If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர ஆய்வு

உயிரினங்களின தேவைமருந்து

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பமும் துன்பமும் இயல்பானவை. இன்பம், மகிழச் செய்வது; துன்பம், வருத்தத்தினைத் தருவது. உயிரினங்களை வருத்துகின்ற துன்பம் நோய் எனப்படுகிறது.

“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்''

என்று வள்ளுவர் துன்பத்தினை நோயாக உரைக்கக் காணலாம்.

துன்பத்தினைத் தருவிக்கின்ற நோயை நீக்குவது மருந்து என்பதை,

“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்க
நோய்நோக்கு ஒன்றன்நோய் மருந்தர்''

என்று திருக்குறள் விளக்குகிறது.

நோயைத் தீர்ப்பது மருந்து. அச்செயலைக் குறிப்பது மருத்துவம்; அச்செயலைச் செய்பவன் மருத்துவன் என்று தமிழ் அகரமுதலி விளக்குகிறது.

மருத்துவம்

மருத்துவம், ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றாகவும், அறக்கொடைகள் முப்பத்து இரண்டனுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்

‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் இந்த ஆய்வில் மருத்துவம் சார்ந்த செய்யுள் நடையில் அமைந்த நூல்கள், சுவடிகள் ஆகியன ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தமிழில் வழங்கும் மருத்துவ நூல்கள் அனைத்தும் ‘பதினெண் சித்தர்கள்’ என வழங்கப்பெறும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப் படுகின்றன. இவை, சித்தர் இலக்கியம் எனவும், இவை கூறும் மருத்துவம் சித்த மருத்துவம் எனவும் கருதப்படுகின்றன. இதனுள், மருத்துவம், வாதம், யோகம், ஞானம் ஆகியன பற்றியும் மருத்துவனின் கடமை, நோயாளி கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமுதாயத்திலுள்ள பழக்க வழக்கங்கள், பொது ஒழுக்கங்கள் போன்ற செய்திகளும், தனியே மருத்துவத்தை, வாதத்தை, கற்பத்தை, ஞானத்தைக் கூறும் நூல்களாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறான மருத்துவ நூல்கள் ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் ஆராயப்படுகின்றன.

மருத்துவ ஆய்வு பற்றிய நூல்கள்

தமிழ் மருத்துவம் சார்ந்த ஆய்வு நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் பல. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிறப்பான சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஆர். எஸ். அகர்வால் என்பவரின் Secrets of Indian Medicine (இந்திய மருத்துவத்தின் இரகசியங்கள்) என்னும் நூல் இந்திய மருத்துவத்தின் வரலாற்றினை ஆராய்ச்சி நோக்கில் எடுத்துரைக்கிறது. மருத்துவத்தினால் உண்டாகும் குணநலன்கள், உடலியலைப்பற்றி இந்திய மருத்துவம் கூறும் முறைகள், முக்குற்றங்கள், மருத்துவத்துக்கு ஏற்ற முறை, ஏலா முறை, நோய், நோய்க்கான மருந்து, நோய் தடுக்கும் மருந்து, உடலைக் காக்கும் உயிரணுக்கள் நுண்சத்துகள் (vitamins) போன்ற மருத்துவச் செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நூல் முழுவதும் கண், கண்ணோய், கண் மருத்துவம், கண் மருத்துவன் ஆகியன பற்றியே அதிகம் குறிப்பிடுவதால் இந்நூல் கண் மருத்துவ நூல் எனல் பொருந்தும்.

பி. குடும்பையாவின் Ancient Indian Medicine (பண்டைய இந்திய மருத்துவம்) ஓர் ஆய்வு நூல் எனலாம். இது இந்திய மருத்துவ முறைகளை ஆங்கில மருத்துவ முறைகளுடன் ஒப்பிட்டு ஆராய்கிறது. பண்டைய இந்தியர்களிடம் காணப்பட்ட பில்லி, சூன்யம், தாயத்து, மந்திரம், மாந்திரீகம் போன்ற மாந்திரீக மருத்துவ முறைகளைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து மருந்து முறை, அறுவை மருத்துவமுறை என இருவேறு முறைகளாக இந்திய மருத்துவம் வளர்ச்சி பெற்ற முறையைக் கூறுகிறது. ஆயுர் வேதமே இந்திய மருத்துவமுறை எனக் கருதுகிறது.

தே. ஆண்டியப்பன், இரா. குமாரசாமி ஆகியோரின் ‘சித்த மருத்துவம்’ என்னும் நூல் சித்த மருத்துவத்தின் சிறப்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது. சித்த மருத்துவம் அடிப்படையில் விஞ்ஞான மருத்துவமாக அமைந்துள்ளதென விளக்குகிறது. இம்மருத்துவம் சாங்கியத் தத்துவத்தையும் சைவ சித்தாந்தத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது.

ங. பலராமையாவின் ‘The Greatness of Siddha Medicine’ (சித்த மருத்துவத்தின் பெருமை) கூ.ங. சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் ஆங்கிலம் விளக்கக் குறிப்பு அகராதியிலிருந்து தொகுக்கப் பெற்ற தாகும். இந்நூல், சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்று கூறி, இம்முறையை உருவாக்கிய சித்தர்கள் தமிழர்கள் என்னும் நோக்கில் ஆராய்கிறது. 96 வகை தத்துவத்துக்கும் உடலுக்கும் உரிய தொடர்பு களை விளக்குகிறது.

மு. பசுமலையரசுவின் ‘செந்தமிழும் சித்த மருத்துவமும்’ எனும் இந்நூல் தமிழ் இலக்கியத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உரிய தொடர்பை விவரிக்கிறது. குறிப்பாக, திருக்குறள், திருமந்திரம் ஆகிய நூல்களுக்கும் மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பினையும், அம்மருத்துவமே சித்த மருத்துவம் எனவும் குறிப்பிடுகிறது.

க. ஜெயாவின் works of Cittars and their place in Hindu Religious Thought in Tamil Literature, (தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இந்துமதச் சிந்தனைகளில் சித்தர்களின் படைப்புகளும் இடமும்) என்னும் நூல் ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு. இது தமிழ்ப் புராண இலக்கியங்களில் காணப்பெறும் சித்தர்களையும் தெய்வங்களோடு சித்தர்களை இணைத்துக் கூறப்பட்டதையும் குறித்து ஆராய்கிறது. இந்து மதத்துடன் சித்தர்களை இணைத்துப் பார்த்ததன் நோக்கத்தை விவரிப்பதாக இருக்கிறது.

நீ. கந்தசாமிப் பிள்ளையின் ‘History of Siddha Medicine’ (சித்த மருத்துவ வரலாறு) என்னும் நூல், சித்த மருத்துவச் செயல் முறைகளையும் நோயறிந்து செய்யும் மருத்துவத்தின் தன்மையையும் வரலாற்று முறையில் விளக்குவதுடன், சித்த மருத்துவச் சுவடிகளைப் பற்றிய செய்திகளையும் சுட்டுகிறது.

க.வெங்கடேசனின், ‘தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்’, ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு. இது, தொல்காப்பியம், சங்கநூல்கள், காப்பியம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலுள்ள மருத்துவக் குறிப்புகளைக் குறிப்பிட்டு அவை சித்த மருத்துவத்தின் கூறுகள் எனக் கூறுகிறது. சித்த மருத்துவ நூல்களிலும் நாட்டுப்புற இலக்கியங் களிலும் காணப்படும் மருத்துவக்கலை நுட்பங்களை ஆராய்கிறது.

வே. இரா. மாதவனின் ‘கண் மருத்துவம்’ என்னும் நூல் அரசின் சுவடி நூலகம், சரசுவதி மகால், கேரளப் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலுள்ள 14 சுவடிகளிலிருந்து கண் மருத்துவத்தை ஆராய்கிறது.

வே. இரா. மாதவனின் ‘தமிழ்ச் சுவடிகளில் குழந்தை மருத்துவம்’ என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, குழந்தை மருத்துவத்தைச் சுவடிகளிலிருந்து பிரித்தாய்கிறது. இது, சித்த மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் எந்த நிலையில் இடம் பெற்றிருந்தது என்பதை விளக்கு வதாக இருக்கிறது.

இதுவரை, தமிழில் உள்ள மருத்துவ நூல்கள் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தினை வழங்கும் நோக்கில் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை. இத்தேவையை நிறைவு செய்யும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழில் வழங்கும் மருத்துவ நூல்களில் திருமூலரின் திருமந்திரத்தைத் தொடக்கமாகக் கொண்டு, தேரர், யூகி ஆகியோர் என அமைகின்ற அறிஞர்களின் நூல்கள் ஈறாக உள்ள மருத்துவ நூல்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த மருத்துவ நூல்கள் அனைத்தும் சுவடிகளில் எழுதப் பெற்றவை. அவற்றுள் ஒரு சில நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப் பட்டுள்ளன. பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் உரைநடையில் அமைந்தவையும் செய்யுள் நடையில் அமைந்தவையும் காணப் படுகின்றன. இவற்றுள் செய்யுள் வடிவிலமைந்த மருத்துவ நூல்கள் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

அண்மைக்காலத்தில் தமிழ் மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உரைநடையில் வெளிவந்துள்ள மருத்துவ நூல்கள், இயற்கை மருத்துவம், குடும்ப மருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், உணவு மருத்துவம் எனப் பலவாகும். இவற்றுடன் ஆங்கில மருத்துவத்தையும், ஓமியோபதி, யுனானி ஆகிய மருத்து வங்களை அடிப்படையாக கொண்டு உரைநடையாக வெளிவந்த நூல்களும், சித்தர் பெயரில் வழங்காமல் வேறு பெயர்களில் வழங்குகின்ற / வெளிவந்துள்ள நூல்களும் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தமிழ் மருத்துவம் பற்றி அறிய தமிழில் உள்ள மருத்துவ நூல்கள், சுவடிகள் ஆகியவற்றின் அளவு, அமைப்பு, அவற்றுள் காணப்பெறும் மருத்துவ உண்மைகள் ஆகியவற்றைக் கண்டறிதல் இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இந்நோக்கம் பின்வரும் குறிக்கோள்களை உள்ளடக்கியது.

1) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை அறிதல்.
2) தமிழ் மருத்துவ நூல்களின் அளவு, அமைப்பு ஆகியவற்றைத் தொகுத்தும் பகுத்தும் ஆய்தல்.
3) தமிழ் மருத்துவ நூல்களில் சொல்லப்பட்ட மருத்துவ முறை களைத் தொகுத்தும் பகுத்தும் ஆய்தல்.
4) தமிழ் மருத்துவ நூல்களின் வழியே அறியப் பெறும் சித்தர் நெறியினை வெளிக் கொணர்தல்.
5) தமிழ் மருத்துவ நூல்களில் அமைந்துள்ள இலக்கியக் கூறு களைக் கண்டறிதல்.

இந்த ஆய்வுக்குத் திருமூலரின் திருமந்திரம் தொடங்கி தேரர், யூகி ஆகிய மருத்துவ அறிஞர்களின் மருத்துவ நூல்கள் ஈறாகத் தமிழில் கிடைக்கும் மருத்துவ நூல்கள், சுவடிகள், கையெழுத்துப் படிகள் ஆகியன ஆய்வு மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. தமிழ் மருத்துவம் பற்றிய ஆய்வு நூல்கள், ஆய்வேடுகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன இந்த ஆய்வுக்குத் துணைமை ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இந்த ஆய்வேட்டினை எழுதுவதற்கு வரலாற்றியல் முறையும், விளக்கவியல் முறையும் பின்பற்றப்படுகின்றன. தேவைப்படு மிடங்களில் ஒப்பியல் முறையும் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பொருளை ஆய்வதற்குத் தொகுப்பியல் முறையும் பகுப்பாய்வு முறையும் கையாளப்பட்டுள்ளன.

இயல்பகுப்பு முறை

இந்த ஆய்வு முன்னுரை, முடிவுரை ஆகியன நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது.

அவை வருமாறு;

தமிழ் மருத்துவத்தின் வரலாறு.
தமிழில் மருத்துவ நூல்கள், பட்டியல், தொகுப்பு, பகுப்பு.
தமிழ் மருத்துவம்.
சித்தர் நெறி தொகுப்பு.
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்.

இவ்வாய்வேட்டின் முதல் இயலான முன்னுரை, தமிழ் மருத்துவம் பற்றிய அறிமுகம், மருத்துவ மூல நூல்கள், மருத்துவ ஆய்வு நூல்கள், இந்த ஆய்வின் நோக்கமும் குறிக்கோள்களும், ஆய்வு நெறி முறைகள் இயல் பகுப்பு முறை ஆகியவற்றை உள்ளடக்கியது.

‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு’ என்னும் இரண்டாம் இயல் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலானவற்றுள் காணப்பெறும் மருத்துவச் செய்திகள், திருமந்திரம் தொடங்கி, தேரர் மருத்துவ நூல் ஈறாக உள்ள மருத்துவச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு ஆராயப்படுகிறது.

‘தமிழில் மருத்துவ நூல்கள்’ என்னும் மூன்றாம் இயல், ஆசிரியர், இலக்கியம், எண்ணிக்கை, சிறப்பு, நோய், நிகண்டு, மருந்து, வாகடம், யாப்பு, அளவு, குணம் போன்றவற்றின் அடிப்படையில் மருத்துவ நூல்களை வகைப்படுத்தி அவற்றின் அமைப்பு, அளவு, நோக்கம், சிறப்பு ஆகிய தன்மைகளை ஆராய்கிறது.

நான்காம் இயலாகிய ‘தமிழ் மருத்துவம்’ என்னும் இயலில், தமிழ் மருத்துவத்தின் அடிப்படையான பஞ்சபூதக் கொள்கை, எண்வகைத் தேர்வு, நோய்கள், மருந்து, மருத்துவன், மருந்துப் பொருள்கள், மூலிகை, சுத்தி, கற்பம், வர்மம், வர்ம மருத்துவம் ஆகியன ஆராயப்படுகின்றன.

‘சித்தர் நெறி’ என்னும் ஐந்தாம் இயலில், சிவம், சித்துகள், சித்தர், தெளிவு, மரபணுமுறை, சித்தர் மறைபொருள் போன்ற சித்தர் நெறிகள் ஆராயப்படுகின்றன.

ஆறாம் இயலான ‘தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்’ என்னும் இயலில், நூல்களின் வடிவம், செய்யுள், நடை, உத்தி, வழக்கு, உவமை போன்ற இலக்கியக் கூறுகள் ஆராயப் படுகின்றன.

இறுதி இயலான முடிவுரையில் இந்த ஆய்வின் பயனாகப் பெறப்படும் முடிவுகளும் கண்டறிந்த உண்மைகளும் தொகுத் துரைக்கப்படுகின்றன.

இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்த முடிவுகள், உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மருத்துவம் தொடர்பாக மேற்கொள்ளப் பெற வேண்டிய செயல் திட்டங்களும் (Action Plan), ஆய்வுத் தலைப்புகளும், பரிந்துரைகளும் இடம் பெறுகின்றன.

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions