூக்கின் வழியாக 32மாத்திரை அளவாக வெளியில் செலுத்தினால்106 உடம்பினுள் இருக்கின்ற சிவமாகிய உயிர் வளரும்107 இந்த நிலையை அடைந்தவர் சித்தரும் முத்தரும் ஆவர். அவர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை108 இந்த முறையில் பயிற்சி பெற்று மரணத்தை வெல்லும் நிலையை உணர்த்துவது திருக்கடவூரில் வீரட்டக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் நிலையாகும்109 மேலும், சராசரி மனிதனின் மூச்சுக் காற்று ஆறு விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் அறுபத்திரண்டு ஆண்டுகளும், எட்டு விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் ஐம்பது ஆண்டுகளும், ஒன்பது விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் முப்பத்து மூன்று ஆண்டுகளும் வாழ் வார்கள்110 என்று கணிக்கப் பட்டிருப்பதனால் மூச்சுக் காற்று வெளியே செலுத்தும் அளவு கூடினால் வாழ்நாள் குறைந்தும், வெளியே செல்லும் காற்றின் அளவு குறைந்தால் வாழ்நாள் கூடும் என்று கணித்து காற்றைப் பிடிக்கும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.

காற்றைப் பிடிக்கும் கலையை, மாலை வேளையில் மேற் கொண்டால் உடம்பிலுள்ள கபம் நீங்கும். நண்பகலில் மேற்கொண்டால் வாத நோய்கள் நீங்கும். வைகறையில் மேற்கொண்டால் பித்த நோய்கள் நீங்கும். இம்மூன்று வேளையிலும் தொடர்ந்து மேற்கொண்டால் நரை, திரை நீங்கி இளமை தோன்றும். காற்றின் பயனை அறிந்தே காற்றைக் கடவுள் என்றும் கூறுவர்.

“நாடான நாடதனிற் கடவுள் என்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தார் அல்லாது வேறொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அது அகன்றால் அகிலம் அழிந்து போகும்”111

காற்றுதான் இந்த உலகம் உய்ய காரணமாக இருக்கிறது. காற்றைத்தான் கோடான கோடி தெய்வமாகக் கூறினார்கள். காற்றைத் தவிர தெய்வம் வேறில்லை என்றும், காற்றே தெய்வமாகக் கருதப்பட்டது; இதுவே சித்தர்களுக்கும் உடன்பாடானது என்றும் கருதலாம்.

காற்றையும் நீரையும் சித்தர்கள் தெய்வமாகக் கருதினர் என்று முடிந்த முடிவாகக் கூறிவிட முடியாது. காற்றும் நீரும் இரண்டு பூதங்களாக அமைவது. பஞ்சபூதங்கள் ஐந்தும் சேர்ந்ததே உடல் என்பது சித்தர் கொள்கை. இவ்வைந்தில் ஒன்று இல்லா விட்டாலும் உயிர் உடலில் தங்காது என்று கூறப்பட்டது. அவ்வாறு இருக்க, காற்று, நீர் ஆகிய இரண்டு மட்டும் தெய்வம் என்பது சித்தர் வகுத்த மருத்துவக் கோட்பாட்டுக்கு மாறானதாக அமையும். காற்று என்றும் நீர் என்றும் கூறுவதில் ஏதோ மறைபொருள் இருப்பதாகத் தோன்றுகிறது.

சித்தர்கள் கூறும் இறைவன்

சித்தர்கள் கூறும் இறைவன் வெளியில் இல்லை; உடம்பின் உள்ளே இருக்கிறது. பிறப்பும் இறப்பும் தரும் இறைவன் வாழும் இடம் நம் தலையின் உச்சியாகும். உடம்பிலுள்ள நாதம், விந்து இறைவன் உருவமாகும்112 நமது உடம்பில் மூலாக்கினியாக வளர்ந்து எழுந்து சுழு முனை வழியாக மேலேறி தலையின் உச்சியில் சிவனெனவே நிற்கும்.113 நாதத்தில் விந்துவும் நாதவிந்தில் சிவமும் சக்தியும் தோன்றும். சிவம் ஞானவடிவம். சக்தி செயல் வடிவம்114 சிவம் அன்றித் தனிப்பொருள் அல்லாத சத்தி, சிவத்தினிடமிருந்து தோன்றி, சிவத்திற் கலந்தே தோன்றும் என்பர்.

இறை என்பது வெளியில் இருப்பதல்ல; அது, உடம்பினுள் இருக்கும் ஒரு பொருள் எனத் தெரிகிறது.

உயிர்களுக்கு உள்ளே நிற்கும் பொருள் ஒன்றுண்டு; அப்பொருள் எல்லா உயிர்களிலும் இருக்கும், அந்தப் பொருள் ஒன்றே; அதுவே ஈசன்115 என்று இறைவனைக் குறிப்பிட்டுக் காட்டுவர்.

எல்லா உயிர்களிலும் இருக்கும் பொருள் ஒன்றே என்பதில், ஓர் அறிவியல் தொடர்பு புலப்படுகிறது. அதாவது, உலகில் உள்ள மனிதன், விலங்கு, தாவரம் , புழு, பூச்சி போன்றவற்றிலும் வானத்து நட்சத்திரம், சூரியன், நெபுலா போன்றவற்றிலும் இருக்கும் அணுவின் கரு (Nதஞிடூஞுதண்) ஒன்றாகவே இருக்கிறது. அதுவே அனைத்து உயிரின் மூலங்கள்116 என்னும் கருத்துடன் ஒப்பு நோக்கலாம்.

சித்தர்கள் கூறும் உயிரின் பொருளும் அறிவியல் கூறும் அணுவின் கருவும் ஒன்றே என்று கூற முடியாவிட்டாலும் இரண்டு கருத்துகளும் ஒன்றி இருக்கக் காணலாம்.

சித்தர்களும் உடல் தூய்மையும்

சித்தர்கள் தாங்கள் மேற்கொண்ட நெறியின் வழிச் சென்று ஞானம் என்னும் இலக்கைச் சென்றடைய மருந்துகளையே பயன்படுத்தினார்கள். நோயைத் தீர்க்கும் மருந்து; உடலைத் தூய்மைப் படுத்தும் மருந்து; ஞானத்தைப் பெற மருந்து என அனைத்துக்கும் மருந்து முறைகளையே கொண்டிருக்கின்றனர்.

“வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள் செய்தான்”117

வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரி மருந்து என்னும் மூன்று வகை மருந்து சித்தர்கள் அருந்திய மருந்தாகக் கூறப்படும். இம்மூன்றும் என்ன மருந்து என்பதற்கு,

“தின்று கண்டோர்க்கு இது தித்தித்த வாறே”
“நன்றுகண் டீர்இன் நமசிவா யப்பழம்”118

நமசிவாயப் பழம் என்னும் மருந்தே மேற்கண்ட மூன்று மருந்தையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். நமசிவாயம் என்பது எது என்பது, சித்தர்களால் பாதுகாக்கப்படுகின்ற மறைமொழியாகும். இவை முறையே வீரம் இரசம் கந்தகம் என்றும் மும்மருந்துகளைக் குறிக்கும் என்பர்.

உடல் தூய்மையானால் உடலில் ஞானாமிர்தம் என்னும் மருந்து தானாகவே சுரக்கும். அதனால் மனத்தின் இருள் நீங்கப் பெற்று மனம் சுத்தியாகும். இம்முறையை மேற்கொண்டால் முத்தி உண்டாகும். அதுவே இறைவனை அடைவதற்கான வழியாகும் என்பர்.

“சிறந்துபோம் தன்னுடலே காய சுத்தி
தேறிவிடில் வென்றிடலாம் எமனார் கோழை
சுறந்துபோம் ஞானாமிர்தம் உடலந் தன்னில்
தோன்றிடுமே ஞானவொளி சோதி தானும்
இறந்துபோம் மனவிருளும் வெளிச்சங் காணும்
இல்லறத்தில் இருந்தாலும் முத்தி தானே”119

காயசித்தியடைந்து முத்தி நிலையைப் பெற துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையெல்லாம் இல்லை. இல்லறத்தில் இருந்து கொண்டே முத்தி நிலைக்குச் சென்றடையலாம் எனத்தெரிகிறது.

“துணையுண்டு காயசித்தி எமனே சாரான்”

என்றதனால் காயசித்தி அடைந்தாலே மரணத்தை வென்று விடலாம். ஆனால், மரணத்தை வெல்வதற்கும் இறைவனைக் காண்பதற்கும் பெரிய இடைவெளி யிருப்பது தெரிகிறது. இறைவனைக் காண்பதென்பது வேறு நிலையாகவும் காயசித்தி என்பது வேறு நிலையாகவும் இருக்கக் காணலாம்.

தீட்சைகள்

காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1. மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்
2. வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்
3. கெட்ட குருதியைக் கசியச் செய்தல்
4. உடல் சட்டையைக் கழட்டுதல்
5. மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்
6. சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்
7. உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்
8. உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்
9. எட்டு சித்திகள் அடைதல்
10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்.

ஞான கற்பம்

சித்தர்கள் யோக முறையில் சாகா நிலையை அடைய மனவழி பயிலும் யோக முத்திரைகள் ஞான கற்பம் எனப்படும்.

ஞான முத்தி பெறும் நிலை சாகாநிலையைத்தரும். ஞானம் என்பது அறிவு, முத்தி என்பது முதிர்வைக் குறிக்கும். அறிவின் முதிர்வே ஞானமுத்தியாகும். இந்நிலையை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் யோக முறையில் ஞானகற்பம் என்னும் முத்திரைப் பயிற்சியை மேற் கொள்ள வேண்டும். இம்முறைகள் வழிவழியாக அறிப்படுவன. இவை மறை மொழி என்னும் குறியீட்டு முறையால் உரைக்கப்படும். ஞான கற்பம் இரண்டு வகை. ஒன்று வாலைபூசை, மற்றொன்று கற்பம். இரண்டும் சேர்ந்தது ஞானகற்பம். பூசை என்பது புசித்தல், உண்ணல் எனப் பொருள்தரும். வாலை என்பது, மூலாதாரத்துக்கும் தலையின் உச்சிக்கும் உள்ள வாயுத் தொடர்பு.

கற்பங்களின் வகை

ஞான கற்பம் நான்கு வகைப்படும். அவை, அகரம், உகரம், மகரம், சிகரம் என்பன.

கற்பம் உண்ணும் காலம்

யோக முறையில் உண்ணப்படும் நால்வகைக் கற்பங்களை காலை மாலை ஆகிய இரண்டு வேளை உண்ண வேண்டும்.

கற்பம் தோன்றுமிடம்

கற்பம் இருக்குமிடம் அல்லது அறியுமிடத்தைக் கற்ப நேர்மை என்பர். உடல் அடி, நடு, முடி என்னும் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும். அடி என்பது மூலாதாரம், முடி என்பது தலையின் உச்சி, நடு என்பது இரண்டு புருவத்துக்கும் நடுவிடமாகிய மூக்கின் அடிப்பகுதி. இந்த நடுவிடமே கற்பம் அறியுமிடம் என்று கூறப்படும். இவ்விடமே கற்ப நேர்மையாகும்.

இந்தக் கற்பங்களை உண்டவர்கள் சித்தர்கள் எனப் படுவர். இந்த நிலையை அடைந்தவர்கள் சிவநிலையை அடைந்ததாகவும் கூறுவர். ‘சிவனும் நானும் ஒன்றானோம்’ என்று திருமூலர் கூறுவார். சிவன் என்பதும் சித்தநிலை அல்லது சித்தரைக் குறிக்கும். இம்முறையைப் பன்னிரண்டு ஆண்டுகள் இடை விடாமல் தொடர்ந்து செய்யவேண்டும். இப்பயிற்சியின் போது ஏற்படுகின்ற உடல் மாற்றம், மனமாற்றம், துன்பங்கள், மருந்து, உணவு முறை போன்ற பல தகவல் களுடன், ஒவ்வொறு மாதமும் என்னென்ன நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை ஒரு அனுபவத்தின் அறிக்கை யாகக் கருதலாம்.

கற்பம் உண்ணும் போது ஏற்படும் விளைவுகள்

முதல் மாதம் : மேல் கால்கள் வலிக்கும்;
2ம் மாதம்: சூடுண்டாகும். மலங்கழியும். பேதியாகும்;
3ம் மாதம்: வாய்வேகும். அபானம் வரை சூடுண்டாகும்.;
4ம் மாதம் : கால், கை நோகும்;
5ம் மாதம் : வயிறு புண்ணாகும். ஆசனம் வேகும். பெண் மாய்கை அதிகமாகும். சிறுநீர் கடுத்து விழும். விந்து விழும். நினைவு மாறும் இடங்கள் வெந்து போகும். வெயில் படாதிருக்க வேண்டும் ; 6ம் மாதம் : பசியுண்டாகும். புளியேப்பம் மிகும். உடல் நோகும். நடைகள் ஓயும். காரசாரம் சேர்க்கவும். புளியும் கொள்க; 7ம் மாதம் : திமிரேரும். அசதி கொள்ளும். உடல் வெளுக்கும். புளியேப்பம் மிகும். பெண்ணாசை ஏற்படும். சிறுவாசல் வயிறு நோகும்; 8ம் மாதம் : உடலில் ஒளியுண்டாகும். எலும்பிலுள்ள மூளை போகும். எலும்பின் வழி சுவாசம் போகும். புளியதனைக் கொள்ளவேண்டும். குய்யம் வேகும். தொடை விருவிருக்கும்; 9ம் மாதம் : வயிறு நோகும். குண்டலியின் முறப்பதாகும். உடல் மினுமினுக்கும். அசதி காணும். தங்கம் போல் உடலிருக்கும். பசும் பால் அருந்துக; 10ம் மாதம் : ஆகாரம் வேண்டாதாகும். உண்பது பாலாக பேதியாகும். பொருமல் அசதி காணும் மனம் புத்தி அகங்காரம் ஒடுங்கும். உடல் அதிக சூடுண்டாகும். உடலில் நெய் போல அருகும்; 11ம் மாதம் : மண்டையிடிக்கும். புளியதனை உண்டால் கூத்தன் அணுக மாட்டான். திருவாகத் தனஞ்செயனும் எழுந் திருப்பான் சிறப்பாக பரைபூசை விடாமற் செய்க; 12ம் மாதம் : மகத்தான சந்து வலிவரும். சீதம் விழும். கை கால் அசதி. பூரணத்தைக் கைக் கொண்டால் வெகு சுளுவாய் வியாதி பறக்கும். பின்பு ஆதவன் போல் உடலிருக்கம். இன்னும் பல ஆச்சரியங்கள் உண்டாகும்; ஒரு ஆண்டு : புளியுண்ண வேறு எதிலும் மனது முடிய நாடா. எமன் ஓடிப் போவான். அருணன் போல் எந்நாளும் இருக்கலாம். அவரைச் சித்தரெனச் சொல்வார்கள்; 2ம் ஆண்டு : சூட்சாதி சூட்சமெல்லாம் தெரிந்து முடிய கொள்ளலாம். எமனை வெல்லலாம். ஞானியாகலாம். மெய்ஞ்ஞானி யென்னும் பெயருண்டாகும். கல்லாக உடல் இருகும். எலும்புகளில் வாசி ஏறும்; நரம்பு வலுக்கும். வாலை பேசும்; 3ம் ஆண்டு : புகழுண்டாகும். பிணம் போல் முடிய வாழ்வான். குற்றமில்லா திருப்பான். ஒருவரோடும் தூஷணமாக ஒரு நாளும் பேசான். சிறப்பில்லா செயலை எண்ணான். அருமையொடு வாய்திறந்து பேசான்; 4ம் ஆண்டு : தினமும் யோக நிலையிலிருப்பான்; முடிய அய்யம் நீங்கும் உடல் நோகும்; வெய்யலில் போகான்; 5ம் ஆண்டு : உண்மையுடன் நடந்து கொள்வான். முடிய உயர்வான காரியத்தைச் செய்து பார்ப்பான். வகார முதல் எல்லாஞ் செய்வான். தனித்திருப்பான். நரைதிரை அற்றுப் போகும். மலைவாசியாவான். கண்ணுக்குத் தோணமாட்டான்; 6ம் ஆண்டு : மலசலம் பேதிக்கும். கெவுனத்திற்கு முடிய உறுதியாகும் அமுதமது பெருகிக் காணும். தினமும் அமுதம் உண்டு, பூரணத்தைப் பணிய உலகமெங்கும் புகழ் கொண்ட சித்தனாவான்; 7ம் ஆண்டு : சிறுபிள்ளை போன்றும் மதளை முடிய போன்றுமிருப்பார்; 8ம் ஆண்டு : தனியாகக் குகையிலிருப்பான். முடிய ஆசைகள் அறும் அமுதத்துடன் பால் விட்டுண்பான். சீவனுக்குச் சீவனாக இருப்பான்; 9ம் ஆண்டு : ஒருவரையும் சட்டை செய்யான். முடிய ஒடுங்கிப் போவான். வாய்மை தவறமாட்டான். விரும்பியொரு காரியத்தைச் செய்யான். காதவழி நடப்பான். வாசி வசமாகும்; 10ம் ஆண்டு : அமுரி பழுக்கும். உடல் சட்டை முடிய வாங்கும். உடல் பொன்போலாகும். தேக உப்பு மாறிப் போகும்; 11ம் ஆண்டு : வாய்ச்சொல் பலிக்கும். அறுசுவை முடிய வேண்டாதாகும். உயர்ஞான கேசரங்கள் தெரிவான். யாவரையும் சரிசமமாய் நினைப்பான். உற்றாரோடு வாஞ்சை நீக்கி உம்பர்களோடு இணங்கி வாழ்வான்.; 12ம் ஆண்டு : எப்பொழுதும் அழியாத தேகமாகும். முடிய உடலெங்கும் சவ்வாது மணம் பொருந்தியிருக்கும். நரை மயிர் கருத்துப் போகும். குழந்தைபோல் வயது பதினாறுமாகும். மண மாப்பிளை போலழகுண்டாகும். இவ்வாறு பன்னிரண்டாண்டு கற்பமுண்ட வாழ்வு முடிந்தால், ஒரு வயது என்று கணக்கிடப்படும். இருபத்து நான்காண்டு நிறைவடைந்தால், இரண்டு வயதென்று கணக்கிடப்படும். பன்னிரண்டு ஆண்டை ஒரு வயதென்று எண்ணிக் கொள்க. நூறு வயதாகும் போது கூடுவிட்டுக் கூடு பாய்வான். மூன்று உலகமும் போய்வருவான். அஷ்டகர்மத் தொழில் களையும், அறுபத்து நான்கு சித்துகளுக்கும் அவனே ஆவான். புகழான பேருபெற்று வாழ்வான். பத்தியம் : கற்பம் உண்ணுங்காலங்களில், பசுவின் பால் பாசிப்பயிறு சோறு இரண்டும் சிற்றுணவு. மாமிசம், மீன், கடுகு, நல்லெண்ணெய் ஆகா. முழுகுதற்குத் தேங்காய் சேர்க்கவும். இப்பத்தியம் கடுமையாகக் காக்க வேண்டும். கற்பம் உண்ண வயது : இருபது வயதுக்கு மேல் நன்று. முப்பதுக்குள் மிகவும் நன்று. நாற் பத்துக்குள் உண்டால் பலிக்கும். ஐம்பதுக்குள் இன்னல் வராது. அறுபத்துக்குள் என்றால் உடல் பொன்னாகும். எழுபதுக்குமேல் பலிதமிராது.120

காய சித்தியும் மூலப்புளியும்

சித்தர்களின் ஞானக் கோட்பாட்டின் படி காயம் சித்தியானால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். காயம் சித்தி பெற கற்பம் வேண்டும். காய சித்திக்குக் கற்பமாக அமைவது மூலப்புளி. மூலப்புளி என்பது என்னவென்று அறிந்து கொண்டு அதை முறைப்படுத்தி உண்டுவந்தால் எந்த நோயும் குணமாகும். எந்த நோயாலும் உடல் பாதிக்காது என்பர். மூலப்புளி என்பதே சித்தர் நெறியின்மூலப் பொருள். அதைக் கண்டு கொண்டால் எல்லாரும் சித்த நிலையை அடையலாம். இதுவே, சித்தர்கள் மேற்கொண்ட மறை பொருளின் இறுதி நிலையாகத் தோன்றும்

“பறந்து போம் மூலப்புளி தின்றா யானால்
பசிக்கையிலே அன்னமுண்டு பசிதீர்ந்தாப் போலே
சிறந்து போம் தன்னுடலே காய சித்தி”121

பசித்த போது உணவை உண்டால் பசி தீர்ந்து போவதைப் போல மூலப் புளியைப் புசித்தவுடன் உடலிலுள்ள குற்ற மெல்லாம் நீங்கி காயம் சித்தியாகும்.

“பத்தி யொடு மூலப்புளி உண்ட பேர்க்குப்
பரிவாகத் தேகமெங்கும் பொன்னதாகும்”
“இருப்பார்கள் மூலப்புளி உண்ட பேர்கள்
இயல்பாக ஒருவருக்கும் தெரியா தையா”122

மூலப்புளியை உண்டவர்கள் உடல் பொன்னிறமாக மாற்ற மடையும். அவ்வாறு உண்டவர்கள் இயல்பாகவே எல்லாரையும் போலவே இருப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

மூலப்புளியின் இருப்பிடம்

மூலப்புளியை உண்பதால் காய சித்தி உண்டாகும். மரணமில்லை. உடல் பொன்னிறமாகத் தோன்றும் என்று கூறியவர்கள், மூலப்புளியின் இருப்பிடத்தை உரைக்கின் றார்கள்.

“கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
நாலும் இருப்பதும் உந்தனுள்ளே”123
“மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்”124

என்றும் உரைப்பதிலிருந்து மூலப்புளி என்னும் கற்பம் உடலிலேயே வளர்ந்து இருப்பது தெரியவரும்.

“கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
நாலும் இருப்பதும் உந்தனுள்ளே”123
“மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்”124
“மூலப்புளிதனைப் பன்றிநாய் தின்றது”125

என்று, மூலப்புளி என்ன வென்று கூறாமல் குறிப்பினால் உரைக்கப் பட்டது.

பன்றியும் நாயும் தின்றது என்றால் அது, மனிதக் கழிவுப் பொருள் என்றே கருத நேரிடுகிறது. மனிதக் கழிவு கற்பப் பொருளா? என்ற ஐயம் மேலிடுகிறது. என்றாலும், பன்றி நாய் என்பதும் மறைபொருள் சொல்லாக இருந்து விட்டால், எவ்வாறு கண்டறிவது.

“ஆவதுவும் ஆதிபுளி உப்பி னாலே
அழிவதுவும் சுகபோகத் தாசை யாலே”126

ஆக்கத்திற்கு உரிய பொருளாக ஆதி உப்பும் ஆதிப்புளியும் பயன்படுவதாகக் கூறப்பட்டது. அவை, சுகபோகத்தினால் அழியக் கூடியது என்றும் தெரிவதால், பன்றியும் நாயும் தின்றது என்பதன் பொருள் வேறாக இருக்கிறது. ‘சிந்தையை உள்ளடக்கிச் சுழுமுனை தன்னை நோக்கித் தியானித்தால் ‘ஆகாய கற்பம்’ தானே கிடைக்கும். இந்த ஆகாய கற்பத்தை நாளும் உண்டு வந்தால் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ கொள்ளலாம். யோக முறையை விரைவாகப் பெற ‘மாமூலி மருந்தை‘ உட்கொள்ள வேண்டும். ‘ஆதி கரு நெல்லி’யைக் கொண்டு வந்து குற்றங்களைப் போக்கித் தினமும் இருவேளை உண்டு வந்தால் யோகத்தின் ‘ஆறு நிலை‘களும் தானாகத் தோன்றிவிடும். ‘வான மழை‘ பொழியத் தொடங்கம். அம்மழை நீரே ஆகாய கற்பமாகும். (பாணியென்ற தெய்வமதைக் கண்டதுண்டோ என்றது இதைத்தான் போலும்) இம்முறையில் மூலப்புளியை அருந்த முனைந்தார்க்கு அனைத்து சுகமும் கிடைக்கப் பெறும்ஏ.

எனவரும் திருவள்ளுவரின் கருத்தின்படி மாமூலி ஆதிகருநெல்லி மூலப்புளி என்பவை ஒரே பொருளை உரைக்கும் வெவ்வேறு பெயர்களாகக் கருதலாம்.

“பாதாள மூலியடி பாடாணம் தான் சேர்ந்து
வேதாளம் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான் மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தனலாக வேகுறண்டி”127

என்று அமுகணிச் சித்தர் குறிப்பிடுவார். பாதாளமூலி பூநீர்; பாடாணம்; பிரம்மராச்சசி என்னும் வேதாளம் ரயில் கற்றாழை; வெண்டாரை இரசம்; நெய்சிறுநீர் இவை சேர்த்து செய்த செந்தூரம் உண்டால் காயசித்தி உண்டாகும் என்பது பொருள். இப்பாடலில் வரும் பாதாள மூலிபூநீரைக் குறிப்பதாக இருப்பதால் மூலப்புளி என்பதுபூநீரைக் குறிக்கும் சொல் எனலாம்.

“சிவந்திருக்கும் மூலிகைதான் செடிதானல்ல”128
“வீட்டிலே யிருக்குமடா அந்த மூலி
விளையுமடா காயோடே விரையில்லாதே”129
“நில்லாத நிழல் சேர்ந்த தண்ணி ரோரம்
நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி”130
“கோவானூர் பொட்டலிலே
குண்டுமேனி அம்மன் கோயிலிலே
சாகா மூலி முளைத்திருக்கு ஞானப் பெண்ணே”131

என்று கற்பப் பொருள் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இது, மரணத்தை வெல்லக் கூடிய பொருள் என்பதால் சிறப்புக் கவனத்துடன் ஆராய்ந்தால் பயன் தரும்.பிரணவப் பொருள் (உயிரியங்கு முறைகுணிதடூ குதூண்tஞுட்)

நில்லாத நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி என்று குறிப்பால் உரைக்கப் பட்டிருக்கும் கற்பப் பொருள் அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்ததே. அது ஓம் என்னும் பிரணவப் பொருளாகும்.

“பாரடா சிவமூலி சகஸ்திரட் தெட்டின்
பாலிருக்கும் நாற்சரக்கைக் காணமாட்டார்”132

என்று கற்பப் பொருளில் நான்கு பொருள்கள் கலந்திருப்ப தாகக் கூறப்படுகிறது. அந்நான்காவது, கெந்தகம், பாதரசம், உப்பு, நஞ்சு என்பன. இந்நான்கில் கலந்துள்ள நஞ்சை நீக்கிச் சுத்தி செய்து முறைப்படி உண்பது கற்பமாகும். இதுவே உயிரின் மூலப்பொருள் எனச் சித்தர் வேதம் உரைக்கின்ற பிரணவம் ஆகும். இந்த பிரணவக் கற்பம் ஆற்றல்மிக்கது. எல்லாவகை நோயையும் போக்கக் கூடியது. நரை, திரை, மூப்பு என்னும் மூன்றையும் போக்கி உடலைக் காப்பது என்பர்.

“விண்கொள்ளாச் சுண்ணத்தை யென்ன சொல்வேன்
வியாதி யென்றால் கடுகளவு கொடுத்துப் பாரு”
எள்ளளவு நாவுமேல் இட்டுப் பாரு”
“தாகமென்ற பசிபோச்சு தன்மை யாச்சே”
“பேச்சேது கற்பமுண்டால் திரேகந் தானும்
பிலத்ததடா நரைதிரையும் ஓடிப் போகும்”133

என்று கற்பத்தின் சிறப்பு உரைக்கப்பட்டது. வியாதி என்றால் கடுகளவு கொடுத்துப் பாரு என்று கூறப்படுவதிலிருந்து இந்த கற்பத்தின் சிறப்பு என்ன வென்று உணர முடியும்.

சித்தர்கள், தாங்கள் உண்டு வந்த கற்பப் பொருளில் கெந்தகம், பாதரசம், உப்பு என்னும் மூன்றுபொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு பிரணவக் கற்பத்தைத் தயாரித்திருக்கின்றார்கள் எனத் தெரிய வருவதால், இம்மூன்றையும் இணைத்தால் வேதியல் முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தால், சித்தர்கள் பெற்ற பயன்கள் மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ததாக இருக்கும்.

சித்தர் நூல்களில் குறியீட்டு முறைகள்

சித்தர் நூல்களில் சில சொற்கள் ‘கலைச் சொற்கள்’ போலக் காணப்படுகின்றன. அச்சொற்கள், சித்தர்கள் கூறக் கருதிய பொருளைக் குறிக்கும் மூலக் குறியீடுகள் எனலாம்.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தின் தொகைச் சொல்லாகப் ‘பஞ்சபூதம்’ கூறப்படுகிறது. அவை ‘நமசிவய’ என்னும் குறியீட்டினாலும் குறிப்பிடப்படுகிறது. நமண்; மநீர் எனக் கொள்வர். மண்+ நீர் சேர்ந்தால், மண்ணில் நீர் கலந்தால் உயிர் உண்டாகும் என்பதை ‘நம’ என்றும் ‘நமோ’ என்றும் குறிப்பிடப்படும். அனைத்துப் பொருள்களிலும் மண், நீர் குணம் இருக்கிறது. இதனை நாதம், விந்து என்பர். வலப்புற நாசி வழியே இயங்கும் மூச்சுக் காற்று ஆண் அல்லது விந்து என்றும், இடப்புற நாசி வழியே இயங்கும் மூச்சுக் காற்று பெண் அல்லது நாதம் என்றும் இரண்டு நாசிகளிலும் இயங்கும் மூச்சுக் காற்று உயிர் என்றும் கரு என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற மூலக்குறியீடுகள், தோற்றம், பிறப்பு, யோகம், ஞானம், முத்தி போன்ற பொருள் களை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் உட்பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. அவை வருமாறு:

இணையாக வரும் சொற்கள்:
1. ஆண் பெண் 7. சூரியன் சந்திரன்
2. விந்து நாதம் 8. வலது இடது
3. காரம் சாரம் 9. எட்டு (அ) இரண்டு (உ)
4. உப்பு புளி 10. அகரம் உகரம்
5. நட்பு (+) பகை () 11. சூரியகலை சந்திரகலை
6. சத்துரு மித்துரு 12. வலக்கண் இடக்கண்
கலைச் சொற்களாகக் குறிப்பிடப்படும் ஒற்றைச் சொற்கள்:
1. பஞ்ச பூதம் 8. சாகாக் கால்
2. நமசிவய 9. போகாப் புனல்
3. ஓம் 10. வேகாத் தலை
4. பிரணவம் 11. ஆகாய கங்கை
5. ஐம்பத்தொன்று 12. அமுதம்
6. கைலாயம் 13. வானமுதம்
7. உச்சியில் பிச்சை 14. முப்பூ
போன்றவை குறிப்பிடத் தக்கவை.

மருந்துகளில் ஆண் பெண் குறியீடு

உயிரினங்களில் ஆண் பெண் குறியீடு இருப்பதைப் போல, மருந்துகளிலும் அக்குறியீடுகள் காணப்படுகின்றன. அக்குறியீட்டு முறை மருந்துகளின் சேர்க்கைக்குப் பயனுடையதாகத் தெரிகிறது.

ஆண் பெண் சேர்க்கையால் மற்றொரு உயிர் உருவாவதைப் போல ஆண் பெண் மருந்துகளின் சேர்க்கை யினால் மற்றொரு மருந்து உருவாவதாக உரைக்கப் படுகிறது. இவ்வாறான சேர்க்கைகள் மருந்து, வாதம், யோகம் ஆகிய முறைகளிலும் காணப்படுகிறது. ஆண் பெண் மருந்துகள் வருமாறு:

ஆண் மருந்து பெண் மருந்து
தங்கம், இரும்பு, வீரம், சூதம், மனோசிலை, செம்பு, லிங்கம்,
காந்தம், கல்லுப்பு, வெடியுப்பு, கெந்தி, நிமிளை, இந்துப்பு,
சூடன், அப்பிரகம், கௌரி, படிகாரம், துரிசு, வெங்காரம்,
பேதி, சிலாசித்து, கற்பூரம். நாகம், பொன்னம்பர்,
கல்மரம், காடி.

சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல்

சாகாத கால், வேகாத தலை, போகாத புனல் என்னும் மூன்றும் குறியீட்டுச் சொற்களாகும். இம்மூன்றும் வைத்தியம், வாதம், ஞானம் ஆகிய மூவிடங்களிலும் இடம் பெறும்.

“நவிலுவேன் சாகாக்கால் சூத மென்பார்”
“நவிலுவேன் நான்போகாப் புனலைக் கேளு
காந்தமது அப்பினிலே தாழ்த்தி டாமல்
அவிலுவேன் மிதந்து சென்றால் வாய்ப்பாச் சப்பா
அக்கினியில் புகையாத கெந்தி வாய்த்தால்
நவிலுவாய் நீ வேகாத் தலையென் றப்பா”134

என்றதனால்,

சாகாக்கால், இரசம். இரசத்தை முறைப்படி மணியாகக் கட்டுதல்
வேகாத்தலை, கெந்தகம். நெருப்பில் புகையாமல் கட்டுதல்
போகப்புனல், காந்தம். தண்ணீரில் மூழ்காமல் மிதத்தல்

எனக் கொள்ளப்படும். ஆனால் இவை மருத்துவத்துக்கு மட்டுமே பொருளாகும்.

“சாகாத காலதுவே அறுகோ ணந்தான்
தனிவேகாத் தலையதுவே மூலமாகும்
போகாத புனலதுவே புரவெளி தானப்பா”135

என்றதனால், முறையே அறுகோணம், மூலம், புரவெளி என்னும் மூன்று இடங்களைச் சுட்டுவதாக அமையும். இவை யோகத்துக்குரிய இடங்களாகக் கொள்ளலாம். யோகத்தில், அடி, நடு, முடி என்னும் மூன்று இடங்களாக மூலாதாரம், சுழுமுனை, புரவெளி என்னும் உச்சி ஆகியவை இம்மூன்றின் இடங்களாகக் கருதுவர்.

மேற்கண்ட இம்மூன்றின் இடங்களும் ஞானத்திற்குரிய இடங்களாகத் திரு அருட்பா (சற்குணமணி மாலை. பா.7), அகத்தியர் கற்ப சூத்திரம் (பா.10), சட்டமுனி வாத காவியம்1000 (பா.23), யாகேபு சூத்திரச் சுருக்கம் (பா. 144), அகத்தியர் பரிபாஷை (பா. 21), அகத்தியர் ஞானம்12 (பா. 12) எனப்பல நூல்களில் இடம் பெறுகின்றன.

சித்தர்நூல்களில் பெரும் புதிராக விளங்கும் இம்மூன்றும் மறைமொழிச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், இவை சூதம், கெந்தகம், காந்தம் என்னும் மருந்துப் பொருள்களையும் அடி நடு முடி என்னும் மூலாதாரம், சுழுமுனை, உச்சி ஆகிய யோக நிலைகளையும் அகரம் உகரம் மகரம் என்னும் மந்திரங்களையும் உரைப்பவை என அறியப்படுகிறது.

ஐம்பத்தோர் எழுத்து

சித்தர் இலக்கியங்கள், ஐம்பத்தோர் எழுத்துகளைப் பற்றிக் குறிப்பிடக் காணலாம். திரு அருட்பா அனுபவ மாலை18, திருமந்திரம்11 இடங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. சித்தர்களின் குழூஉக்குறி குறிகளில் இதுவும் ஒன்று.

“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”136

இந்த ஐம்பத்தோர் எழுத்தில் அகரமும் அடக்கம் எனச் சிவவாக்கியரும்,

“அம்பத்தோர் அட்சரம் அறியநீ சொல்லடி சிங்கிஅது
வஞ்ச மகர நடுச்சுழி மூன்றுமே சிங்கா”137

இந்த எழுத்துகள் அகரம் உகரம் மகரம் என்னும் அடி நடு முடி என்னும் மூன்றுமே என்று ஞான ரத்ன குறவஞ்சியும்,

“அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய்
ஐம்பத்தோர் அச்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்”138

நமசிவாய என ஐந்தெழுத்தாய், நமசிவய+அ உ ம என எட்டெழுத்தாய், ஐம்பத்தோர் எண்களாய் இருப்பது இந்த உடலில் உள்ள உயிர். அதனைப் போற்றி வேண்டுங்கள் என்று பட்டினத்தாரும் கூறக் காணலாம்.

ஐம்பத்தோர் எழுத்து என்பது எழுத்தா, எண்ணா என்பது சித்தர் இலக்கியத்தை ஊன்றிப் படித்தால்தான் விளங்கும்.

யோக முறையைப் பயிலும் போது மூச்சுக் காற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். இதனைப் பிரணாயாமம் எனக் கூறுவர். பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டுவதே (சாகாக்கால்) பிராணாயாமமாகும். உடம்பின் உள்ளே சுழலும் பிராண வாயு வெப்பமடையும். பாம்பு வடிவில் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலி, வெப்பத்தினால் (வேகாத்தலை) மேலெழுந்து முதுகுத் தண்டின் வழியாகச் செல்லும். அப்போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, இந்த ஒலி அதிர்வுகளை ஐம்பத்தொன்று என்பர்.

ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4, 6, 10, 12, 16, 3 என 51 ஒலி அதிர்வுகளைக் குறிப்பிடுவர்.

இந்த ஐம்பத்தொரு ஒலி அதிர்வையும் கேட்டு கடந்த பின்பு கம்பலம் என்னும் அருள்வெளி தோன்றும். இதனை மகாமேரு என்று குறிப்பிடுவர். அந்த இடத்தைச் சகஸ்ர தளம் என்றும் கூறுவர். அந்த இடத்திலுள்ள பிந்துவோடு குண்டலி இணையும். அதனையே சிவசக்தி ஐக்கியம் என்பர். ( (ஆண்+பெண்=சேர்க்கை; நாதம்+விந்து=கலப்பு எனல்)

“நாத விந்துக லாதீ நமோநம”139

என அருணகிரி நாதர் உரைக்கக் காணலாம்.

இவ்வாறு நாதமும் விந்தும் கலக்கும் போது உருவாகும் ஊற்றை வானாறு, அமிர்தம், மாங்காய்பால், சந்திர அமிர்தம், ஆகாய கங்கை என்று குறிப்பிடுவர். எனவே, ஐம்பத்தொரு எழுத்தென்பது சாதாரண எழுத்துகளோடு தொடர்புடையதல்ல. ஆதாரங்களில் எழுகின்ற ஒலி வடிவமே எழுத்து எனக் குறிப்பிடப்படுகிறது. இது, யோகத்துடன் தொடர்புடையதென்று கூறப்படுகிறது.140

இவ்வாறு யோக முறையினால் சுரக்கப் பெறும் நீரை உண்டால் மரணம் தவிர்க்கப்படும் என்பதுசித்தர் கொள்கை. இதுவே சித்தர் நெறியின் இலக்குமாகும். இந்த நிலையை அடையும் வழிகளைக் கூறுவதே சித்தர் இலக்கியப் பொருளாகும். இதன் உண்மைகளை அறிவியலாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பீனியல் சுரப்பு (Pineal Gland)

பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச் செயல்பட வைப்பதே சித்த முறையாகும். பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் அதன் வளர்ச்சிக் குன்றிவிடும். பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின் எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பர். இதன் சுரப்பை நீட்டிக்க வாசியோகம், குண்டலி யோகம் பயன்படுகிறது. இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன. ஆணின் உயிர்ச்சத்தான விந்தையும், பெண்ணின் உயிர்ச் சத்தான சுரோணிதத்தைம் அடக்கினால் இச்சுரப்பியின் ஊற்று அதிகரிக்கும். மெலடோனின் சுரப்பின் இயக்கத்தை நீட்டிக்க வேண்டுமானால் அச்சுரப்பியின் மேல் ஒளி விழச் செய்யவேண்டும். அதற்கு குண்டலி மூலம் மூலக்கனல் என்னும் ஒளியை எழுப்பி முதுகுத் தண்டின் வழியே தலையின் உச்சிக்கு ஒளியைக் கொண்டு செல்வதே யோகமுறை. இதற்குத் திபேத்திய லாமாக்கள், புருவமத்தியில் ஓட்டையிட்டுக் கொள்வதாகவும் இதன் மூலம் வெளியிலிருந்து ஒளி உள்ளே ஊடுருவிச் சென்று மெலடோனின் சுரப்பியைச் சுரக்கச் செய்வதாகவும் நம்புகின்றனர்.141 என்பதால், சித்தர் செயல்களில் பொதிந்துள்ள அறிவியல் உண்மைகள் விளங்கும். அறிவியல் தொடர்பு இல்லாத காலங்களிலேயே அறிவியலோடு தொடர்புடைய செயல்களைச் செய்து, மரணத்தை வெல்லும் முறைகளைக் கற்றறிந்த சித்தர்கள் அறிவியல் முன்னோடிகள் எனலாம்.

மந்திரமும் எழுத்தும்

மந்திரம் என்பது மறைமொழிகளால் மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், நஞ்சுப் பொருள்கள் ஆகியவற்றைத் தமக்குப் பயன்படுமாறு இயக்குவது என்பர்.

மந்திரம் எண் வடிவமாகவும் எழுத்து வடிவமாகவும் குறிப்பிடப் படுகிறது. மந்திர எழுத்து என்பது ந, ம, சி, வா ய என்னும் ஐந்து எழுத்து. எண் என்பது அந்த எழுத்துகளுக்குரிய எண்களாக 9, 11, 4, 15, 12 எனக் குறிக்கப்படும்.

“அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன”142

காட்டில் உள்ள யானைகளை அடக்குவதற்கு அங்குசம் பயன்படுவது போல், ஐந்து பஞ்சபூதங்களால் உருவான உயிர்கள் அனைத்தையும் அடக்குவதற்கு அங்குசமாக மந்திர எழுத்துகள் பயன்படுகின்றன என்பர். ஒலி வடிவில் அமைந்திருக்கும் மந்திரம் யாவர்க்கும் பொதுவானது. அது எல்லா உயிர்களுக்கும் விரும்பிய பயனைத் தருவது. ஒவ்வொருவரையும் சூழ்ந்திருக்கும் துன்பங்களை நீக்குவது, தனக்குரிய வலிமையைப் பெற்றுத் தருவது143 என்று மந்திரத்தின் சிறப்பைத் திருமந்திரம் உரைக்கிறது.

மந்திரங்கள் ஒன்றை அல்லது ஒருவரை வயப்படுத்தல், அழித்தல், மழுங்கச் செய்தல், அழைத்தல், தடுத்தல், பகைத்தல், ஏவுதல், மயக்கல், நட்பு கொள்ளச் செய்தல் என்னும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அட்டகர்ம சித்தி, மாந்திரீகச் சித்தி, பராபரத்தின் சித்தி, தச தீட்சை சித்தி, அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிறாத்தி, பிறாகாமியம் என்னும் ஆறும் வசியம், ஈசுவரம் ஆகியவையும் சித்தியாகும் என்று கூறப்படுகிறது.144

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை இருபத்தைந்து கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு எழுத்தாக அமைப்பர். அந்த எழுத்துக்கு மாற்றாக அதற்குரிய எண்களை அமைப்பர். அந்த எண்கள் எந்தப் பக்கத்திலிருந்து கூட்டினாலும் 51 என்னும் கூட்டுத் தொகையாகவரும். மந்திர எழுத்துகளுக்குரிய எண்களைக் குறிப்பிடும் போது, ‘க’ முதல் ‘ன’ வரையுள்ள தமிழ் உயிர்மெய் எழுத்துக்களுக்கு 2லிருந்து 19 வரையான எண்களைக் குறித்து மந்திர எழுத்துக்குரிய எண்ணாகக் குறிக்கின்றனர்.

இவ்வாறு எண்ணும் எழுத்தும் கட்டங்களில் இடம்பெறுகின்றன. இந்த மந்திரங்களில் தமிழ் எண்ணும் எழுத்தும் பெறுகின்ற சிறப்பினைக் கருதியே ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்’ என்று உரைக்கப் பட்டுள்ளது.

தமிழில் மந்திரங்கள் இல்லை என்னும் கருத்துக்கு மறுப்புரைப்பது போலத் திருமந்திரமும், கருவூரார் மாந்திரிக காவியமும், கொங்கணர் கடைக் காண்டம் போன்ற பல நூல்களும் அமைந்திருக்கக் காணலாம்.

கும்ப முறை

தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் பலர் மருத்துவர் களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், மெய்ஞ்ஞானி களாகவும் இருந்திருக்கின்றனர். இக்காலத்தில் அறிவியல் வெற்றியாகக் கருதப்பெறும் மரபணு முறையைப் போல, சித்தர்களும் தங்கள் அறிவியல் வெற்றியாகக் கும்ப முறையைக் கூறுவர்.145 கருப்பையிலிருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை என்பதைப் போல, கும்பம் என்னும் கலசங்கள் மூலம் குழந்தையை உருவாக்குவதைக் கும்பமுறை என்பர். கும்ப முறை மூலம் குழந்தையை உருவாக்கும் முறையே சித்தர்களின் அறிவியல் வெற்றியாகக் கூறப் படுகிறது.

கும்பமுறை என்பது நாதம், விந்து, கந்தகம், ஆண் பாதரசம், பெண் பாதரசம் முதலிய பொருள்கள் அடங்கிய கற்பத்துடன், மேற்கண்ட பொருள்களில் மூன்றை ஒன்றாக்கிய செயநீரால், பாதரசம், கந்தகம், உப்பு ஆகிய மூன்றையும் வெண்ணெய்யாக்கி நீராக்கிய நீர் (இப்பொருள் பெண்ணிடமிருந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பொருளில் நான்கு பொருள்கள் அடங்கும் எனவும், அந்நான்கில் ஒன்று நஞ்சு எனவும், அந்நஞ்சை நீக்கினால் மூன்றே மிஞ்சும் என்றும் கூறப்படுகிறது) ஆகியவற்றைச் சேர்த்துக் கற்பம் உண்டாக்கிக் கும்பம் போன்ற பாத்திரத்தில் மருத்துவ நூல்கள் குறிப்பிடும் அளவின்படி மூட வேண்டும். சீலை மண் கொண்டு மூட வேண்டும். கும்பத்தில் ஊசியால் இரண்டு மூன்று துளைகள் இட வேண்டும். இவ்வாறு செய்து வைக்கப்பட்ட கும்பக் கலசம், இருட்டறையில் முறையாக வைக்கப்பட வேண்டும்.

இந்த கும்பக் கலசத்தில் முன்னூறு நாள்கள் கழிந்த பின் குழந்தை உருவாகும். கும்பக் கலசத்தில் வைக்கப்படும் கற்ப மருந்துகளில் நாதம் விந்து ஆகிய இரு பொருளும் 4, 3 என்னும் விகிதத்தில் கலக்கப் பெற்றால் உருவாகும் குழந்தை ஆண், பெண் என்றாகும்.

கும்பக் கலச முறையில் உருவாகும் குழந்தை சுமார் 3லீ அடி உயரம்தான் வளரும். இம்முறையில் உருவானவர்களாக அகத்தியர், முருகன் ஆகியோரைக் குறிப்பிடுவர். இவர்கள் இருவரும் குள்ளமானவர்கள் என்பர். அதனால் அகத்தியரைக் கும்பமுனி, குள்ளமுனி, கலசமுனி என்னும் பெயர்களால் குறிப்பிடுவர். கலசத்தில் வைக்கப்படும் பொருள்களில் ஒன்றான கந்தகத்தின் பெயரே கந்தன் என்று முருகனைக் குறிப்பிடு வதாக கூறப்படுகிறது.
கற்பம் என்பது நாதம், விந்து ஆகியவற்றால் ஆனது. இந்த நாதமும் விந்தும் தேவ உப்பு, கந்தகம், ஆண் பெண் பாதரசம் என்னும் கொடிய நச்சுப் பொருளால் ஆனது. விஷம் என்னும் நஞ்சு நீக்கப் பெற்ற மேற்கண்ட பொருள்களால் முறைப்படிச் சேர்க்கப்பட்ட பொருள்களுக்கு முப்பு என்றும், கற்பம் என்றும் பெயர். கற்பம் கசப்புத் தன்மை கொண்டது. கொடிய காரமாகவும் மாற்றலாம். இனிப்பாகவும் மாற்றலாம். அப்போது, அது, அமிர்தம் எனப் பெயர் பெறும். இக்கற்பம், ஆக்கல், அழித்தல் ஆகிய இரண்டு வல்லமைகளைப் பெற்றிருக்கும். இக் கற்பத்தினால், குழந்தை உருவாக்கப் படுவதுடன் இதனை உண்ணவும் செய்யலாம். இக் கற்பத்தை உண்டவர்கள் பல்லாண்டு காலம் உயிர் வாழலாம். இக்கற்ப முறையால் பிறந்த அகத்தியரும் முருகனும் அதையே உண்டு வந்ததால் அவர்களைக் கற்பதேகி என்றும் வழங்கினர்.146 இக்கற்பம், உடம்பினுள் முழுமையான வளர்ச்சி யடைந்த திசுக்களிலுள்ள அணுக்களுக்குப் புதிய ஆக்கத்தைக் கொடுப்பதுடன் மறு வளர்ச்சி நிலையைத் (ஈஞுஞீடிஞூஞூஞுணூஞுணtடிச்tடிணிண) தூண்டும் உயிர்ப் பொருளாகப் பயன்படுகிறது.

இவ்வாறு, உயிரின் மூலங்களைக் கண்டறிந்து அது எந்த எந்தப் பொருளின் சேர்க்கையினால் உருவாகிறது என்பதைக் கொண்டு கற்பங்கள் உருவாக்கி, அதன் மூலம் கும்ப முறையில் குழந்தையை உருவாக்கும் முறையில் சித்தர்கள் வெற்றியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கூற்றினுள் அடங்கிய உண்மைகளை அறிவியல் அறிஞர்கள், ஆய்வு செய்து கண்டறிந்து வெளியிட்டால் அதன் பயன்கள் முழுமையானதாக இருக்கும்.

சித்தர் அறிவியல்

சித்தர்கள், மனித உடலையும் அவ்வுடலைப் பேணி பாதுகாக்கப் பயன்படும் மருந்துப் பொருளையும் பல்வேறு நிலைகளில் கண்டறிந்துள்ளனர். நிலத்திலிருந்து கிடைக்கக் கூடிய பொருள்கள் எல்லாம் அந்த நிலத்தில் தோன்றிய மனித உடலுக்கு ஏற்றவை என்பது பொருந்தாது. எல்லாப் பொருளையும் ஏற்றவையாக மாற்றிக் காட்டுவது அறிவியல் சார்ந்த ஆற்றலாகும்.

மரணம்

மனிதன் என்று தோன்றுகின்றானோ அன்றே அவனின் இறப்பும் எழுதப்படுகிறது என்பர். மனித உயிர் உருவாகும் போதே, உயிரின் கருவில், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய அறு பருவங்களும் அமைகின்றன.

“பேறு யிளமை யின்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறுங் கருவில மைப்பு”147

என்று குறிப்பிடப்படுகிறது.

பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும். உறங்குவது போலும் உறங்கி விழிப்பது போலும் எனக் கண நேரத்தில் அவ்விரண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றும் கருதப்பட்டது.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”148

என்னும் குறள் கூறும் கருத்து சித்தர்களுக்கு உடன்பாடானதன்று.

மரணத்தை வெல்லுதல்

மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.

வேம்புக் கற்பம் என்னும் மருந்தை உண்டுவந்தால் மரணமில்லை என்கிறது கற்பவிதி.

“கொண்டிட்டால் வைரம்போல் இறுகும் தேகம்
குறிப்பாகக் கண்ணிரண்டும் சிவப்பு மாகும்
நன்றிட்டால் நரம்பதுவு முறுக்கு மாகும்
நரைதிரையும் மாறியே ஞான முண்டாம்
உன்றிட்டால் யோகத்தில் உறுதி யாகும்
ஒரு காலும் சாவுமில்லை உண்மை தானே”149

என்று மரணத்தை வெல்லும் வழியைக் கண்டறிந்திருப்பது அறிவியல் முறையாகும்.

உடலும் உயரமும்

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர். (அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.) ‘எண் சாண் உடலம்’ என்பதும், ‘எறும்புக்கும் தன்கையால் எட்டு’ என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

“சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்
செப்புமங் குலமவர்கள் கையாலே தான்”150

என்பர், இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே”151

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும். அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது. அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கிவிடுகிறது. மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்துவிடுகிறது. உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்.

எட்டு

சித்தர்கள் கண்ட அறியியல் தத்துவத்தின் படி எட்டு என்பது அடிப்படைக் கணக்காகக் கருதப்படுகிறது. மனித உயிர் எட்டை அடிப்படையாகக் கொண்டு பிறப்பதைப் போல, அந்த உடம்புக்கு ஏற்றவையும் எட்டு என்றே கருதினர்.

“சொல்லிய நாழி கொண்டு
தூணியில் எட்டொன் றாக்கி”
நன்னீர் விட்டே எட்டொன்றாய்
நாடிக் காய்ச்சிக் கொள்வீரே”152

என்று, மருந்துப் பொருள்கள் எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால், உடம்புக்கு மருந்தாகும். இல்லாவிட்டால் அவை விருந்தாகும் (உணவு) என்று கண்டனர்.

இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

“இயம்பிட எளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண் மின்
நயம் பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம் பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்”153

என்று எந்தவிதமான மருந்துப் பொருளையும் சேர்க்காமல் தண்ணீரை மருந்தாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர். தாயின் வயிற்றில் கருவாகத் தோன்றும் போது எந்த முறையில் தோன்றினோமோ அந்த முறையில் அமைவதே மருந்து எனக் கருதியதால் இந்தச் சிந்தனை தோன்றி இருக்கலாம். எனவே, இதுவும் அறிவியல் அடிப்படையாகவே இருக்கக் காணலாம்.

விந்து

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன. அந்த மூலத்தை உயிர் மூலம் எனலாம். அந்த உயிர் மூலத்துக்குச் சித்தர்கள் ‘விந்து’ எனக் குறியடையாளம் கொள்வர். விந்து உயிரையும் உடலையும் உருவாக்குவது மட்டுமல்ல பாதுகாக்கவும் செய்கிறது. ‘விந்து கெட்டவன் நொந்து சாவான்’ என்பது பழமொழி.

உடம்பில் ஒரு துளியளவு விந்து இருக்கும் வரை உயிர் உடலைவிட்டு நீங்காது என்பது சித்தர்கள் கொள்கை.154

“உந்தனுடைய விந்தழிந்தால் யெல்லாம் போச்சு
உண்டதெல்லாம் பாழாச்சு உறவும் போச்சு
விந்துதனை இழந்து பல பிணிக்குள் ளாகி
மெலிந்து கெட்டுப் போகாமல் விள்ளு வேனே”155

விந்து அழிந்து விட்டால் நன்மையெல்லாம் போய்விடு வதுடன் நோய்கள் வந்தடையும் என்று எச்சரிக்கக் காணலாம். விந்து பிறப்புக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் கருத்துக்கு மாறாக, விந்து பற்றிய அறிவியல் உண்மையாக உரைக்கக் காண்கிறோம்.

அணுச் செயல் மாற்றம்

சித்தர்கள், அணிமா முதலிய எட்டுவகையான சித்துகளில் வல்லவர்கள். தம் உடம்பின் இரகசியங்களை அறிந்து தம் விருப்பப்படி அணுவின் செயல்களை மாற்றிக் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அறிவியலில், அணுக்கருச் சிதைவு (Neuclear Fission) என்னும் முறையின்படி ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன் மூலம் அப்பொருளை வேறு பொருளாக மாற்றலாம் எனக் கண்டுள்ளனர். ஒரு பொருளைப் பற்றிய அறிவும் அப்பொருளின் கருவைப் பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் வேறொன்றாக ஆக்கல் கூடும்.

இதேபோல் மனிதர்க்கு இன்றியமையாக் கருவாக இருப்பது DNA (De(s)oxy ribonucleic acid) எனப்படும் உயிர்ப் பொருளாகும்.

இதுவே இயல்புகளையும் குணங்களையும் நிர்ணயிப்பது என்பது அறிவியலார் கூற்று. எனவே ஒவ்வொரு உயிரின் DNA வையும் பற்றிய தெளிந்த அறிவு பெற்றவர்கள் தம் கருவை DNA மாற்றுவதன் மூலம் வேண்டிய வடிவங்களில் மாற்றிக் கொள்ளுதல் கூடும். இம்முறையில் ஒருவர் ஈயாகவும் யானையாகவும் உருவெடுத்தல் கூடும்.

பரிசோதனைக் குழாயில் (Test Tube) செயற்கை முறையில் குழந்தையை உண்டாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அறிவியலுக்கு இந்த தத்துவம் விளங்காததாகவோ புரியாததாகவோ இருக்க முடியாது. இவ்வுடம்பு கண்ணுக்குத் தெரியாத நிலையும் பெறுதல் கூடும். பொருள்கள் மூன்று நிலையினை யுடையன. ஒளிபுகும் (ஒளி ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்துக்கு ஊடுருவிச் செல்வது) (Transparent), 2. ஒளி புகாப் பொருள் (Opaque), 3. ஒளி கசியும் பொருள் (Translucent) இம்மூன்று நிலைகளில் நம்முடம்பு ஒளிபுகாப் பொருளில் அடங்கும். யோகப் பயிற்சியின் மூலம் உடம்பின் இயல்பை மாற்ற முனையும் போது ஒளி புகும் பொருளாக மாறுமேயானால் கண்ணுக்குப் புலனாகா வடிவமாகும். இந்நிலையின் உயர்நிலையே காற்று வடிவமாகும் . இதனை அருவமாதல் (Translucent) என்பர். பஞ்ச பூதங்களில் எந்த வடிவமாகவும் சித்தர்களால் இருக்கக் கூடும் என்பது சித்தர்களது உறுதியான நம்பிக்கை. வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம் எனத் தாயுமானவர் கூறுவதும் காண்க.”156

வள்ளலார் ஒளியுடம்பு

வடலூர் இராமலிங்க வள்ளலார் வழக்கு ஒன்றுக்காக நீதி மன்றம் வந்த போது, அவரைப் புகைப்படும் எடுத்தனர். படச்சுருளை எடுத்துப் பார்த்த போது அது வெள்ளையாக இருந்ததென்பர். காரணம், சித்தர் நிலைக்கு உயர்ந்த வள்ளலார், ஒளி வடிவாக இருந்ததே என்பர்.

நோயை அறிவதிலும் அந்நோயைப் போக்கும் மருந்துகளைச் செய்வதிலும் தங்கள் ஆற்றலைப் பயன் படுத்திய சித்தர்கள், நோய் வருவதற்கான காரணத்தை அறிவதிலும் சிறந்திருந்தார்கள். வந்த நோயையும் போக்கும் வழியையும் புலப்படுத்தும் அறிவியலே நோயின் மூலத்தையும் அறிவுறுத்துவதாகும். அவ்வாறே மேக நோய் உண்டாவதற்கான ஏதுக்களைக் குறிப்பிடும் போது பதினெட்டு வகையான ஏதுக்களைக்கூறி பதினெட்டு வகை மேகநோய் என்றனர். அதாவது,

“மாதர் மயக்கம், அச்சம், போதைப் பொருள், மீன், இறைச்சி, நெய், பால், சீத உணவு, பதனழிந்த தினை, மிகுந்த உணவு, உடல் பருமன், இனிப்பு, தூக்கமின்மை, பசியின்மை, அதிக பசி, அதிக உடல் உறவு, போகமின்மை, கடின உழைப்பு”157

என, சித்தர்கள் மேற்கொண்ட முறைகள் அனைத்தும் இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டுக் காணும் போது, சில அறிவியலோடு ஒத்துப் போவதாகவும் சில அறிவியலால் அறியாதவையாகவும் இருக்கக் காண்கிறோம். வாழ்வில் நோய் என்னும் துன்பத்தை அண்ட விடாமல் தடுக்கும் முயற்சியாகக் கற்பங்கள் விளங்குகின்றன. மரணத்தை வென்று அழிவிலிருந்து மனிதர்களை காக்கும் முறையாக யோக முறைகள் அமைகின்றன. ஆக, கற்பமும் யோகமும் என உடலியல், உயிரியல் ஆகிய இரண்டு அறிவியல் முறைகள் முழுமையாகக் கண்டறியப் பட்டிருக்கின்றன. சித்தர் நெறி என்பது, அது தொன்மையான அறிவியலார் மேற்கொண்ட வாழ்க்கை நெறி எனக் கூறலாம்.

தொகுப்புரை

பழந்தமிழகத்தில் மருத்துவத்தையும் யோக முறை களையும் தோற்றுவித்தவன் ‘சிவன்’எனத் தெரிகிறது. அவனே, முதல் சித்தனும் ஆவான். அவனின் நெறியே சிவநெறி ஆயிற்று.

அவனைத் தொடர்ந்து மருத்துவத்தையும் யோகத்தையும் பயின்றவர்கள் பலர். அவர்களைப் பற்றிய விபரங்கள் தெளிவில்லை. ‘திருமூலர்’ என்பவரால், மருத்துவமும் யோகமும் நடைமுறைக் கல்வியும் பரம்பரை முறையில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. சித்தர் என்னும் மரபுக்கு முதன்மையானவராகத் திருமூலரைக் குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்தே சித்தர் மரபு தோன்றியிருக்கிறது. வாழ்க்கைக்குப் பயனுடைய மருந்தும், மரணத்தை வெல்லும் மன ஆற்றலான யோகமுறையும், அமைதிக்கும் மனித நேயத்துக்கும் புகழுக்கும் காரணமான சித்தர்களின் புறவொழுக் கங்களும் சிறப்புக்குரியவை. அனைவராலும் மேற்கொள் வதற்கு ஏற்றவை.

உரிய முறையில் ஆய்வுகள் நிகழ்த்தி தேவையான திருத்தங்களை நிகழ்த்தி சித்தர்நெறியை வாழ்வியல் நெறியாகக் கொள்வது பயனைத்தரும்.

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions