If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.

பயன்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதப்பட்டால், மரபுவழி மருத்துவத்தின் மூலம் மரபு நோய்களும்' உலக மருத்துவத்தில் மருந்துகள் கண்டறியப் படாதிருக்கும் பல நோய்களும் எவ்வாறு குணப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பன அறியக் கூடும்.

வரலாறு எழுது முறை

மருத்துவத்துக்கும் பழமையான இனத்துக்கும் உரிய தொடர்பு, மருத்துவத்தின் தேவையை உணர்ந்த முறை' மருத்துவம் கண்டறியப் பட்டதன் காரணம்' மருத்துவம் நிகழ்ந்த சூழல், மருத்துவத்தினால் உண்டான பாதுகாப்பு' மருத்துவத்துக்குப் பயன்பட்ட பொருள்கள். அவற்றைப் பற்றிய கல்வி போன்றவற்றை முறைப்படுத்தி எழுதுதல் வரலாறு எழுதும் முறையாகக் கருதப்படும்.

வரலாற்று மூலங்கள்

மருத்துவத்தின் வரலாறு எழுதுவதற்குச் சான்றுகள்- பழமையான புதைபொருள் ஆவணங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், தமிழகத்துடன் தொடர்புடைய பிறநாட்டுக் குறிப்புகள்' பழந்தமிழ்க் குடியினர் பற்றிய ஆய்வுகள்' இலக்கண இலக்கியம், சமயத்தின் நடைமுறைகள், வழிபாடுகள், பலியீடுகள்' மருத்துவம் சார்ந்த தொழில் முறைகள்' மரபுவழியினர், பண்பாட்டு நாகரிகக் குறிப்பேடுகள் எனப் பன்முனைச் சான்றுகளைக் கொண்டு எழுதப்படுவது முழுமையான வரலாறு எனக் கருதப்படும்.

தமிழ் மருத்துவத்தின் மூலங்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதுவற்குச் சான்றுகள் எனக் கொள்ளப்பட்டவை. சிந்துவெளி நாகரிகத்தின் குறிப்புகள்' தொல் காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை' பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், பாண்டியர் வரலாற்றுச் சாசனங்கள், சோழர்கால வரலாறு, சைவ மதத்தின் கோயில் தலமுறைகள் போன்றவை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன.

நோக்கம்

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் எவை என்பதைக் கண்டறிவதே ஆய்வு நோக்கமாகக் கொள்ளப்பட்டாலும், வரலாறு என்பதன் ஆரம்பநிலையாகக் கொண்டு மருத்துவத்தின் வரலாறு எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இம்முயற்சி, இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் ஆய்வு மேற்கொள்வோர்க்குத் துணையாக இருப்பதுடன் வழிகாட்டலாகவும் அமையும்.

ஆய்வின் எல்லை

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இவ்வியலில், சங்க காலந் தொடங்கி, யூகி என்னும் மருத்துவச் சித்தர் காலம் வரை' கிடைக்கின்ற குறிப்புகளைக் கொண்டு மருத்துவ வரலாறு ஆராயப்படுகிறது.

இயல் அமைப்பு

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இப்பகுதியில், சங்க இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் தொடர்பான குறிப்புகளைத் தொகுத்து, மருந்து' மருந்துப் பொருள், மருத்துவன், மருத்துவம்' நோய், நோயாளி' நோயில்லா நெறி, உணவே மருந்து' மருந்தே உணவு, உணவுப் பொருள்' அறுசுவை, மருத்துவக் கோட்பாடு' பஞ்சபூதங்களின் பரிணாமம் போன்ற தலைப்புகளில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு ஆராயப்படுகிறது.

பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து

பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து' மான்கொம்பு, பவழம்' தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது 1என்பர்.

அறுவை மருத்துவக் கருவி

புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.

சிந்துவெளியும் வேம்பும்

வேம்பு' இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள் வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி வந்திருக்கின்றனர்,3 என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள் வேம்பும் கடுக்காயும்

தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற

தொல்காப்பியத்துள் வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் 4

எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர்.

வேம்புஅடையாளப் பூ

போர்க்களத்திற்குச் செல்லும் போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத் தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

பழந்தமிழ் வேந்தர்களான சேரன் பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர்.5 இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள் தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின் தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம்.

மனைகளில் வேம்பு

மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ, ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் இறைப்பில் வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

“தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீ இ''6

இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக் காண்கிறோம்.

பெண் மருத்துவர்

போர்க்களத்திற்குச் சென்று, போரில் மார்பில் விழுப்புண் கொண்டு' புண்ணின் கடுப்புடன் மனை திரும்பும் வீரனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக மனைப் பெண்டிர் இருந்திருக் கின்றனர்.

மருத்துவம் பார்க்கும் ஆண்பாலரை ‘மருத்துவர்' என்றும், பெண்பாலரை ‘மருத்துவி' என்றும் அழைக்கும் வழக்கம் இருந் திருக்கிறது.

‘ஆருயிர் மருத்துவி,7 என்று மணிமேகலையைச் சாத்தனார் குறிப்பிடுவதிலிருந்து' ஆண் பெண் இருபாலரும் மருத்துவக் கல்வியுடையவராக இருந்தனர் என்பது புலப்படும்.

இசை மருத்துவம்

நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், மணந்த மணம், இனிய இசை' அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ8

என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்' வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி' நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து' யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.

வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர்9 என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.

இதனால்' மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம் (Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது.

போர்க்கள மருத்துவம்

பண்டைக்கால மருத்துவ முறைகளாகச் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் மருத்துவ முறைகள் அனைத்தும் போர் வீரர்களுக்குப் போரினால் ஏற்படுகின்ற புண்ணையும்' அதற்குண்டான மருந்து, மருத்துவம், மருத்துவன் ஆகியவை பற்றிய செய்திகளாகவுமே காணப்படுகின்றன. காரணம், வீரம் பற்றிய செய்திகளையே புறப் பாடல்கள் கூறுவனவாக அமைவதனால்' அது தொடர்பான செய்திகள் மட்டுமே புலவர்களால் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன.

அறுவை மருத்துவம்

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.

ஒட்டு மருத்துவம் (Plastic Surgery)

இரும்பு உலோகங்களான வேல், வாள்' ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்' இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,11 என்று பழைய நிலைக்கே உடல்நிலை பெற்றது என்பதை' இன்றைய (Plastic Surgery) ஒட்டு மருத்துவத்துடன் ஒப்பிடலாம்.

அத்திப்பாலும் அத்திப்பட்டையும் கடுப்பு, இரத்தப் போக்கு' சீதளம், முற்றிய இரணம்' மேகம் ஆகிய நோய்களைத் தீர்க்குமென மருத்துவ நூல் உரைக்கக் காண்கிறோம்.

"" வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு

நாறுவிர ணங்களெல்லாம் நாடாவாம் கூறுங்கால்

அத்திதரு மேகம்போம் ஆயிழையே! எஞ்ஞான்றும்

அத்திப்பாற் பட்டைக் கறி''12

மருந்தும் பஞ்சும்

இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்'

"" கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணர்''13

என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

மருந்தும் பாதுகாப்பும்

மக்களுக்கு உண்டாகும் பிணியைப் போக்குவது மருந்து. அம் மருந்தைத் தருகின்ற தாவரங்களும் மரங்களும் அழிந்து விட்டால் மருந்தின்றித் திண்டாட நேரும். அதனால்' மருந்தாகும் பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது' எதிர்காலத்தின் தேவையை உணரும் சமூகச் சிந்தனைக் கருத்தாகும். இத்தகைய சமூகச் சிந்தனை, பழந்தமிழ் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அத்தகைய சிந்தனையுடைய மக்கள் மருந்தாகும் மரங்களை' அவற்றிலிருந்து மருந்துகளை எடுக்க வெட்டுகின்ற போது' அவை முற்றிலும் அழிந்து விடாமல், அவற்றிலிருந்து குறைந்த அளவிலேயே மருந்தை எடுத்து' மீண்டும் அவை தளிர்த்து வளரும் விதத்தில் பாதுகாத்தும் இருக் கின்றார்கள் என்பதை'

"" மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்''14

என்று நற்றிணை விளக்குகிறது. மரம் பட்டுப் போகும் அளவிற்கு ஒரே மரத்தில் மருந்தெடுக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இல்லை என்பது பெறப்படுவதனால்' மருந்தின் தேவையை அனைவரும் உணர்ந் திருந்தனர் என்று கூறலாம்.

நெஞ்சக நோய்க்கு மருந்து

நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.

மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதி க்கப்படுகின்ற போதும் உண்டாகும். இந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு' ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.15

அறுவைமுறை மருத்துவம்

அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள் ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள் செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.

சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

"" நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்

புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்''

"" முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு

இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்

பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி

நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''16

மரப்பொந்து போல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; நெய்யில் தோய்த்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண்பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; புண்ணுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர்;பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி, காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

நோயாளர் ஆடை

நோயாளிக்கு அணியவும் போர்த்தவும் செய்கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலியின் மயிரினால் செய்யப்பட்டது என்பர்.

எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை' போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது. பனிக்காலத்தில் அணிவதற்குரியது; கிடைத்தற்கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது.17

இக்காலத்தில் குளிருக்காகவும் பனிக்காகவும் அணியப் படுகின்ற கம்பளி என்னும் ஆட்டு மயிரிலிருந்து நெய்யப் படுகின்ற ஆடையை விடவும் சிறந்ததெனத் தெரிகிறது. கம்பளி ஆடை மென்மையானதில்லை. சட்டையாக அணிவதற்கும் ஏற்றதல்ல என்பதை நோக்கும் போது' எலி மயிராடை சிறந்த ஆடையாக இருக்கலாம்.

சூட்டுக்கோல் மருத்துவம்

உடலில் ஏற்படுகின்ற புண்ணை ஆற்ற மருந்திடுமுன் புண்ணில் புதைந்துள்ள இரும்பு ஆயுதத் துணுக்குகளை வெளியே எடுக்கக் காந்தத்தைப் பயன்படுத்தி' அதனால் புண்ணுக்குள்ளிருக்கும் இரும்பை வெளியே எடுத்த செய்தியைக் கம்பன் கூறக் கேட்கலாம்.

உடலில் கட்டி முதலியன தோன்றினால், அவை அறுவை முறையில் மருத்துவம் பார்க்க வேண்டியதிருந்தால் மருத்துவன் வாளால் அறுக்கின்றான். ஆனால்' அவன் மீது கொண்ட அன்பு, வாளால் அறுக்கும் போதும் குறைவதில்லை என்பதைக் குலசேகராழ்வார் குறிப்பிடுகின்றார்.

"" வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல்''18

இதனைப் போலவே கம்பனும், உடலில் தோன்றுகின்ற ஒன்றை அறுவை முறையால் அறுத்து, கெட்ட உதிரம் நீக்கி' சுட வேண்டியதிருந் தால் சுட்டும் வேறு ஒரு மருந்தினை வைத்தும் கட்டுகின்றனர்.

"" உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றிச்

சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வார்''19

என்பதிலிருந்து' சூட்டுக்கோல் முறையிலும் புண்ணை ஆற்றுகின்ற முறை இருந்தது என்பதால் மருத்துவத்தின் வளர்ச்சி தெளிவாகும்.

குழந்தை மருத்துவம்

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.

இளங்குழந்தைகளுக்குச் செய்யப் படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்' சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டி யிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

"" காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்

கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்

பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்''20

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை' தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி' தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்' குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

கூட்டு மருந்து

பல மருந்துகளைத் தொகையாகக் குறிப்பிடும் சொல் பழந்தமிழரிடையே காணப்படுகிறது. மருந்துகளைக் குறிக்கும் தொகைச் சொல் வழக்கில் இருந்திருந்ததைக் கொண்டு மருந்தியலின் வளர்ந்த நிலையினை உணரலாம்.

‘நிலவரைப்பு'என்பது மருந்தின் தொகைச் சொல். இச்சொல்லைப் பற்றிய கருத்துரை வழங்கிய அடியார்க்கு நல்லார், சல்லிய கரணி' சந்தான கரணி, சமனிய கரணி' மிருத சஞ்சீவினி என்னும் நான்கு மருந்துகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடுகின்றார்.21

கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.

சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து

செய்யும் (இணைக்கும்) மருந்து.

சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.

சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.

மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.

மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அழகுக்கு மருந்து

நாட்டிய நாயகி கலைச் செல்வி மாதவி, தன் காதல் தலைவன் கோவலனுடன் உலாவி வர–தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில், ‘பத்துவகைப் பட்ட துவர்', ‘ஐந்து வகைப்பட்ட விரை', ‘முப்பத்திரண்டு வகை ஓமாலிகை' ஆகிய நாற்பத்தேழு22 மருந்துப் பொருள்களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு. இவை' அழகுப் பொருள்களின் கூட்டு போலும். அப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடிய மாதவி ‘நிறம் பெற்றாள்' என்று குறிப்பிடுகிறது. மருந்து, நோய்க்கு மட்டும் அல்லாமல் உடல் வனப்பிற்கும் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் மருத்துவத்திற்குப் பயன்படுகின்ற ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு குணப் பண்பினைக் கொண்டது. அதேபோல், அம் மருந்துகள் ஒன்றோடொன்று கூடி வினையாற்றும் போது, நேர்வினை, எதிர்வினை ஆகியவற்றைத் தோற்றுவிக்கக் கூடியன. இந்த இரு வகைகளையும் மருத்துவ நூலார்' நட்பு, பகை என்னும் இரண்டு பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர். மருந்துப் பொருள்கள் பற்றிய தேர்ந்த பயிற்சியும் புலமையும் இருந்தால் மட்டுமே இவற்றை அறிய முடியும். அவ்வாறு அறிய நேர்ந்தால் மட்டுமே மருந்துகளைக் கூட்ட முடியும்.

நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஒரே வகையான பண்புகள் உடையவை என்பதை அறிந்தே மருத்துவப் புலமையாளர்களால் இக்கூட்டு மருந்து உருவாகியிருக்க முடியும் என்பதால்' அக்காலத்து மருத்துவர்களின் புலமை பெறப்படுகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு மருந்து

மாதர்கள் மேனி யெழிலுக்கு மருந்து ஊறிய நீரில் நீராடுவதைப் போல' அவர்கள் தங்கள் கூந்தலை வளர்க்கவும் பராமரிக்கவும் அதிகக் கவனம் செலுத்துவர். அழகுக்கு அழகூட்டும் சாதனங்களில் கூந்தல் பராமரிப்பும் இடம் பெறுமாகையால், கூந்தல் ஒப்பனையை விரும்புவர்.

நன்னீரில் நீராடிய பெண்டிர் தமது கூந்தலை அகில் புகையால் உலரச் செய்வர். கூந்தலை வளர்க்கவும், நிறங் கொடுக்கவும்' பேணவும் மான்மதக் கொழுஞ் சேறூட்டி அலங்கரித்தனர். மான்மதக் குழம்பு என்பது கத்தூரிக் குழம்பு என்றும், சவ்வாது என்றும்23 குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் பூக்கள்

சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்' 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி' கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்' அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.

குரல் வளம் தரும் மருந்து

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை' முழவு, தாளம்' கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

"" திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்

துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா

வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை

மன்னூழி வாழும் மகிழ்ந்து''24

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்' மிளகு, சுக்கு' இம்பூரல், பசுவின்பால்' தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.

பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத் தக்கது.

தலைக்குத்துக்கு மருந்து

மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.25

சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.

“தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய ‘இனம் காண இயலாத தலைவலிகளை' (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு' தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவை யாகும்"26 என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

மரணத்தை வெல்லும்/சாவா மருந்து

நெல்லிக்கனி என்றதும், அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்தது நினைவிற்கு வருகிறது. நெல்லிக்கனியைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம். குறிப்பாக'

"" நெல்லி அம்புளி மாந்தி''27

"" புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்''28

"" சுவைக்காய் நெல்லி''29

"" கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி''30

"" சிறியிலை நெல்லித் தீங்கனி''31

என்று சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றுள்' கருநெல்லி என்னும் கனியே சிறப்பிற்குரியதாகக் கருதப்படுகிறது. இது மரணத்தை வெல்லும் ஆற்றல் மிக்கது. கற்ப வகையைச் சார்ந்தது32 என்று கருதப்படுகிறது.

சாவா மருந்து

இயற்கையாக மரணத்தை வெல்ல முடியாது. அது செயற்கை வழி மருத்துவத்தினால் அடையக்கூடும் என்பது மருத்துவக் கொள்கை. அதற்கான மருந்து கற்பம் என்பர். கற்பம் உடலை உறுதியாக்கி நிலைக்கச் செய்வது. இதையே சாவா மருந்துஏ எனத் திருக்குறள் உரைக்கிறது. இம்மருந்து மூன்றுவகைப்படும். அவை நோயைத் தவிர்க்கும் நோவா மருந்து' முதுமையைத் தவிர்க்கும் மூவா மருந்து' சாக்காட்டைத் தவிர்க்கும் சாவா மருந்தென பாவாணர் குறிப் பிடுகிறார்.33

விலங்கு' தாவர மருத்துவம்

பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல' மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்' உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

மாட்டுக்குச் சூடு

மாடுகளுக்குச் சூடு வைப்பது நோய்த் தடுப்பு நடவடிக்கை எனவும், வயிற்றுக் கழிச்சலைத் தவிர்ப்பது எனவும் கூறுவர். அம்முறை இன்றளவும் கோவலர்களிடம் காணப்படுகிறது. அம்முறை போலவே' பண்டைக்கால முல்லை நிலக் கோவலர்கள், ‘இருப்புக் கோலால்' சூடு போட்டிருக்கின்றனர். அதை, ‘சுடுபடை'34 என்று முல்லைக் கலி குறிப்பிடுகிறது.

யானைக்கு வயா நோய்

பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது.35

யானைக்குக் கருச்சிதைவு

கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை'36 என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

எள்ளின் "மகுளி' நோய்

தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் ‘மகுளி' என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும்37 உரைக்கப்படுகிறது.

மருந்தின் பெயரால் அமைந்த சங்க நூல்கள்

மருந்தின் பயனை உணர்ந்திருந்த சங்க கால இலக்கியப் புலவர்கள், தாங்கள் இயற்றிய நூல்களுக்கு மருந்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறு அமைந்த நூல்களாகக் காணப்படுபவை திரிகடுகம்' ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்று நூல்களாகும்.

இந்நூல்கள் மனத்தில் தோன்றுகின்ற மாசுகளை நீக்கி, மக்களை நல்வழிப் படுத்துவதற்காக இயற்றப்பெற்ற அறநூல்களாகும். இந்நூலில் கூறப்பட்டிருக்கும் கருத்துப் பொருள்களும் மருத்துவ நூல்களின் வழி அமைக்கப் பட்டிருக்கக் காணலாம்.

திரிகடுகம்

‘திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு' திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல' இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமையும்.

சிறுபஞ்சமூலம்

‘சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

ஏலாதி

‘ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்' சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமையும்.

மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்' ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்' பழந்தமிழர் மருத்துவ முறை என்பது உணரத்தக்கதாகும்.

மருந்தின் பெயரால் சங்ககாலப் புலவர்கள்

மருந்து' மருத்துவம் ஆகியவற்றின் பயனையும் சிறப்பினையும் அறிந்த சங்ககாலப் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவ்வாறான வர்களுள் நல்லாதனார் (திரிகடுகம்)' காரியாசான் (சிறுபஞ்சமூலம்), கணிமேதாவியார் (ஏலாதி), கபிலர் (குறிஞ்சிப் பாட்டு) ஆகிய நால்வரும் தங்கள் பெயரை மருந்தின் பெயரால் அமைத்துக் கொள்ள வில்லை என்றாலும்' இவர்களின் பாடல்களில் மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், மருந்துப் பொருளின் பெயரால் புலவர்கள் என்பது, அவர்களின் பெயரைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வாறு பெயரமைந்த புலவர்கள், கடுகு பெருந்தேவனார் (கடுகு)38 போந்தைப் பசலையார் (பனை),39 வெள்ளெருக்கிலையார் (வெள் ளெருக்கு),40 காவட்டனார் (காவட்டம் புல்),41 இந்நான்கு பெயரிலும் பொதிந்துள்ள மருந்தின் பெயர்கள் மருத்துவ நூல்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

மருத்துவப் புலவர்கள்

மருந்தினை அறிந்த புலவர்களைப் போல மருத்துவத்தைத் தொழிலாக கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர். திருவள்ளுவ மாலை11ஆம் பாடலைப் பாடிய புலவர் ‘மருத்துவன் தாமோதரனார்' என்பதாகும். இவரும், இவரைத் தொடர்ந்து, ‘மருத்துவன் நல்லச் சுதனார்' என்பவர், பரிபாடலின் 6,8,9,10,15,19 ஆகிய ஆறு பாடல் களுக்கும் இசையமைத்த இசையறி புலவராகக் காணப்படுகின்றார்.

இவர்கள் இருவரின் பாடல்கள் சங்கப் பாடல் தொகுப்பில் இடம் பெறவில்லை. என்றாலும் ‘மருத்துவன்' என்னும் தொழிற் பெயரை, பெயர் அடையாகக் கொண்டு வழங்கிவரக் காண்கிறோம்.

சங்ககால மருத்துவப் பாடல்கள்

சங்க காலத்தில் இலக்கியப் புலவர்களாலும் மருத்துவப் புலவர்களாலும் இயற்றப் பெற்ற பாடல்களில், இலக்கியப் புலவர்கள் இயற்றிய பாடல்களில் ஒரு சில மட்டும் சங்க இலக்கியம் என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. சங்க காலப் புலவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நற்றத்தனார்' மது மலர்த்தண்டார்ப் பகுமனார் ஆகிய புலவர்களின் பாடல்கள் சங்கத் தொகுப்பில் காணப் பெறவில்லை. காரணம், சங்கப் பாடல்கள் அகம், புறம் என்னும் இரண்டு பொருட்பகுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றதாகும். இப்புலவர்களின் பாடல்கள் இவ்விரண்டு பொருட் பகுப்பில் அடங்காமல் மருத்துவப் பொருளை உள்ளடக்கியதாக இருந்தமையால், சங்க நூல் தொகுத்தோரால் விடப்பட்டிருக்கின்றன.

‘தேரையர் யமக வெண்பா' என்னும் மருத்துவ நூலுக்குள் உரைமேற்கோளாக அமைந்த பாடல்கள் பல. அவற்றுள் சில சங்கப் பாடல்கள் எனவும், சங்கப் புலவர்கள் பெயரும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அந்நூல் உரையாசிரியர் குறிப்பிட்ட சங்கப் பாடல்கள் சங்க நூல்கள் தொகுப்பினுள் காணப்பெறாதவை.

நளிர்சுரத்திற்கு மருந்து

இரசம்' தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்நாடுகள் உள்மருந்தாக அவற்றைப் பயன் படுத்துவதில்லை. ஆனால், அவற்றைத் தமிழ் மருத்துவர்கள் பண்டு தொட்டே பயன்படுத்தியுள்ளனர். சங்ககாலப் புலவரான நற்றத்தனார்' தாளகம் நளிர்சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

முந்நீர் சிவணிய செந்நீர் யாக்கை

முப்பிணி யானவை வெப்பமா நளிரே

மாறிய நாள்பகல் வீறிய யாமமும்

மாசுறு காய மூசுபு வெவ்வினை

மருந்தனு பானமும் இருந்தையில் தாளகம்

அடுநறா முத்திறம் இடுமுறை இல்செய

மீச்சுரம் ஆகிய மீசுரப் படலிகை

பெருமூல வைக்கெதிர் பூளைக் குவையே. (நற்றத்தனார்)

காற்றிற்கு எதிர் நிற்கவொண்ணாப் பூளைப் பூவைப் போல, மிக்குயர்ந்த நளிர்சுரமும் தாளகத்தின் முன் மறைந்தோடிப் போகிற தாம். நச்சுத் தன்மை உடைய தாளகம், சுத்தியினாலும் (Purification) மூலிகைச் சுருக்கினாலும் (Triturah) மருந்தாகிறதென்பர்.42 இதனால் தாளகம் என்னும் மருந்தின் பயன் சங்க காலத்திற்கும் முன்னரே அறியப் பட்டிருந்தது என்பது தெரியவருகிறது.

முப்பிணிகளைப் போக்கும் மருந்து

சங்கப் புலவர் பாடிய ஆற்றுப்படை ஆசிரியப்பா என்னும் பாடல் உரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அப்பாடல், சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தானதால், அது வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று வகை நாடிகளின் குற்றங்களில் உண்டாகக் கூடிய முப்பிணிகளைப் போக்குகின்ற மருந்தாகும் என்னும் கருத்தை உரைப்பதாக அமைந்துள்ளது.

"" சத்தி பீசத் தாவளப் பொடிநிறை

யுத்த மாதி யோரிரு நாற்பால்

வினைமதி யாகா விதிமற் றுளசில

வாருணத் தினைமுதல் வரைவன மத்திமம்

வாடுறு நூன்மைய வாய்க்கின்மே வளிமுத

லாகிய நோய்க் கணமடைக்கலப் படுமுனம்

வேகிய மருத்துவர் வெருக்கொளச் சென்றது

நோய்ப்பகை யாளரோ நொடிந்தன சிதறிப்

பேய்ப்புல னெனவயிர் பெரும்பிணி யாளுநர்

தேவகுலமே யதுபு தெருமரற் பருவர

லாவகுலா லன்றிரி யாழியிற் பெய்துற்

றியங்குபு மாற்றமு மிலரென முன்னரோ.''43

(மருத்துவ ஆற்றுப்படை)

நஞ்சு நோய்க்கும் பெண்ணினச் சேர்க்கையால் வரும் நோய்க்கும் மருந்து.

உணவினாலும் பிறவற்றாலும் உடலுக்குள் செல்கின்ற நஞ்சினால் உண்டாகின்ற நோய்க்கும்' பெண்ணினச் சேர்க்கையினால் தோன்றக் கூடிய உறுப்பு நோய்க்கும் கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்தின் குறிப்புகள் சங்கச் செய்யுள் என உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலொன்றில் காணப்படுகிறது.

"" பன்னிரு வகைபெறு முன்னிய பருவர

லினமிவை முதலென நனவுறு வளிமுத

லாகிய பருவரண் மியவுயிர் நிலை

யேகிய நாபியி லுறுவிட முறப்

பெறுமொரு நலிவரப் பெற்ற தான் மேன்முறை

செறிவுறு மொன்பது தீவினை வகையொரு

பொரியரவு ருவிடப் போக்கு மேன் மீறிய

பெண்போகப் பிணி நண்பயப் பிணியொரு

பன்னிருவகை யெனப் படருறு மிடரென

வந்தடர் தானை மறவரு மிறுதிச் செய்

காலனிற் காந்துபு கனலெனக் கன்னற்

வேலென பற்பல வினையமா விளைத்துழி

நால்வகை யாணமு மேலணிக் காப்பும்

பவனனைக் கண்டுழிப் பஞ்சினி லிரியவாங்

கெய்திய மீளியை யொய்தினிற் கண்டுழிக்

கவன்ற நெஞ்சினர் கவன்ற வானனமென்

பங்கயங் குவியப் பொங்கொளி கான்று

நெடுமா லுந்திக் கடி ""மலர் பூத்தெனப்

பின்னருங் கவினுறு முன்னிய கங்குலில்''44

என்று முற்றுப் பெறாத பாடலாக இருக்கக் காண்கிறோம். இப்பாடலின் தொடர்ச்சி கிடைத்தால் முழுமையாகப் பொருளறியும் வாய்ப்பு ஏற்படும்.

மருத்துவக்குலம்

பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன்காரி' என்பது குறிப்பிடத்தக்கது45 என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். ஒரு குலத்தினரே மருத்துவ இனத்தவராக இருந்தனர் என்பதனால், பண்டைய தமிழகத்தில் மருத்துவம் தழைத் தோங்கியிருந்ததாகக் கருதலாம்.

மருத்துவர் குடியிருப்பு

பூம்புகார் நகரத்தில் அமைந்திருந்த வீதிகளில் மருத்துவத் தொழிலுடையோர் ஒரு தெருவில் குடிவாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்தகைய மருத்துவக் குடியினர் ‘ஆயுள் வேதர்' என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள், மருத்துவத் தொழிலுடன்' மருத்துவ நூலும் இயற்றுவோர் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இக்குறிப்பினால், மருத்துவத் தொழிலுடையோர் மருத்துவ நூலாசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.46

மருத்துவன்

இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மருத்துவம் சார்ந்த மரம்' செடி, கொடிகள் இடம் பெறுவதைச் சிறப்பாகக் கொள்ள முடியாதெனினும், மருந்து தரும் பயன்களினால் மருந்துப்பொருள் இன்னது என அறிந்து' அவற்றைப் போற்றிப் பாதுக்காக்கும் தன்மையையும் பெற்றிருந்தனர் எனும்போது, மருத்துவம் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்து கொண் டிருந்தது என்பதை அறிய முடிகிறது.

மருத்துவன் தருகின்ற மருந்தானது உடலுக்குள் சென்று நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தருவது போல' எனது சொற்கள் அவனுடைய மனத்தில் தோன்றிய மாசுகளைப் போக்கும் நன் மருந்தாயின என்னும் கருத்தமைந்த பாடல்,47 பாலைக் கலியில் இடம் பெற்றிருக்கக் காணலாம். இதனால்' மருத்துவன் தருகின்ற மருந்து, துன்பத்தினை நீக்குவது என்பது உணர்த்தப் படுகிறது.

மருத்துவன் ஒழுக்கம்

தனக்கு உற்ற நோயை நீக்குமாறு, மருத்துவனிடம் நோயாளி வேண்டி கேட்டுக் கொண்ட பின்னும் மருத்துவன் நோயாளிக்கு மருந்து அளிக்காவிட்டால் அது கொடுமை. என்று நெய்தற்கலி48 உரைக் கின்றது.

நோயாளிக்கு வந்த நோயறிந்து நோய்க்கு மருந்தூட்டுவதே மருத்துவனின் கடமையும் அறமுமாகும். நோயாளி விரும்பும் பொருள்களை யெல்லாம் தருவது மருத்துவ முறையுமன்று. நோயாற்று கின்ற மருத்துவனைப் போற்றி, ‘அறவோன்' என்று பாராட்டுகின்ற பண்பு மக்களிடையே மிகுந்திருந்தது.49

தமிழ் மருத்துவ நெறி

தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்' தமிழ் மருத்துவ நெறியை வகுத்துரைப் பதாகக் கருதலாம். இந்த அதிகாரத்தில் மருந்து, மருத்துவன்' மருத்துவம், மருத்துவ நூலோர், நோய், நோயாளி' நோய்க்கான காரணம், நோயில்லா நெறி, உணவு நெறி ஆகியன விளக்கப் படுகின்றன.

மருந்து/மருத்துவம்

உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.

"" உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து''50

உற்றவன்நோயுற்றவன்; தீர்ப்பான்மருத்துவன்; மருந்து மருத்து வனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் (இணிட்ணீணிதணஞீஞுணூ) எனப் பொருள் உரைக்கிறது.

மருத்துவன் நோயாளியை நாடி, நோய் வந்ததன் காரணத்தை நாடி' வந்துற்ற நோய் எது என்பதை நாடி, பின்னர் வந்துற்ற நோயைத் தீர்க்கும் மருந்து எது' எவை என்பனவற்றை நாடி, அதன்பின் எவ்வகையில் மருந்தூட்ட வேண்டும் என்பதை நாடிச் செய்ய வேண்டும்.

நோயுற்ற நோயாளியின் அளவு, அதாவது உடல் பருவம்' வலிமை, மனநிலை ஆகியவற்றையும்' நோயின் அளவு, அதாவது தொடக்கம்' இடை முதிர்வு, வன்மை' மென்மை ஆகியவற்றையும், நோயுற்ற காலம், நோய் தொடருங்காலம்' மருத்துவம் பார்க்க வேண்டிய காலம், மருத்துவம் பார்க்கும் காலம் ஆகியவற்றையும் அறிந்து மருத்துவம் செய்பவனே, மருத்துவம் கற்றவனாகக் கருதப்படுவான்51 என்று மருத்துவனுக்குரிய செயற்பாட்டினை விவரிக்கிறது.

நூலோர்

நூலோர் என்பது மருத்துவ நூலோரைக் குறிப்பிடும். நோய்வரும் வழிகளையும்' நோயறியும் முறைகளையும், நோயின், வகைகளையும் அவற்றிற்குரிய மருந்து எது என நுண்ணறிவின் திறத்தால் வகுத்துரைக்கப் பெற்ற மருத்துவ நூலின் ஆசிரியரை அல்லது மருத்து வத்தின் வழித் தோன்றிய முன்னோர்களை ‘நூலோர்' என்னும் பெயரால் உரைப்பர்.

மருத்துவம் கூறும் மூன்று

மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.

"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று''52

நோய்

ஒருவன் உண்ணுகின்ற உணவு அவனுடைய வயிற்றின் கொள்ளளவை விடவும் குறைவாக இருந்தால்' உணவு செரித்து, மீண்டும் பசியை உண்டாக்கும். அதனால், நோய் வரும் வழி தடைப்படும். அவ்வாறில்லாமல் வயிற்றின் அளவைவிடவும் அதிக அளவு உணவை வயிற்றுக்குள் திணித்தால் செரிப்புத் தன்மை குறைந்து நோய் வருவதற்கு வழியேற்படும்53 என்று விளக்குகிறது.

நோய்க்குக் காரணம்

நோய் உண்டாவதற்குக் காரணம். உடலுக்கு ஒவ்வாத குற்ற முடைய உணவுகளை உண்பதும்' உணவு உண்பதற் காகக் குறிக்கப் பட்டுள்ள காலத்தைக் கருத்திற் கொள்ளாமல் பெருந்தீனி தின்பதுமே யாகும்.

நோயில்லா நெறி

நோயில்லா நெறி என்பது வாழ்வின் பொது நெறி எனக் கொள்ளலாம். இது எல்லா நிலையினருக்கும் எல்லா வயதினருக்கும் பொருந்துமாதலான் பொது நெறியாகக் கருதலாம்.

மருந்து தேவைப்படுவது, நோய் என ஒரு தீமை தோன்றிய பின்னரேயாம். அதனால் நோய் வந்தபின் போக்குவதை விட, வராமல் தடுப்பதே நல்லநெறி எனப்படும்.

"" நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்''54

என்னும் குறள் கருத்திற் கொள்ளத்தக்கது.

நோயென்பது வேண்டாம் என்றால், மருந்தென ஒன்றும் வேண்டாம். மருந்து வேண்டாம் என்றால் தாம் உண்ட உணவு செரிமானமடைந்து வெளியே சென்றபின்' உணவு உட்கொள்ளும் பழக்கத்தினை மேற்கொண்டால்' மருந்தென்பது வேண்டாம் எனப்படும்.55

உண்ட உணவு செரித்துக் கழிவாக வெளியே சென்றது என்பதையும்' தாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதையும் அறிந்தவனின் உடம்பு நீண்ட நாள்கள் நோயின்றி வாழும்56 என்பது நோயில்லா நெறிமுறையாகக் கொள்ளத்தக்கவை.

உணவு நெறி

நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறி. அது தினவொழுக்கம், நடைப்பயிற்சி, உறக்கம் போன்றவையாகும். உணவின் நெறிமுறை தவறினால் நோயில்லா நெறி என்பது பிழையாகிப் போகும். ஆகவே' உணவு நெறியை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையே நோயில்லா வாழ்க்கையாகக் கருதலாம்.

உண்ணும் உணவில் குற்றமுடைய உணவு, நல்ல உணவிலும் உண்போர் உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கிவிட்டு' உடலுக்கும் மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால்– நேர்ந்தால்' (நேருமா என்பது வேறு) உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர்.57.

குற்றமுடைய உணவு என்பது கெட்டுப்போன உணவு என்றும், ஒருவன் உண்ணும் அளவுக்கு மீறி உண்ணப்படுகின்ற உணவையும் குற்ற உணவு என்றும் கொள்ளலாம். இத்தகைய உணவு நோயை உண்டாக்கி உடலுக்குத் துன்பத்தைத் தரும்.

உயிர்க்கு ஊறுவிளைக்கும் உணவு என்பது ஒவ்வாத உணவு ஆகும். ஒவ்வாத உணவாவது' சேரக் கூடாத காய்கறிகளை ஒன்று சேர்த்துச் சமைப்பதால் ஒவ்வாமை தோன்றும். அதாவது உணவு நஞ்சு. அத்தகைய உணவு உயிர்க்கு ஊறு விளைவிக்கும் என்பதைக் குறிப் பிட்டே, ஊறு பாடில்லை உயிர்க்கு என்று உரைக்கப்பட்டது.

உணவு உண்ணத் தொடங்கும் முன், முன்னர் உண்ட உணவு முற்ற செரித்துப் பின் பசி முற்றிய நிலையை அடைந்த பின்பே உணவுண்ண வேண்டும்58. என்று உணவு நெறி வகுக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கைக்குரிய பக்குவங்களை வாழ்க்கை நெறியாக' மருத்துவ நெறியாக, உணவு நெறி உரைக்கப் பட்டிருப்பது உணர்தற் குரியது.

மருந்தே உணவு, உணவே மருந்து

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி' நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்''59

என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

உணவின் அளவு

உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர். பெருந்தீனி தின்றால் நோயும்' சிறு தீனி தின்றால் வலுவிழந்து நோயும் வரக்கூடும் என்றறிந்து'

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே"60 என்னும் கொள்கையை வகுத்திருந்தனர். ஒவ்வொருவரும் நாழி என்னும் அளவு உணவு மட்டுமே உண்ண முடியும் அல்லது உண்ண வேண்டும் என்பதும் ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை இடையாடை என உடுத்த வேண்டும் என்பதும் கற்றனர்.

உணவுநெறி உடலைப் பேணிப் பாதுக்காப்பது;வலிமை கொள்ளச் செய்வது; நோயைத் தவிர்ப்பது என்பதால், வாழ்க்கைக்கு உகந்தது. அந்நெறியின் மேன்மையை உயிராகக் கருதிப் பாதுகாத்தனர் என்பதற்குச் சான்றாக,

பசித்திருப்பது நன்மையைத் தரும். உணவு உண்டபின்பு வாயைக் கழுவ வேண்டும். நோயாளிக்கு உணவளித்தால் அது செரியாமையால் துன்பம் தரும்61 என்றெல்லாம் அறிவுறுத்தக் காண்கின்றோம்.

உடலில் தூய்மை

ஒவ்வொருவரும் உடலைத் தூய்மையாக வைத்துக் கொண் டிருந்தாலேயே பாதி அளவு நோயின் தாக்குதலிலிருந்து மீளலாம். உடலில் தூய்மையில்லாமல் நல்ல உணவை உட்கொண்டாலும் நோய் வரக் கூடும்.உணவுண்ணும் முன் நீராடி உணவுண்ண வேண்டும்62 என்னும் கருத்துடையவர்களாக இருந்தனர்.

உணவுண்ணும் முறை

வாழ்க்கை நியதிகளை உரைப்பதே ‘ஆசாரம்' எனப்பட்டது. அவ்வாறான நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை'

‘உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து உணவுண்ண வேண்டும். நின்று கொண்டோ படுத்துக் கொண்டோ கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடாது என்கிறது.63

உணவு உண்ட பின் நடை

உணவு உண்ட பின்னர் ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறுவர். நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்துவர். அத்தகைய மருத்துவச் சிந்தனையும் உடல் நலனைப் பேணுகின்ற சிந்தனையும் பண்டைக் காலத் தமிழர்களிடையே மிகுந்து காணப்பட்டிருக்கிறது.

‘உணவு உண்ட பின்னர் நூறடி தூரம் உலவிவிட்டு வர வேண்டு மென்று மருத்துவ நூல் கூறுவதாகவும், அதற்கு ஏற்றவாறு உணவு மண்டபம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும் சிந்தாமணி உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்' .64

உண்கலங்கள்

உணவு உண்பதற்காகப் பயன்படுத்தப்படும் உண்கலங்கள் உணவுக்கும் உணவுண்போர் உடலுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்பது பொது விதி. அத்தகைய பொதுவிதியைக் கருத்திற் கொண்டு உண்கலங்களைப் பயன்படுத்துவதில் கருத்துடையவர்களாக இருந்தனர்.

உணவுண்ணும் உண்கலமாகப் பொன், வெள்ளி' வாழை இலை, தேக்கிலை' தாமரை இலை முதலியன பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

"" செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்''65

"" குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு

அமுதம் உண்க அடிகள் ஈங்கென''66

வாழை இலையில் உணவு உண்டது தெரிகிறது. பொன், வெள்ளி, வாழை இலை' தேக்கிலை, தாமரை முதலியவற்றில் உணவுண்பது உடல் நலத்தைத் தரும் என்பது மருத்துவ நூலாரின் கருத்தாக இருக்கிறது.

உணவே மருந்து

தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி, தேரையர் வெண்பா போன்ற நூல்கள், ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கின்றன. மரங்களிலிருந்து கிடைக்கின்ற பூ' காய், கனிகள்; செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்ற பூ, காய் கனிகள்; குறுஞ்செடிகள் எனப்படும் மூலிகை வகைக் கீரைகள்; பதப்படுத்தி வைக்கப்படுகின்ற ஊறுகாய்' வற்றல் போன்றவை, விலங்கு இனமான பசு' எருமை, ஆடு' போன்றவைகளிடமிருந்து பெறப்படுகின்ற பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்ற தயிர், மோர்' வெண்ணெய், நெய் போன்றவை; சேகரிக்கப்படும் பொருள்களான மலைத்தேன்' கொசுத் தேன், கொம்புத் தேன்' குறிஞ்சித் தேன் ஆகியவை; விளைவிக்கப்படுகின்ற பொருள்களான நவதானியங்கள்' பருப்பு வகைகள்;தயாரிக்கும் பொருளான எண்ணெய் வகைகள்;இறைச்சி வகைகளான மாடு' ஆடு, பன்றி' உடும்பு, கோழி' நாரை, உள்ளான்' கொக்கு, காடை' மீன், கருவாடு போன்றவை; நீர் வகையான ஆறு, குளம், கிணறு' ஊற்று, சுனை' அருவிநீர் போன்றவை; நில வகையான குறிஞ்சி, முல்லை, மருதம்' நெய்தல்;ஆடை வகையான பருத்தி' தோல், ஆட்டு மயிர்' எலி மயிர், பட்டு' இலை , தழை ஆகியவை; வண்ண வகைகளான கருப்பு, வெள்ளை, மஞ்சள்' சிவப்பு, ஊதா' நீலம், பச்சை' ஆரஞ்சு, போன்றவை: வீடுகளின் வகை' பாய்வகை, படுக்கை வகை' இருக்கை வகை, பாத்திரங்களின் வகை போன்ற வகையினப் பொருள்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றும்' அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயை நீக்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றன.

மேற்கண்ட பொருள்களின் மருத்துவக் குணங்களை அறிந்தும் அறியாமலும்' உண்ணவும் உடுக்கவும் இருக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினர்.

மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வாழ்விடங்களாகத் தேர்ந் தெடுத்த பகுதிகளில் அல்லது நிலங்களிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அமைவது இயற்கை.

நானிலமும் நோய்களும்

நிலங்கள் நான்கு என்பது இலக்கிய மரபு. நிலத்தின் அடிப்படைக் கேற்ப உண்டாகும் நோய்களும் வேறுபடும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. குறிஞ்சி நிலமான மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும், நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாகக் காணப்படுகின்றன. அதுபோலவே பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாக இருக்குமென்று குறிப்பிடப் படுகின்றன. அந்தந்த நிலங்களில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு' அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கின்ற மருத்துவத் தாவரங்களே மருந்தாகும் என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மையாகும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இயற்றத் தெரிந்த தமிழ் மக்கள், வாழும் இயல்பினால் உண்டாகும் நோய்க்கு மருந்தாக, வாழும் பகுதிகளிலுள்ள தாவரங்களிலிருந்தே கண்டறிந்திருந்தனர் என்பதைத் தமிழ் மருத்துவ முறைகளிலிருந்து அறிய முடிகிறது.

எனவே' உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும்' தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம்.

உயிர் மருந்து

மருந்தாக அமையும் உணவே உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்; உடலின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்; உடலின் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமையும்; உடலை இயக்கும் ஆற்றலைக் கொடுக்கும்; உடல் நோயை நீக்குவதுடன் நோயற்று வாழ வகைப்படுத்தும் என்பவை அறிந்தே'

"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்''67

என்ற புறநானூற்றுப் புலவன் புலப்படுத்துவதைக் காணலாம்.

மருந்தே உணவு

சங்க காலத்தமிழ் மக்கள் தங்கள் உணவு வகைகளாக மேற் கொண்டிருந்தவற்றை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் உண்ட உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும்' தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அவ்வாறு அமைந்த உணவுகள் அவர்களின் உடலைப் பேணுகின்ற குணங்களைக் கொண்டிருந்தன.

மிளகு

மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.

‘பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.

"" கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி''68

என்று மிளகின் கொடி கருமையாகவும் பசுங்காயாகவும் கொத்தாகவும் காணப்படுவதை உணவாக்கினர். தண்டிலும் வேரிலும் உணவைச் சேகரிக்கும் கிழங்கு வகையான இஞ்சி' மஞ்சள் உணவாகி மருந்தாகிறது.

"" இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்''69

என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

உப்பு

உப்பு எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும். செந்நீர்' எலும்பு, வலிமை போன்றவற்றைத் தரும். பருத்தல் என்னும் பொருளில் உப்புதல் என்னுஞ் சொல்லில் உப்பு எனப் பெயர் பெற்றது என்பர். நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால்' உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.

"" நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரிவிலை மாறு கூறலின் மனைய''70

என்று' பண்டமாற்றாக உப்பு விற்கப் பட்டதை அகநானூறு குறிக்கும்.

உப்பின் அளவு, இரத்தத்தின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. நோயாளர்கள் உப்பைக் கட்டுப் படுத்தினால் நோயின் வேகம் குறையும் என்கிறது, மருத்துவம்.

இதனை'

"" உப்பு அமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்''71

என்றதனால்' காதலர்களிடையே தோன்றும் பொய்க் கோபமும்' உப்பும் அளவாக இருக்க வேண்டும் என்றும்' இவ்விரண்டும் அதிகரித்தால் காதலும் உணவும் கெடும் என்னும் கருத்தில் எடுத்துக் காட்டாக அமைந்து, உப்பின் பயன் உணர்த்தப்பட்டது.

புளி

புளி' தனக்குரிய சுவையெனும் குணத்தின் பெயரையே கொண்டிருக்கிறது. புளிப்பின் சுவையை மாற்றவல்லது காரமும் கரிப்பும். கரிப்பு என்னும் கார்ப்புச் சுவைக் குறியது உப்பு. புளிப்பும், கார்ப்பும் சமையலுக்குச் சுவையூட்டுவது. புளி' உப்பு ஆகிய இரண்டும் சித்த மருந்தில் சிறப்பாகக் கருதப் பெறும் பாகங்களாகும். வைத்தியம், வாதம்' யோகம் ஆகிய மூன்றும் இவற்றைக் குறிப்பிடும்.

உப்பையும் புளியையும் அறிந்தவனே ஞானி என்றும், சித்த னென்றும், வைத்தியனென்றும் கூறப்படுகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்தே சங்கத் தமிழ்மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

"" படும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல""72

என்னும் குறுந்தொகை, சூல் கொண்ட மகளிர் தங்களுக்கு நேரும் குமட்டல் தீர புளியைச் சுவைத்ததாகத் தெரிவிக்கிறது. புளி' உணவுப் பொருளாகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"" வெண்புடையக் கொண்ட தூய்த்தலைப் பழவின்

இன்புளிக் கலந்து மாமோ ராகப்''73

பயன்பட்டுள்ளது.

வேளைக் கீரையை ஏழ்மையின் காரணத்தால், புசிக்க உணவின்றி வறுமையில் வாடியோர் உண்டதாகக் குறிப்பர். வேளைக்கீரை' புளிப்புச் சுவை கொண்டது. வறுமையுற்றவர்க்கு ஏற்படுகின்ற தூக்கக் குறைவு, மலச்சிக்கல்' சோர்வு ஆகியவற்றிலிருந்து மீள வேளைக்கீரை பயன்பட்டது.

"" வேளை வெந்தை வல்சியாக''74

என்று புறநானூறு குறிப்பிடும் வேளைக்கீரையால் புளிப்புச் சுவையையும்'

"" எயிற்றியர் அட்ட இன்புளி வெண்சோறு''75

என்னும் சிறுபாணாற்றுப்படை, சோறே புளிப்புச் சுவையாகப் படைத்தளிக்கப் படுவதையும் குறிப்பிடுகிறது.

புளிப்புச் சுவையும் கார்ப்புச் சுவையும் உடலையும் உணவுப் பொருளையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் என்பதே இவ்விரண்டினால் அறியப்படும் உண்மையாகும்.

தேன்

தேன்' பல்வேறு வகையான மலர்களின் மகரந்தத்தைத் தேனீக்கள் உறிஞ்சி சேமித்து வைக்கும் மதுரமாகும். தேனின் இனிப்புச் சுவையால் அதனைத் தீந்தேன் என்றும் வழங்குவர். தேன், தமிழ் மருத்துவத்தின் துணை மருந்தாகப் பயன்படுவது. அதன் மருத்துவப் பண்பு எல்லா நாளிலும் எல்லாராலும் அறியப்பட்டதாக இருப்பது, தேனைப் பயன்படுத்துவதற்கு எல்லாரும் முன் வருவதுதான் காரணமாகும்.

"" பாற்பெய் புன்கந் தேனொடு மயங்கி''76

என்று' பால்சோறோடு தேன் கலந்து உண்டதாகப் புறநானாறு உரைக்கிறது.

பாலுடன் தேன்கலந்து உண்ணும் பழக்கம் பழந்தமிழர் கொண்டிருந்த உணவு முறையாகும். இதனை மேலும் சிறப்பாகத் திருக்குறள்'

"" பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்''77

என்று குறிப்பிடுவது, பாலும் தேனும் கலந்த சுவையின்பத்தினைச் சிறப்பிப்பதாக இருக்கிறது. தேனின் மருத்துவக் குணத்தினாலேயே இவ்வாறு சிறப்பிக்கப் படுவதாகக் கருதலாம்.

கள்

கள்' நறவு, மது' மட்டு, தேறல் என்னும் சொற்களால் கள்ளைக் குறிப்பிடுவர். கள்ளை மயக்கத்தைத் தரும் மதுவகையாகக் கூறுவர். அது' தெளிவும், ஊக்கமும் தருகின்ற இன்னீர் வகையைச் சார்ந்தது என்பர்.

சங்ககாலத்துப் பெண்களும் ஆண்களும் கள் அருந்தினர். அதியமான், ஒளவைக்குக் கள் கொடுத்தான். கள்ளை உண்ட ஒளவையார்' மன்னனைக் களித்துப் பாடினார் என்பதனை'

"" சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே

பெரிய கட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே.''78

என்று புறநானூறு குறிப்பிடும். இதனால் தெளிவும் ஊக்கும் கள்ளின் வழி மருந்தாகி இருக்கக் காண்கிறோம்.

அறுசுவை

உணவின் சுவை வகைகள் ஆறாகும். அவை, துவர்ப்பு' கார்ப்பு, இனிப்பு' உவர்ப்பு, கைப்பு' புளிப்பு என்பன. இவை முறையே, ஆற்றல், வீறு' வளம், தெளிவு' மென்மை, இனிமை ஆகியவற்றைத் தரும் என்பது உணவு மருத்துவ நெறி. இதை உணர்ந்த நம் முன்னோர் தங்கள் உணவை அறுசுவைகளாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

"" அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி உண்டாரும்''79

என்று' தமிழர் தம் சுவையுணவைச் செப்புகிறது.

மேற்கண்ட அறுவகை சுவைகளைக் காலத்திற்கும், இடத்திற்கும், உடலுக்கும்' வயதிற்கும் ஏற்றவாறு திட உணவு, திரவ உணவு எனப் பிரித்து உண்டிருந்தனர். அவ்வாறு உண்ணப்பட்ட உணவு எட்டுவகை எனத் தெரிகிறது.

"" மெய்திரி வகையின் எண்வகை உணவின்

செய்தியும் வரையார்''80

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றதனால், அக்காலத்துக் கூல வணிகர்கள், எண்வகை உணவிற்குரிய கூலங்களாக “நெல்லு, காணம்' வரகு, இறுங்கு சோளம்' தினை, சாமை' புல்லு, கோதுமை" என இளம் பூரணரும், “பயறு, உழுந்து' கடுகு, கடலை' எள்ளு, கொள்ளு' அவரை, துவரை" எனப் பேராசிரியரும் “நெல்லு, புல்லு' வரகு, தினை' சாமை, இறுங்கு' தோரை, இராகி" என அடியார்க்கு நல்லாரும் உரைக் கின்றனர். அவை' எவ்வகையாயினும் எண்வகை உணவுப் பொருள்கள் உணவாகப் பயன் பட்டிருந்தன என்பது பெறப்படும்.

இவ்வகை உணவுப் பொருள்களே சோறு போன்ற உணவாகவும், மாவு, கூழ் போன்ற உணவாகவும் அமைந்தன எனக் கொள்ளலாம்.

சுவைப் பொருத்தம்

உண்ணப்படுகின்ற உணவுப் பொருள் ஒன்றானால் அதன் சுவையும் ஒன்றாக இருக்கும். இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களை உண்ணும் போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையானால் மாறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இன்ன சுவையை உண்டால்' அதற்கு மாற்றாக என்ன சுவையை உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் ஒவ்வாமையோ, உணவு நஞ்சோ ஏற்படலாம். இதை உணர்ந்த முன்னோர்கள் உணவின் மாற்று உணவுகளைத் தெரிந்திருந் திருக்கின்றனர். மாற்று உணவாகக் காரத்தைக் கொள்வர். கார உணவை உண்பவர்கள் அதற்கு மாற்றாக இனிப்பைச் சேர்ப்பர். ஒரு சுவை மிகுந்தால் அதனைக் குறைக்க மற்றொரு சுவையைச் சேர்த்துச் சமன் செய்வர்.

வாழ்வில் நட்பும், பகையும் காணப்படுவதைப் போல' உணவிலும் நட்புச் சுவை, பகைச் சுவையென இரண்டு உண்டு. ஆறுவகைத் தாதுகளில் இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும்' தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பை உண்டாக்கப் புளிப்பும், நரம்பை வலுவாக்கக் கசப்பும், சுரப்பிகளைச் சீராக்கக் காரமும் என இவை ஒன்று சேர்ந்து உணவானால் ஏழாவது தாதுவான மூளைக்கு வேறு சத்தி தேவையில்லை. இதனையே அறுசுவை மருத்துவம் என்றும்' ஆறாதார மருத்துவம் என்றும் சித்த மருத்துவ நூலோர் குறிப்பிடுவர்.81

உண்ணும் முறை

உணவு நெறிகளை வகுத்து, சுவைக்கு ஏற்ற உணவுப் பொருள் களைச் சமைத்து, உடலையும் மனத்தையும் பாதுகாத்து, ‘உணவே மருந்து' மருந்தே உணவு' என்னும் இயற்கை வாழ்வுக்குத் தக தமிழர் வாழ்ந்து வந்துள்ளனர்.

துறைகள் தோறும் நிறைவாக வாழத் தொடங்கிய நம் முன்னோர்கள் உணவு உண்ணும் முறையையும் நிறைவாக வகுத் திருக்கக் காண்கிறோம்.

உணவு உண்பதை நான்குவகை வினைகளாகக் கூறுவர். அவை உண்பன, தின்பன, பருகுவன' நக்குவன என்பனவாயாகும்.

உண்ண வேண்டிய பொருளைப் பருகினாலோ, நக்க வேண்டிய பொருளைத் தின்றாலோ நகைப்பிற்கு இடமாகும். இந்நான்கு வகை உணவையும் ஒரே நேரத்தில் உண்ணும் உணவிற்கு ‘அடிசில்' சோறு எனக் குறிப்பர். அந்நால்வகைகளையும் உண்டாரை ‘அடிசில் அயின்றார்' என்னும் பொதுவினையால் இலக்கணங் கூறுவர்.82

பண்டைக்கால உணவு நெறி வளர்ந்து பக்குவமடைந்த நிலையில் இருந்தது என்பதற்கு' அதற்குத் தொல்காப்பியம் இலக்கணம் வரைந்திருப்பதையே சான்றாகக் கருதலாம்.

மருந்துப் பொருள்

பண்டைக் காலத் தமிழகம், ஆட்சி முறையினாலும் மக்கள் வாழ்க்கை அமைப்பு முறையினாலும் சிறந்து விளங்கியது. இவற்றை அறிந்த மேலை' கீழை நாட்டு அரசின் தூதுவர்களும், செல்வந்தர்களும், அறிஞர்களும், வணிகர்களும் தமிழகத்தை நாடி வரத் தொடங்கினர். தங்கள் நாட்டுத் திரவியங்களைக் கொண்டு வந்து தந்து' இந்நாட்டுச் சிறப்புக்குரிய பொருள்களை ஏற்றிச் சென்றனர்.

"" யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்''83

யவனர்கள் தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்த மரக் கலங்களிலிருந்து பொன்னை இறக்குவர். அப்பொன்னுக்கு ஈடாகத் தமிழகத்தின் மருந்துப் பொருளான மிளகை ஏற்றுவர். இவ்வாறு பொன்னுக்குப் பண்டமாற்றாக மிளகு வழங்கப்பட்டது. பழந்தமிழ்த் துறைமுகம் என்று இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்படும் முசிறித் துறைமுகப் பட்டினத்தில் இருந்து மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாயின.

பழந்தமிழ்ப் பட்டினத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதியான பொருள்களில் குறிப்பாக' இலவங்கம், மிளகு' இஞ்சி, அரிசி' ஏலம், தேக்கு' கருங்காலி, நூக்கு' சந்தனம், யானைத்தந்தம் போன்றவை. குறிப்பிடத் தகுந்தவை. இவற்றுள் மிளகு, இஞ்சி, ஆகிய இரண்டும் மருந்துப் பொருள்கள். மருந்துக்கென்றே பெறப் பெற்றவை. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த "இப்போ கிரேசு' (Hippocrates) என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர்' இந்திய மருத்துவ முறைகளையும், மருந்து வகைகளையும் கையாண்டு வந்துள்ளார். மிளகை ‘இந்திய மருந்து' என்றே குறிப்பிட் டிருக்கிறார். பண்டைய தமிழர் உணவுப் பொருள்களில் ஒன்றான நல்லெண்ணெயின் பயனையும் அவர் அறிந்திருக்கிறார்.84

அடிமைத்தளையை உடைத்த தமிழ் மருந்து

தமிழகத்திலிருந்து மேலை நாட்டிற்கு ஏற்றுமதியான தமிழகத்தின் மிளகு, அந்நாட்டின் அடிமைத் தளையை உடைத்திருக்கிறது என்பது தமிழகத்துக்கும், தமிழக மருத்துவத்துக்கும் கிடைத்த மகுடமாகும்.

கி.பி.410-இல் ரோமாபுரியை, விசிகாத்து என்ற மன்னன் படையெடுப்பின் மூலம் கைப்பற்றினான். அவன், ரோமாபுரி மக்களுக்குத் தண்டனையாகத் திறை விதித்தான். ரோமர்கள்' மூவாயிரம் பவுண்டு மிளகைத் திறையாகச் செலுத்த வேண்டும்; தவறினால், ரோமாபுரி அழிந்து போகும் என்று கர்ச்சித்தான்.

மன்னனின் கொடுங்கோன்மையைக் கண்டு அஞ்சிய ரோமாபுரி மக்கள், வேறு வழியின்றி அவனின் தண்டத்தை ஏற்றுக் கொண்டனர். மன்னனின் விருப்பப்படியே மூவாயிரம் பவுண்டு மிளகைச் செலுத்தி விட்டுத் தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்றனர்85 என்பது வரலாற்றின் நிகழ்வாக இருக்கக் காண்கிறோம்.

எந்த மன்னனாவது மிளகைத் திறையாகக் கேட்பானா? என்றால், பண்டைக் காலத்தில் பொன்தான் சிறந்த மதிப்பை உடையதாக இருந்தது. பொன்னிருந்தால் எதையும் வாங்கலாம் என்னும் நிலையிருந்த போதும், பொன்னை விடவும் உயர்ந்த பொருளாக ரோமாபுரி மக்களால் மதிக்கப் பெற்றது தமிழகத்திலிருந்து சென்ற மிளகு. பொன்னை வைத்துக் கொண்டு ரோமநாட்டுப் பொருளைத் தான் வாங்க முடியும். தமிழகத்து மிளகை வாங்க வேண்டுமானால், தமிழகத்துக்குப் பல நாள்கள், பல மாதங்கள் எனக் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால்' தமிழர்கள் தங்கள் பொருள்களை அங்குக் கொண்டு சென்று விற்பதில்லை. வேண்டுவோர் வந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும். உயர்ந்த பொருளைத் தேடிச் சென்று விற்கத் தேவையில்லை. தேவைப்படுவோர் நாடி வரவேண்டும் என்ற நிலையில் தமிழக வணிகம் தலை நிமிர்ந்திருந்ததே காரணமாகும்.

தமிழ் மருத்துவக் கோட்பாடு

சங்ககாலத் தமிழ் மருத்துவக் கோட்பாட்டினைக் குறிப்பினால் உணர்த்துவதாகத் தொல்காப்பியம்' புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் காணப்பெறும் பஞ்ச பூதங்களைப் பற்றி வரும் குறிப்புகளைக் கூறலாம். இந்த உலகம் பஞ்சபூத மயமானதென்பதே சித்த மருத்துவக் கொள்கை. பஞ்சபூத மருத்துவக் கோட்பாட்டின் வளர்ச்சியாகவே இக்கால மருத்துவத்தினைக் கருதலாம்.

பஞ்ச பூதம்

இந்த உலகம் ஐம்பெரும் பூதங்கள் கலந்த மயக்கம். உலகத் தோற்றத்தின் மூலப்பொருளாக அமைவன ஐம்பெரும் பூதங்கள் எனப்படும். அவை நிலம், நீர், தீ' காற்று, ஆகாயம் என்னும் ஐந்து மாகும் என்பதை'

"" நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''86

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

‘உலகம் என்பது உலகினையும் உலகிலுள்ள பொருள்களையும் குறிக்கும். உலகமாவது, முத்தும் மணியும் கலந்தாற் போல நிலம்' தீ, நீர்' வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுள் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற் போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடையதாகலின் "கலந்த மயக்கம்' என்று இளம்பூரணர் உரை காண்கிறார்.

முத்தும் மணியும் கலந்தாற்போல, உலகமும் பொன்' வெள்ளி, செம்பு ஆகியவை உருக்கினாற் போல உலகிலுள்ள பொருள்களும் அமையும் என்று' புறத்தே உள்ள பூதங்களையும் அகத்தே உள்ள பூதங்களையும் வேறுபடுத்திக் காட்டினார் என்க.

“அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்' அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல" 87 என்று ஐம்பெரும் பூதத்தைப் பற்றிப் புறநானுõறு குறிப்பிடக் காணலாம்.

இந்த ஐம்பெரும் பூதங்கள் ஆதியாகக் கொண்டு, சுவை முதலான புலன்களும், அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் உரைக்கிறது.

"" சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ

றவையு நீயே யடு போ ரண்ணால்

அவையவை கொள்ளுங் கருவியு நீயே

முந்தியாங் கூறிய வைந்த னுள்ளும்

ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே

இரண்டி னுணரும் வளியு நீயே

மூன்றி னுணருந் தீயு நீயே

நான்கி னுணருந் நீரு நீயே

ஐந்துடன் முற்றிய நிலனு நீயே''88

ஒன்றுஓசை; இரண்டுஓசை, ஊறு; மூன்றுஓசை, ஊறு' ஒளி;நான்குஓசை' ஊறு, ஒளி' சுவை;ஐந்து ஓசை, ஊறு, ஒளி' சுவை, நாற்றம் என்னும் குணங்களால் பூதங்கள் உணரப்படுகின்றன.

நிலம்' தீ, வளி, விசும்பு' நீர். தொல்காப்பியம்

நிலம்' ஆகாயம்' தீ, நீர், காற்று. புறநானூறு

நிலம்' நீ,ர் வளி' விசும்பு, தீ. பரிபாடல்

என்று வரிசைப் படுத்துகின்றன

விசும்பு2; வளி3;தீ4; நீர்5;நிலம்6 பங்காக உடலினுள் பூதங்கள் கலந்திருக்கின்றன என்று மருத்துவ நூல்கள் கூறும். இந்தக் கலவை பரிபாடல் வரிசைப்படுத்திய முறையில் ஒத்திருப்பதைக் காணலாம்.

உயிரியற் கொள்கை

உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை' ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.

“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்; ஈரறிவாவது, உற்றுணர்தல்' நாவினால் சுவையறிதல்; மூவறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்; நாலறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல்' கண்ணினால் கண்டறிதல்; ஐயறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தி யுள்ளனர்',89 என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.

ஐம்புலன்

புலன்கள் ஐந்து என்று திருக்குறளும் கூறக் காண்கிறோம்.

"" கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்''90

காண்டல்' கேட்டல், உண்ணல்' மோந்தல், தீண்டல் என்னும் தொழிலையுடைய கண், காது, வாய், மூக்கு' மெய் ஆகிய பொறிகளையும் குறிப்பிடக் காணலாம். எனவே பஞ்சபூதம்' புலன், பொறி' ஆறறி உயிர் ஆகிய, உயிர் தொடர்பான கொள்கைகளைப் பண்டைய காலத் தமிழர்கள் அறிந்திருந்தனர் எனல் பொருந்தும்.

பஞ்ச பூதங்களின் பரிணாமம்

பூதங்கள் உடலுக்கு முதலாய் உள்ளன. ஒவ்வொரு பூதமும் பலவாகிய பரிணாமங்களைக் கொண்டு உடலை இயக்குவன.

"" மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதாம்

எண்ணிய பூதங்க ளென்றறிந்துநண்ணிய

மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த

தென்னவர்கோ மானே தெளி''91

என்று' இசை நுணுக்கம் என்னும் மறைந்த தமிழ்நூலின் பாடல் தெரிவிக்கிறது.

"" செப்பிய பூதங்கள் சேர்ந்ததோர் குறியன்றே

அப்பரிசு மண்ணைந்து நீர்நாலாம்ஒப்பரிய

தீயாகின் மூன்றிரண்டு காற்றாம் பரமொன்று

வேயாருந் தோளி விளம்பு''92

என்று' பூதங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த அளவு கலந்து மயங்குகின்றன என்று விளக்குகிறது.

இவ்வாறு இவை ஒன்றோடொன்று கூடுவன வல்லவாகவும், இவற்றின் கூட்டம் உடம்பென்றீராதலால்' இவ்வைந்தின் கூட்டம் உடம்பாவது எவ்வாறு என்றால்'

"" மெய்வாய் கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாயு மாயவற்றின் மீதடுத்துத் துய்ய

சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தால்

அவைமுதற் புற்கல மாம்''93

பூதங்கள் ஒன்றனோடு ஒன்று கூடுவனவல்ல என்றாலும் இவற்றின் கூட்டம் இல்லாமல் உடம்பு என்று ஒன்று இல்லை என்றாலும்' அவை எவ்வாறு உடம்பில் கூடுகின்றன வென்றால் பூதங்கள் முறையே மெய்' வாய், கண்' மூக்குச் செவி எனவும் சுவை, ஒளி, ஊறு' ஓசை, நாற்றம் எனவும் கலந்து உடம்பிற்கு முதலாய் நிற்பனவாம். (புற்கலம் உடம்பு)

பூதங்கள் ஐந்தும் தத்தம் தன்மை நீங்கி, மண் உடம்பாகவும்' நீர் வாயாகவும், தீ கண்ணாகவும்' காற்று மூக்காகவும், ஆகாயம் செவியாகவும் நின்று உடம்பாயின.

மண்ணின் பகுதி

நரம்பு' இறைச்சி, என்பு' மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.

நீரின் பகுதி

நீர்' முளை, சுக்கிலம்' நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.

தீயின் பகுதி

பசி' சோம்பல், மைதுனம்' காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி

காற்றின் பகுதி

போக்கு' வரவு, நோய்' கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.

ஆகாயத்தின் பகுதி

வெகுளி' மதம், மானம்' ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.

வாயு

உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல, வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன்' உதானன், வியானன்' சமானன், நாகன்' கூர்மன், கிருகரன்' தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.

நாடி

வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி' அத்தி, சிங்குவை' சங்கினி, பூடா' குகு, கன்னி' அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

பூதப் பரிமாணத்தின் தொகை

பூதங்கள் பரிமாணங்களாக விரிந்து எவ்வகையாக அமைகின்றன என்பதைத் தொகுத்துக் கூறுகின்ற பாடல்.

"" பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந்தாய்

வாதனையோ ரையைந்தாய் மாருதமும்மேதகுசீர்ப்

பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே

முத்திக்கு வித்தா முடம்பு''94

பூதங்கள்5; பொறி5;புலன்5; வாதனை25; வாயு10; நாடி10 ஆக 60 கூறப்பட்டுள்ளன.

உடம்பின் உயரம்

உடம்பின் உயரம் அவரவர் கைவிரல் அளவு (விரலில் உள்ள ஒரு கணு அளவுஓர் அங்குலம் எனப்படும்) தொண்ணூ<ற்றாறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத் தேழரை அங்குலமும்' கீழே நாற்பத்தேழரை அங்குலமும் விட்டு, நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் அமைந் திருப்பதாகக் கூறுவர்.

"" துய்ய வுடம்பளவு தொண்ணூ<ற்றா றங்குலியா

மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான்வையத்

திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்

கருவாகு மாதாரங் காண்''95

மூலாதாரத்தில் எழுகின்ற நாடி எழுபத்தீராயிரமாகும். அவை இடை, பிங்கலை, சுழுனை என்னும் நாடிகளாய் நடுவு நின்ற சுழுமுனை நீங்க பிற இரண்டும் மேல்நோக்கி யேறி இரண்டு மூக்கின் வழியே இயங்குகின்றன. இது, ஒரு முறை சுவாசிக்கும் வாயு பன்னிரண்டு அங்குல அளவு புறப்பட்டு நாலங்குலம் தேய்ந்து எட்டு அங்குலம் வாயு என்று கொள்க என்பர்.

ஆறாதாரம்

நாடிகள் உதிக்கின்ற மூலமாக விளங்குகின்ற மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டாணம்' மணிபூரகம், அநாகதம்' விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாகும்.

சுவைகள்

சுவை என்பது உண்ணப்படும் பொருளில் மட்டுமே உள்ள தன்று. உலகப் பொருள் அனைத்திற்கும் இச்சுவைகள் பொருந்தும். சுவையும் உடல் நலத்தைத் தருவதும்' கெடுப்பதுமாக இருப்பதனால் அவை ஈண்டு கூறப்படுகிறது.

சுவைகளாவன' துவர்ப்பு, புளிப்பு' கார்ப்பு, கைப்பு' உவர்ப்பு, இனிப்பு' எனும் ஆறாகும். இவை முறையே பயம், நோய், பசிநீடல்' கேடு, கலக்கம்' அளி என்னும் ஆறு பயனைத் தருவதாக அமையு மென்பர்.

"" உவர்ப்பின் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு

துவர்ப்பின் பயமாம் சுவைகள்அவற்றில்

புளிநோய் பசிகார்ப்புப் பூங்கொடியே தித்திப்பு

அளிபெருகு மாவ தரங்கு''96

சுக்கிலம்' சுரோணிதம்

பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு ஆண், பெண் ஆகிய இருபாலர் இணைப்பினால் கருவாகி அமையும் உயிர்க்குக் கருவாக அமைவது சுக்கிலம்' சுரோணிதம் என்பர்.

இருவினை

பஞ்சபூத உடம்பானது இரண்டு வினையாகிய நல்வினை' தீவினை ஆகிய இரண்டனைத் தன்னகத்தே கொண்டு உயிர்க்கின்றது என்றும்' பஞ்சபூதங்கள் உடம்பின் பகுதிகளாக அமைந்து செயல் படுகிறன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பிற்கால மருத்துவ நூல்களிலும் காணமுடிகிறது. என்றாலும், இத்தகைய கோட்பாட்டினை உருவாக்கியவர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அறிவர்' என்னும் முழுதுணர்ந்த மெய்யறிவாளர்கள் எனலாம்.

இலக்கியம் காட்டும் அறிவர்

பண்டைக்காலத்தில் ஆழ்ந்த அறிவினை உடையவர்களை ‘அறிவர்' என்னுஞ் சொல்லால் குறித்தனர். இவர்கள்' இறப்பு, நிகழ்வு' எதிர்வு என்னும் முக்காலமும் உணர்ந்த பெரியோர் என்பர்.

“ மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியி லாற்றிய அறிவன் தேயமும்''97

எனவரும் தொல்காப்பிய நூற்பா, ‘நெறியில் ஆற்றிய' அறிவனைக் குறிப்பிடும் உரையில் இளம் பூரணர், ‘அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க.,98

“மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர் வுடையோன்" என நச்சினார்க்கினியரும் கூறுவர். இதனால் அறிஞர் எனப்படுவோர் யோகம் எனும் மெய்வுணர் வுடையோர் எனலாம். இவ்மெய்யுணர் வுடையோர் ஊணசைவின்மை' நீர் நசை யின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரை யறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாமை என எட்டும் கொண்டிருப்பர்.99

இவர்கள்' தாமரை, ஆம்பல்' யாமை என்னும் இருக்கைகளில் இருப்பர்.

மெய்யுணர்வோர் நிலை

யோகஞ் செய்வோர் இமயம், நியமம், ஆசனம், வளிநிலை' தொகைநிலை, பொறைநிலை' நினைதல், சமாதி என்னும் எட்டு நிலைகளைச் செவ்விதின் உணர்ந்தவராவர்.

“ நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து''100

என மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக் காண்டற்குரிய ‘நொசிப்பு' என்னும் ‘சமாதி' நிலை கைவரப் பெற்றவராயிருப்பர்.

மனத்தைச் சுத்தி செய்யும் கருவி

அறிவர்கள் தங்கள் மனத்தைச் சுத்தி செய்து தூய்மை மனத்தினராகி, ‘மனத்துக்கண் மாசிலனாதல்' என்னும் வாக்கின் வழி ஒழுகுவர் என்பதைப் பரிபாடல்101 குறிப்பிடுவதைப் போல, செவி முதலாகிய இந்திரியம் ஐந்தையும் மயக்கமற நீக்கி மைத்திரி' கருணை, முதிதை' இகழ்ச்சி யென்னும் நான்கினாலும் மனத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒரு நெறிக் கண்ணே படுத்துபவர் (இவற்றை வட நூலார் சித்த பரிகாரம் என்பர்.)

அறிவுக்கண்

மனத்தினால்' புலன் உணர்வுகளை அறிந்து, முக்காலத்தையும் உணர்ந்த அறிவர்களை' நுதல்விழி நாட்டத்து இறையோன்102 எனச் சிலம்பு குறிப்பிடும். இம்மூன்றாவது கண்ணைப் பெற்றவர்களை அறிவுக் கண் கொண்ட அறிவர் என முன்னோர் உரைத்தனர். இவர் களையே' நயனங்கள் மூன்றுடை நந்தி103 எனத் திருமூலர் குறிப்பிடு வார். இவ்வகையான மெய்யொழுக்கத்தின் பயனாய் விளைந்த அறிவுடையோர் செயலைக் கூறும் திருக்குறள் அதிகாரங்கள்' நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல்' அவா அறுத்தல் ஆகியன.

"" உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்''104

"" ஐந்தவித்தான் ஆற்றல்''105

"" சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்''106

"" அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்''107

"" அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை''108

"" இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு''109

"" கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி''110

"" காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்''111

"" வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை''112

"" தூஉய்மை என்பது அவா இன்மை''113

என்னும் குறட்பாக்கள் குறிப்பானவை. மேற்கண்ட பாக்களின் சுருக்க மான கருத்தாவது'

உறுதியான மனத்தினால் ஐந்து புலன் உணர்வுகளை அடக்குதல். ஐந்தின் அடக்கத்தில் உண்டாகும் ஆற்றலை விளக்க இந்திரனே சாட்சி என்பது. பொறிகளின் வகைகளை அறிந்தவனுக்கே உலகம் எனல். வீடு பேறு வேண்டுமென்றால் ஐந்தின் உணர்வுகளை விடுதல். மனத் தினுள்ள இருள் நீங்கினால் இன்பமுண்டாகும் என்றல். காமம், வெகுளி' மயக்கம் ஆகிய கேட்டினை நீக்குதல். அவா இல்லாத தூய்மை நிலையை அடைதல். மெய்ப்பொருளை அடையும் வழியறிந்து அதன் வழியொழுகுதல்' மீண்டும் பிறக்காத நிலையடைதல். வேண்டும் போது பிறப்பதும்' வேண்டாத போது விடுப்பதும் செய்தல். இந்த மெய்வுணர்வினால் ஆற்றல் தலைப்பெற்றவர்களை ‘அந்தணர்' என்னும் சிறப்பு அடையால் போற்றுதல்.

அந்தணர் நெறியில் - முத்தீ

மெய்யுணர்வினைத் தொழிலாக உடைய அந்தணர்கள் முக்கண்ணை அடையப் பெறுவர் என முன்னர் தெரிவிக்கப் பட்டது. அந்த முக்கண்ணை, முத்தீ யென' யோக நெறிக்கு உரியதாக்கி உரைப்பர். இதனை'

"" அந்தி அந்தணர் அருங்கடன் நிறுக்கும்

முத்தீ விளக்கிற் துஞ்சும்""114

என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இதனையே, சிலம்பும்

"" ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்

முத்தீச் செல்வத்து''115

என்று' கூறக் காணலாம். அந்திக் காலத்தே அந்தணர் செய்தற்கரிய செயலைச் செய்யும் போது முத்தீ விளக்கில் துஞ்சும். ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே' என்றது, யோக நிலையை அடைபவர்கள் மூலதாரத்திலிருந்து எழுப்பப் பெற்ற தீயையும் இரண்டு கண்ணையும் தீயாகக் கருதி ஞாயிறு திங்கள் எனக் குறித்தனர். இத்தீ ஒளியில் நுதலில் சுழிமுனைக்குள் தோன்றும் காட்சி வெள்ளை நிறமாகவும் பொன்னிறமாகவும் தோன்றும் எனவும்' அவை, வெள்ளியம்பலம் எனவும் பொன்னம்பலம் எனவும் குறிக்கப் பெறும்.

"" ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

முத்தீப் புரைய''116

என்றால்' ஒரு செயலைச் (யோகநெறி) செய்த மனத்தை அடக்கிய இருபிறப்பாளர்' முன்னர் தோன்றிய நிலையிலிருந்து யோக நெறியில் வெற்றி பெற்றபின் அடைந்த நிலை, ஆகிய இரண்டு பிறப்பினை யுடையவர்களிடம் முத்தீப் புரைய மூவகைத் தீயும் நிலைபெற்றிருக்கும் எனலாம்.

அறுதொழில் அந்தணர்

மெய்யொழுக்கங்களை மேற்கொள்ளும் அந்தணர் என்னும் மெய்யுணர்வு அறிஞர் யோக நெறியில் செயலாற்றும் போது' நினைவை மூலாதாரத்தில் செலுத்தி மூலக்கனலை எழுப்பி' சுவாதிட் டானம், மணிபூரம்' அநாகதம், விசுத்தி' ஆக்கினை என்னும் ஆறு நிலையங்களிலும் யோகம் என்னும் தொழிலைப் புரிபவரே அந்தணர் எனப்படுவதனால் ‘அறு தொழில் அந்தணர்,117 எனல் பொருந்தும் எனலாம்.

தமிழ் மறையோர்

‘மறை' என்பது தமிழுக்கு உரியதாகச் சிலப்பதிகாரம் உரைக் கிறது. ‘மறை' என்றால் ‘வேதம்' என்னும் உரைக்கு மாறாக இது அமைகிறது. “வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த',118 என்னும் அடியால் உணர்த்துகிறது. மறை என்பது நான்கு வகையெனவும் உரைக்கிறது.

"" நான்மறை யாளன் செய்யுட் கொண்டு

மேனிலை யுலகம் விடுத்தோன்''119

என்கிறது. தமிழுக்கு உரிய நான்கு மறை என்பது என்னவென்று விளக்கப்படவில்லை. தமிழ் நெறியாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நெறிகளைக் கொண்டு உரைக்கிறதெனக் கருதலாம்.

நான்மறை முதல்வர்

நான்கு மறைக்கு உரியவர்களாகக் கூறப்பெறும் அந்தணர் எனப்படும் அறிவர்' அறத்தைத் தொழிலாகக் கொண்டு ஒழுகுபவராகக் காட்டப்படுகின்றனர். “அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்''120 “நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே''121

என்றதனால்' நான்மறைகளை ஓதுபவர்கள் முனிவர் என்றும் அறியலாம். இவ்வாறான அறிஞர்கள் புலவர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அந்தணர் கபிலர் என்பது உறுதியாகிது. இக்கபிலர் பாரியின் நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்தார் என்று புறப்பாடல் குறிப்பிடுகிறது. இப்புலவர் பெயரால் கபிலர் அகவல் என்றொரு ஞானப் பாடல் வழங்கி வருவதையும் கருத்திற் கொள்ளலாம்.

எனவே' அறிஞர், அந்தணர்' மறையோர் என்று குறிப்பிடப் பட்டவர்கள் துறவு நிலையடைந்து ஞான நிலைக்கு உயர்ந்த முனிவர்கள் என்பது பொருத்தமுடையதாக இருக்கும்.

தொல்காப்பியம்' பத்துப்பாட்டு, எட்டுத் தொகை' பதினெண் கீழ்க் கணக்கு, ஐம்பெரும் காப்பியம் ஆகிய நூல்களின் பாடல்கள்' மருத்து வக் குறிப்புகளையும் மருத்துவப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன.

மருத்துவத்தைக் தொழிலாகக் கொண்ட புலவர்களையும் மருத்துவக் குலத்தினரையும் தெரிவிக்கின்றன.

பஞ்சபூதக் கோட்பாடென்னும் மருந்துவக் கொள்கையும் மருந்து, மருத்துவன், நோய்' நோயாளன், முக்குற்றம்' நோயில்லா நெறி, உணவு' மருத்துவம் போன்ற மருத்துவ நெறிகளும் அறியக் கூடியன வாக இருக்கின்றன.

சங்க காலத்தில் ‘சொற்றொகை' என்றொரு நூல் இருந்ததென்றும், அந்நூலாசிரியர் ‘கலைக் கோட்டு முனிவர் என்னும் மருத்துவர் என்றும்' இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. கலைக் கோட்டு முனிவர் இயற்றிய ‘கலைக்கோட்டுத் தண்டு' என்றொரு நூல் இருந்தாகவும், அந்நூலைப் பின்பற்றி போகர் என்னும் சித்தர் நூல்கள் பல இயற்றியதாகவும், சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேற்கண்ட இத்தகவல்களே சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியக் கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கிடைக்கப் பெற்ற நூல்களில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்று கருதப் பெறும் ‘திருமந்திரம்' ஒன்றே மருத்துவத்தைக் கூறும் முதல் நூலாகக் கொள்ளத்தக்கது. வேறு எந்த மருத்துவ நூலும் கிடைக்கப் பெற வில்லை.

திருமந்திரம்

திருமந்திரம்' மனித உயிரின் தோற்றம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து நிலைகளையும் கூறுகிறது. உடலில் பஞ்சபூதங்களின் நிலையையும், பிறப்பில் குட்டை' முடம், கூண்' மந்தம், ஊமை' குருடு, அலி போன்றவை உண்டாவதற்குரிய காரணங்களையும் உரைக்கிறது.122

மனித உடம்பில் உள்ள 300 எலும்புகள்' 72000 நாடிகள் குறிப்பிடப் படுகின்றன.123

நாடிகள்10; வாயுக்கள்10; குணம் 6; வாயில்9;புலன்5; பூதம்5;பூதங்களின் விகற்பம்15; ஆக 60-ம் தத்துவமாகக் கூறப்பட்டுள்ளன. சித்தாந்தத்தின் தத்துவம் தொண்ணூற்றாறு என்றும்' அவற்றுள் தத்துவம் முப்பத்தாறு + தாத்துவீகம் அறுபதும் திருமந்திரத்தில் வெவ்வேறிடங்களில் விவரிக்கப்படுகின்றன.124 மனித உடம்பில் உருவாகும் நோய்களின் எண்ணிக்கை 4448 என்கிறது.125 நோய்கள் தோன்றுவதற்குரிய காரணங்களை விளக்கி நோயைக் கண்டறிய நோயின் குறி குணங்களை விவரிக்கிறது.126 கண்ணோய், சுரம்' சன்னி, வாயு' கருப்பச் சூலை, மேகம்' குன்மம்' குட்டம், கிராணி போன்ற நோய்களுக்கும், பிற நோய்களுக்கும் மருந்து உரைக்கப் பட்டுள்ளது.127 உடம்பில் மூப்பு நிலை தோன்றாமல் இருக்கவும் இளமையாக இருக்கவும் 108 கற்பங்கள் கூறுவதுடன், அவற்றினால் உடல் காய சித்தியாகும் என்கிறது.128

மரணம் என்பதும் மறு பிறப்பு என்பதும் சித்தர் கொள்கைக்கு எதிரானவை என்பதால்' மரணமில்லாப் பெருவாழ்வு வாழ சாகாக் கலை என்னும் முறை விவரிக்கப்படுவதுடன், அதற்குரிய நெறிகளையும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் விளக்கியுள்ளது.129 மரணத்தை வென்றிடும் யோகமுறைகளைப் பயில அதற்குரிய நாள்' நட்சத்திரம், காலம் ஆகியவற்றுடன் யோகம் பயிலக் கூடாத நாள்களையும் குறிப்பிடுகிறது.130 மனித உடம்பில் ஆறு ஆதாரங்களை எடுத்துரைத்து அவற்றுக்கும் இராசி' நட்சத்திரம் ஆகியவற்றுக்கும் உரிய தொடர்பையும் விளக்குகிறது.131

மனித உடலில் இயங்குகின்ற மூச்சுக் காற்றான பிராணன், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நாடிகளில் இயங்க வேண்டும் என்பதையும், சந்திரனின் வளர்பிறை' தேய்பிறை ஆகிய இரண்டிற்கும் மூச்சுக் காற்றுக்கும் உள்ள தொடர்பையும் அறியச் செய்கிறது.132 திருமந்திரத்தினாலும் பிற சித்த மருத்துவ நூல்களினாலும் பல கோட்பாட்டு முறைகளை அறிய முடிகின்றது. அவை' உயிரியல் கோட்பாடு, உடலியல் கோட்பாடு, பஞ்சபூதக் கோட்பாடு, மருத்துவக் கோட்பாடு, மருந்தியல் கோட்பாடு, வாழ்வியல் கோட்பாடு என்பவையாகும். இத்தகைய கோட்பாட்டு முறைகளினால் மருத்துவத் தையும் மனித வாழ்வையும் மேம்படுத்த' மருத்துவ முறைகளைத் தமிழுக்கு வழங்கியவர்களாகத் திருமூலர்' அகத்தியர், போகர்' திருவள்ளுவர், சட்டைமுனி' கோரக்கர், கொங்கணர்' இடைக்காடர், புலத்தியர்' புலிப்பாணி, தேரையர்' யூகி போன்ற முனிவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்.

திருமூலர் முதலிய சித்தர்களால் உருவாக்கப்பட்ட உயிர், உடல், மருத்துவக் கோட்பாடுகள்,சோழர்களின் ஆட்சிக் காலங்களில் சிறந்த நிலையில் போற்றக் கூடியவையாக இருந்திருக்கின்றன. சோழர்களின் ஆட்சிக் காலங்களில் உருவாகிய கோயில்கள் மனித உயிர், உடல் ஆகியவற்றின் குறியீட்டு முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய கோயில்களிலும்' கோயில் வளாகங்களிலும் மருத்துவ மனைகள் உருவாக்கி' மருத்துவம் செய்யப்பட்டது.

குறிப்பாக' தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம்' விஞ்ஞானம், சமயம்' கலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப் பேரரசன் இராசராசன் காலத்தில் தான் இத்திருவுருவம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அதன் பின்னரே அனைத்துச் சிவாலயங்களும் இம்முறையில் அமையலாயின133 என்றுரைப்பது கருதத்தக்கது.

தில்லைத் திருக்கோயிலுள் அமைந்துள்ள சித்சபை என்னும் பொன்னம்பலத்தின் மேல் ஒன்பது தங்கக்கலசங்கள் உள்ளன. அவை மனித உடலிலுள்ள ஒன்பது ஆற்றல்களைக் குறிக்கும். பொன்னம் பலத்தில் 64 கைம்மரங்கள் உள்ளன. அவை 64 கலைகளாகும்.21600 பொன்னால் செய்யப்பட்ட ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை, மனிதன் ஒவ்வொரு நாளும் விடுகின்ற சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். அவற்றில் 72000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை மனித உடம்பில் இயங்கும் நாடிகளைக் குறிப்பிடும்.

இதயம்' உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே இருப் பதைப் போல' கோயிலின் மூலக்கிரகம் சிறிது தள்ளியே அமைந் திருக்கிறது. மனித இருதயத்துக்குச் செல்லும் இரத்தம் நேரில் செல்லாமல் பக்கங்களிலிருந்தே செல்வது போல, அக்கோயிலுக்குள் செல்லும் வழிகள் நேராக இல்லாமல் இருபக்கங்களிலும் அமைந் திருக்கின்றன. கனக சபையில் உள்ள ஐந்து வெள்ளிப் படிகள், ஐந்து பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்தெழுத்தை உணர்த்துவன;வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறும், தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. கோயிலுள் அமைந்துள்ள கொடி மரம், மனிதனின் வாய்க்குள் உள்ள அண்ணாக்கைக் குறிக்கும். மனிதனின் இதயத்தில் இருக்கின்ற இறைவனே தில்லைத் திருக்கோயிலில் இருக்கின்றார் என்பதனை உணர்த்தவே, மனித உடல் போலவே பொன்னம்பலம் அமைந்திருக்கிறது134 என்று பொன்னம்பலத் தத்துவத்தைத் தல புராணம் விளக்குகிறது. இக்கோயிலில்' மிகப் பழமையான கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அது திருமூலரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், திருமூலர், வியாக்கிரபாதர்' பதஞ்சலி ஆகிய மூன்று சித்தர்களின் மூர்த்தங்கள் இருக்கின்றன.

மேற்கண்ட இத்தல புராணத்தின் தகவல்களினால், சித்தர்களின் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றிய சோழர்கள்' சைவக் கோயில்களில் இடம் பெறச் செய்ததுடன் அவற்றின் சிறப்பினை அனைவரும் அறியச் செய்தனர். அத்துடன் மருத்துவத் தொழிலையும் வளர்த்துப் போற்றியிருக்கின்றனர்.

சோழர்கால மருத்துவம்

சோழர்கள் தென்னிந்தியாவில் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை அரசாண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களது வலிமையை நிலைநாட்ட இந்தியாவின் வட பகுதியிலும், கடல் கடந்தும் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் மருத்துவச் சாலைகள் (ஆதுலர் சாலைகள்) அமைத்தும் அவை இயங்குவதற்குக் கொடை வழங்கியும் இருக்கின்றார்கள்.

“சோழர்கால மருத்துவப் பணியை அறியத் துணையாக அமைவது அக்காலக் கல்வெட்டுகள். அவை, திருமுக்கூடல்' திருப்பத்தூர், திருவாவடுதுறை' கிரகளூர், கூகூர்' கடத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுபவையாகும்"135

செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்' திருமூடல் எனும் ஊரில் அமைந்துள்ள, வெங்கடேசப் பெருமாள் கோயிலிலுள்ள வீர இராசேந்திர சோழனின் 5-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘வீரசோழன்' என்ற பெயரில் மருத்துவமனை, கோயில் நிருவாகத்தின் கீழ் நடத்தப் பட்டதாகவும்' அங்கே ஒரு மருத்துவ விடுதியும் இயங்கியிருந்த தாகவும் தெரிவிக்கிறது.

அம்மருத்துவ மனையில் நாடி பார்த்து மருந்தெழுதிக் கொடுப் பவர் ‘சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டன்' எனும் பெயரில் இருந்ததாகவும், அவர் ஆண்டுக்கு 90 கலம் நெல்லும் 80 காசும் ஊதியமாகப் பெற்றிருக்கிறார்.136

அறுவை செய்யும் மருத்துவர், ‘சல்லியக் கிரியைப் பண்ணுவான்' எனப்பட்டார். அவருக்கு ஆண்டுக்கு 30 கலம் நெல்லும்' 2 காசும் ஊதியமாகும்.137

மருத்துவப் பணி மகளிர், ‘மருந்து அடும் பெண்டுகள்' எனப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டொன்றுக்கு 30 கலம் நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கின்றது.138

மருத்துவ மூலிகைகளையும், எரிப்புக்கான விறகையும் கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவியாக இருப்பவருக்கு 30 கலம் நெல்லும் ஒரு காசும் ஊதியமாகும்.

அறுவைத் தொழில் செய்யும் நாவிதர்கள் பணியாற்றி யிருக்கின்றனர். அவர்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டனர். பிள்ளைப் பேற்றின் போது, இவர்களின் மனைவிமார் ஈடுபட்டிருக் கின்றனர். அப்பெண்டிர் ‘மருத்துவச்சி' என்றழைக்கப்பெற்றனர். இவர்களுக்கு, 15 கலம் நெல் மட்டும் ஊதியமாக அளிக்கப் பெற்றது.139

வீர சோழன் மருத்துவமனையில் ஓராண்டிற்கு வேண்டிய மருந்துகள் இருப்பில் இருந்ததாகவும்' அவை அளவுடன் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.140

படுக்கை வசதி

இந்த மருத்துவ மனையில் 15 படுக்கைகள் இருந்தன. நோயாளி யை ‘வியாதிப்பட்டுக் கிடப்பார்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ஒரு நாழி அரிசி மானியமாக வழங்கப் பட்டிருக்கிறது. மருத்துவமனை விளக்குகளுக்கு நாளொன்றுக்கு 2.30 காசும், விளக்கு ஒன்றுக்கு ஆழாக்கு எண்ணெயும் வழங்கப் பட்டிருக்கிறது" (ARE 248/1923).

சுந்தர சோழர் மருத்துவ மனை

இராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் பெயரில், ‘சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர்சாலை' என்ற மருத்துவ மனை ஒன்று நிறுவப்பட்டு அதற்கு நிதியாக ‘மருத்துவக்காணி' யாக நிலமும் அளித்துள்ளது எனத் தெரிகிறது. (ARE.248/1923).

திருப்புகலூர் மருத்துவமனை

விக்கிரம சோழன், முடிகண்ட சோழப் பேராற்றின் வடகரையில் மருத்துவம் செய்யவும், உணவளிக்கவும்' ஒரு மருத்துவமனையும், மடமும் ஏற்படுத்தினான் என்று, இவனுடைய 2-ஆம் ஆண்டுத் திருப்புகலூர்க் கல்வெட்டு கூறுகிறது.

மருத்துவக் கல்லூரி

திருவாவடுதுறையில் ஒரு கல்லூரி இயங்கியிருக்கிறது. மருத்துவம் படித்த மாணவர்கள் முன்னூற்றி அறுபத்து நால்வர்க்கு உணவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று' விக்கிரம சோழனின் 3-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.141

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவி

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மடம் உணவு வழங்கி வந்திருக்கிறது.

மருத்துவப் பண்டிதர்க்கு உதவி

மருத்துவம் செய்யும் மருத்துவப் பண்டிதர்களுக்கு 12 வேலி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதாக இரண்டாம் குலோத்துங்கனின் 13-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிக்கிறது.142

சோழர்கால மருத்துவர்கள்

சோழர் காலத்தில் தொழில் புரிந்த மருத்துவர் பலர் இருந்திருக்கின்றனர். இவர்கள்' அரசோடு தொடர்புடையவர்கள்; அரசின் ஊதியம், மானியம் போன்றவற்றைப் பெற்றவர்கள் எனத் தெரிகிறது. இவர்களின் பெயர்கள் சிலவற்றைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்கள், சவர்ணன் அரையன் சந்திர சேகரன்' கோதண்டராம அசுவத்தாம பட்டன்' மங்களாதி ராசன் சீராளன் என்பவர்கள். இம்மருத்துவர்கள் சைவ சிகாமணி சிவகீர்த்தி கடக மெடுத்த கூத்த பிரான் எனச் சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றனர்.143

மருத்துவர் இருவகை

மருத்துவ மனைகளில் மருத்துவம் செய்த மருத்துவர்கள் இருவகையினராக இருந்திருக்கின்றனர். ஒருவர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் (Physician) மற்றொருவர், உடற்கூறுகளை ஆராய்ந்து அறுவை சிகிச்சை (Surgeon) செய்பவர். இவரைச் ‘சல்லியக் கிரியை பண்ணுவான்' என்பர்.

மருத்துவக்காணிவழக்கு

மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி' நிலத்தை முறை தவறி அனுபவித்து வந்தமைக்காக, ‘காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பேரையனின்' காணி நிலமும், மனையும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு, மீண்டும் அவனுக்கு அந்த நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி, கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்தி ரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.144

மூலிகைப் பயிர்

‘செங்கழுநீர்' என்னும் மருத்துவ மூலிகைச் செடியைப் பற்றித் தாரமங்கலம்' செங்கம் ஆகிய இடங்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இம் மூலிகையைப் பயிரிடுவதற்கு அரசிடம் உரிமை பெறவேண்டியிருந்திருக்கிறது. ‘வழுதிலை' என்னும் கண்டங்கத்திரி பயிரிடப்பட்டதாகச் சேலம் மாவட்டச் சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சோழர் காலத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவக் கல்லூரி களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தேர்ந்த மருத்துவர்கள் மருத்துவர் களாகப் பணியாற்றியிருக்கின்றனர். மருத்துவப் புலவர்கள்

மருத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பித்திருக்கின்றனர். மருத்துவ மனைகளைக் கோயில்கள் நடத்தியிருக்கின்றன. மருத்துவ மனைகளுக்கு அரசர்களாலும் அரசமாதேவியர்களாலும் நிலங்கள் கொடையாக அளிக்கப் பட்டிருக்கின்றன. மருத்துவம் இலவசமாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. சோழர்காலத்தில் ஆயுர்வேத மருத்துவமே சிறப்பாக நடை பெற்றிருக்கிறது என்கிறார் தொல்பொருள் துறையைச் சார்ந்த தே. கோபாலன்.145

மருத்துவம் சார்ந்த தகவல்களை, மருத்துவத்தின் கொள்கை' கோட்பாடுகளை அறிய சங்க இலக்கியங்கள் துணை புரிவது போல' மருத்துவமனை, மருந்து' மருத்துவ மூலிகைப் பயிர், மருத்துவத் துக்கும் மருத்துவத் தொழிலாளர்களுக்கும் அரசின் உதவி போன்ற தகவல்களைத் தருவனவாக அமைவது, சோழர்காலக் கல்வெட்டு களாகும். மருத்துவம்' பொதுச் சுகாதாரம் என்னும் நிலைக்குச் சோழர்காலத்தில் தான் வளர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

மேலை நாட்டு மருத்துவமும், தமிழ் மருத்துவமும்

இன்றைய உலகில் உள்ள மருத்துவமுறைகள் சிலவற்றின் வளர்ச்சிக்குத் (சித்த) தமிழ் மருத்துவத்தின் பிரிவுகள் துணை புரிந்துள்ளன என்பர். ‘இயற்கை மருத்துவம்' என்பது தமிழ் மருத்துவ முன்னோர்களின் ‘உணவே மருந்து' என்னும் கொள்கையினைக் கொண்டிருக்கிறது. இதனுள் அடங்கிய ஆசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கொண்டு தனி மருத்துவமாக வளர்ந்துள்ளது என்பர்.

சீன மருத்துவ முறைகள், தமிழிலுள்ள வர்ம நூல்களிலிருந்து உருவாக்கப் பெற்றவையாம்.

தமிழ் மருத்துவத்தின் தொக்கணமுறைகள், நவீன மருத்துவத்தின் உடற்பயிற்சி முறைகளில் சிறந்த பகுதிகளாக விளங்குகின்ற தென்பர். தமிழ் மருத்துவத்தில் வழக்கொழிந்த அறுவை மருத்துவமுறை, நவீன மருத்துவத்தில் இடம் பெற்று வளர்ந்துள்ளது. தமிழ் மருத்துவ நூலான ‘அகத்தியர் நயன விதி' குறிப்பிடுகின்ற அறுவைக் கருவிகள்26 (சத்திராயுதங்கள்). அவற்றில்,

கத்தி Surgical Knife

கத்திரிகை Scissors and Forceps

சலாகை Catheter

குழல் Syringe

ஊசி Needle

போன்ற பல கருவிகள் நவீன மருத்துவத்தில் பயன்படுகின்றன. மேலை' கீழை நாடுகளில் காணப்பெறுகின்ற தமிழ் மருத்துவச் சுவடிகளால்' இவை நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.146

நம் நாட்டிலிருந்து சென்ற புத்த மதம் மேலைநாடுகளில் நிலை பெற்றிருப்பதைப் போல' இங்கிருந்து சென்ற மருத்துவ முறைகளும் நன்கு வளர்ந்த நிலையில் மேலை நாட்டு மருத்துவமாகவே மாறிவிட்டன என்பதைத் தமிழ் மருத்துவத்தின் தடயங்கள் காட்டுகின்றன.

சிறப்பிற்குரிய தமிழ் மருத்துவம்

இன்று வளர்ந்த நிலையிலிருக்கும் பிற நாட்டு மருத்துவ முறை' அரிய பல மருத்துவ முறைகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால்' மேலைநாட்டு மருத்துவங்களால் இன்றும் தீர்க்க முடியாமல் இருக்கின்ற பல கொடிய நோய்களைத் தமிழ் மருத்துவம் தீர்த்து வைப்பதாகக் குறிப்பிடுவர். அந்நோய்களில்'

1. காளாஞ்சகப்படை & Psoriasis

2. வளியழல் கீல்வாயு & Rheumatoid arthritis

3. ஒவ்வாமை நோய்கள் & Allergic diseases like Bronchial Asthma and Eczema

போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவை போன்ற பல்வேறு மருத்துவச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு, தனிச் சிறப்புமிக்க மருத்துவமாக விளங்குவது தமிழ் மருத்துவம் என்பர்.147

உலக மருத்துவம்

உலக மருத்துவத்துடன் தமிழ் மருத்துவத்தின் காலத்தை ஒப்பிட்டுக் காட்டும் தமிழ் மருத்துவ அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தின் காலத் தையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

உலக மருத்துவம் தோற்றம் காலம்

1. ரோமர் மருத்துவம் கி.பி.300

2. யுனானி மருத்துவம் கி.பி.600

3. கிரேக்க மருத்துவம் கி.பி.900

4. அட்டாங்க ஹிருதயம் கி.பி.900

5. சாரங்கதர சம்ஹிதை கி.பி.1300

6. பாவப் பிரகாசம் கி.பி.1600

7. அலோபதி (ஆங்கில மருத்துவம்) கி.பி.1775

8. தமிழ்ச் சித்த மருத்துவம் துவாபார யுகம் இரண்டாயிரத்து ஒன்பதுக்குமுன் (அதாவது 195, 50, 11, 073 ஆண்டுகளுக்கும் முன்)என்று கூறப்படுகிறது.

இக்கருத்தை அறிஞர்கள் மறுப்பர். காலத்தால் முற்பட்டது உலக மருத்துவ முறைகளும் நெறிகளுமாகும். அவற்றுடன் தம்முடைய மருத்துவ முறைகளை ஒப்பிட்டுக் காட்டும் போது' தமிழ் மருத்துவமே காலத்தால் முற்பட்டது என்பதை நிலைநாட்டுவதற்கான முயற்சி யாகும் என்பர்.

தமிழ் மருத்துவத்தின் காலத்தைக் கணிப்பதில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு' அறுதியிட்டுக் கூறும் நிலையை உருவாக்க வேண்டும்.148

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்று நன்னூல் குறிப்பிடுவதைப் போல' நோயென ஒன்று உண்டான பின்னரே நோய்க்கான மருந்து கண்டறியப்படுகிறது என்பதற்குச் சான்றாக அமைவது அம்மை என்னும் வைசூரி நோயாகும். இந்நோய் தோன்றிய பின்னர் மருந்து கண்டுபிடிக்கப் பட்டதைப் போலவே நோய்க்கு என்று ஒரு பெண் தெய்வமும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.

வாழ்வில் ஏற்படுகின்ற நிகழ்வுகள் அனைத்தையும் தெய்வங்க ளோடு இணைத்துக் காண்பது நம் பண்பாட்டின் அங்கமாகவேறூன்றி விட்டது. அதனால் தான் வெக்கை நோய் என்று கூறப் படுகின்ற வைசூரிநோய் மாரியம்மன் என்னும் பெண் தெய்வத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ‘மாரியம்மனுடன் மட்டும் தொடர்புபடுத்தப் பெறும் அம்மை நோய் அல்லது வைசூரி பலவகைப் படும். இது மனிதர்களுக்கு மட்டுமே ஏற்படுவதல்ல. விலங்கு களுக்கும், பறவைகளுக்கும் ஏற்படுவதுண்டு. சான்றாக, ‘கோழி அம்மை' என்பதைச் சுட்டுவர். மாடுகளுக்கு ‘மாட்டம்மை' ஏற்படும். ‘பெரியம்மை' எனப்படும் அம்மைநோய் மிகக் கொடுமையானது. விரைவில் மரணம் ஏற்படுத்த வல்லது. ஆயினும் அது இக்காலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ‘சின்னம்மை' என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரும் நோய் ஆகும். அதிலும் அதிகமாகக் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுவ துண்டு.149

மாரியம்மை பெயர்க் காரணம்

‘மாரி' என்பதற்கு ‘மழை‘ என்பது பொருள். ‘மழை' என்பது குளிர்ச்சி பொருந்தியது. அம்மை என்றால் ‘அம்மா' அல்லது ‘அம்மை நோய்' (Small-Pox) என்பது பொருள். அம்மை நோய் வெம்மைத் தன்மையால் ஏற்படுவது. எனவே மாரியம்மை குளிர்ச்சியும், வெம்மையும் நிறைந்த தெய்வம் எனலாம். வெம்மைக்குப் பின் குளிர்ச்சியைத் தருகின்ற தெய்வம். அதாவது வெப்பத்தால் ஏற்படும் வறட்சிக்குப் பின் மழையைத் தந்து செழிக்கச் செய்பவள் என மக்கள் நம்புகின்றனர். நாட்டுப்புறங்களில் இந்த அடிப்படையிலேயே மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன.150

மாரியம்மன் கோயில் தோற்றம்காரணம்

நம்நாட்டில் அம்மைநோய் மிகத் தீவிரமாக இருந்த காலத்தி லேயே மாரியம்மன் கோயில்கள் பல தோற்றம் பெற்றன. அங்கெல்லாம் சிறப்பாக வழிபாடுகள் மேற்கொள்ளப் பெற்றன. கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அம்மை நோய் தீவிரமாகத் தாக்கியுள்ளது. எனவே மாரியம்மன் கோயில்கள் அதிகமாக' கி.பி.18- ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றன எனக் கூறலாம்.

கி.பி.18-ஆம் நூற்றாண்டிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும் வெள்ளையர்களால் நாட்டில் போர்களும்' புதிய குடியேற்றங்களும் ஏற்பட்டன. பலரும் வெளிநாடுகளுக்கும்' வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்காகச் சென்றதன் காரணமாகவும் ஆங்காங்கே மாரியம்மன் கோயில்கள் எழுப்பப் பெற்றன.

கி.பி.16-ஆம் நூற்றாண்டு முதல் அண்மைக் காலம் வரை' ஏறத்தாழ 400 ஆண்டுகளில் தான் மாரியம்மன் கோயில்களின் தோற்றமும் வழிபாடும் மிக்கோங்கியிருந்து வருகின்றன. அம்மை நோய் அடியோடு அகற்றப் பெற்றாலும் கூட, பக்தி எனும் நிலையில் பல மாரியம்மன் கோயில்கள் இப்போதும் தோன்றி வருகின்றன.151

அவ்வப்போது அழிவுகளை ஏற்படுத்திய அம்மைநோய், ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தில்லியிலும்' பிற பகுதிகளிலும் ஏற்படுத்திய அழிவு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி பாதுசா ஒருவர் காலத்தில் அம்மை நோய் தில்லியைத் தாக்கிற்று என்பதைச் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோன்று வெள்ளையர் ஆட்சியின் போது நம்நாட்டின் பல பகுதிகளில் அம்மை நோய் பலரைப் பீடித்தது. திருநெல்வேலிப் பகுதியில் அம்மைநோய் 18-ஆம் நூற்றாண்டில் மிகக் கடுமையாக இருந்தது என்பதை பாதிரியார்களின் குறிப்புகளிலிருந்து (Side lights and south Indian history from letters and Records of Contemporary Jesuit Missionary-A.D. 1542-1750) அறியலாம்.

தில்லியிலும்' நாட்டின் பல பகுதிகளிலும், நெல்லைப்பகுதியிலும் ஏற்பட்ட இந்த அம்மை நோய் பற்றி வரலாற்றாசிரியர்களுக்கும் வெளிநாட்டு மதபோதகர்களுக்கும் தாக்கம் இருந்தது போல்' தென்பாண்டி நாட்டுப் பாமரக் கலைஞனுக்கும் அந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அப்பாமரக் கவிஞன் மாரியம்மன் கதையைப் பாடி அதில் அம்மை தொடர்பான செய்திகளைப் புகுத்தியுள்ளான். இதிலிருந்து நம்மிடையே புழங்கும் மாரியம்மன் கதைப் பிரதிகளின் மூலபாடம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதலாம். விசய நகர ஆட்சியின் போது மிகவும் பிரசித்தி பெறத் தொடங்கிய மாரியம்மன் வரலாறும்-வழிபாடும், இசுலாமியர்' வெள்ளையர் ஆட்சியின் போது மக்களிடையே பரவி, அதன் காரணமாகப் பல கோயில்கள் ஏற்பட்டன.152

எனவே' மாரியம்மன் கோயில்களின் பெருக்கத்திற்கும் மாரியம்மன் கதைப் பாடல், தாலாட்டு போன்றவைகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது 18-ஆம் நூற்றாண்டில் நாட்டில் ஏற்பட்ட அம்மை நோயின் கடுமையாகும். பாமரன் பக்தியை மூலதனமாகக் கொண்டு' அம்மை நோயின் கடுமையிலிருந்து தம்மைக் காக்க இறைவியை வேண்டியது போல, மருத்துவர்கள்' அம்மை நோயி லிருந்து மக்களைக் காக்க மருத்துவ முறைகளை ஏற்படுத்தியிருக் கலாம். வைசூரி நூல்80 என்னும் மருத்துவ நூலும் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

சரபோஜியும் சித்த மருத்துவமும்

தஞ்சையை அரசாண்ட மராட்டிய மன்னர் சரபோஜி, இந்திய மருத்துவ முறைகளை வளர்ப்பதில் அருந் தொண்டாற்றினார். அவர்' மருத்துவத்துக்குத் தந்த ஊக்கமே மருத்துவ நூல்களின் பெருக்கத் துக்கும் காரணமாய் அமைந்தது.

மன்னர் சரபோஜி, பெருந்தமிழ்ப் புலவர் சிவக்கொழுந்து தேசிகர் துணையுடன், மருத்துவ நூல்களைத் தேடித் தொகுத்தார். மன்னரிடம் நூல்களை வழங்குவோர்களுக்கு' அரச மதிப்பும் பொன்னும் பொருளும் அளிக்கப்பட்டன. இதனை அறிந்த சிலர், போலியான பெயர்களில் முன்பிருந்த நூல்களைப் பெயர்த்து எழுதியும், பிரித்து எழுதியும் வழங்கியுள்ளனர். பொருளின் ஆசையினாலும், பெருமை யின் ஆசையினாலும் உருவாக்கப்பட்ட நூல்கள்' உண்மையான சித்தர் நூல்கள் எவை என்று கண்டறிவதில் மயக்கத்தை ஏற்படுத்து கின்றன.

இவ்வாறான போலி நூல்களும் உருவாக முடியுமா? என்பதற்கு இன்னிலை, மூவடிமுப்பது, செங்கோன்தரைச் செலவு' இளம்பூரணர் தொல்காப்பியப் பொருளதிகார உரை ஏட்டுப் பிரதி வரலாறு என்பனவற்றை எடுத்துக் காட்டுவர்.153

மேற்கண்ட கருத்து, தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத் திலுள்ள மருத்துவச் சுவடிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சென்னை' கீழ்த்திசைச் சுவடி நூலக நூல்கள் மேற்கண்டவாறு திரட்டப்பட்டவை யல்ல என்பதால், இரு நூலக நூல்களையும் ஒப்பாய்வு முறையில் ஆய்வு செய்தால் உண்மை நிலையும், சித்த மருத்துவத்தின் உண்மையான நூல்களும் கண்டறியப்படக் கூடும்.

பதினெட்டு' பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சித்த மருத்துவம் ஒரு சில சித்த மருத்துவப் பரம்பரைகளுக்கும், பல மன்னர் பரம்பரை யினர்களுக்கும் மட்டுமே உரிமையும் பயனும் உடையதாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு மருத்துவத்தின் பயனும், வளர்ச்சியும் பாது காக்க வேண்டி முயன்ற தனி நபர்கள் பலர். அவர்களில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த விருதைச் சிவஞானயோகி' டி.ஜி. இராமமூர்த்தி, அறிஞர். டி.வி. சாம்பசிவம் பிள்ளை, சி.எஸ். முருகேச முதலியார், பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம், கண்ணுசாமிப்பிள்ளை ஆகியோரின் அரும்பணி குறிப்பிடத்தக்கது.

உஸ்மான் கமிட்டி

1924ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசு இந்திய மருத்துவ முறைகளை ஆராய சர். உஸ்மான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு' சித்த மருத்துவ நூல்களின் பட்டியலைத் தயாரித்ததுடன்' சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பரிந்துரை களையும் அளித்தது.

பனகல் அரசர்

நீதிக் கட்சியின் சார்பில் முதல் அமைச்சராகப் பணியாற்றிய பனகல் அரசர்' 1924-இல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில்' இந்திய மருத்துவப் பள்ளியைத் (School of Indian Medicine) தோற்றுவித்தார். அப்பள்ளியில் சித்த மருத்துவம் கற்பிக்கப் பட்டதுடன், சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் அமைந்தது154

சுதந்திர இந்தியாவில் சித்த மருத்துவம்

சுதந்திர இந்திய அரசாட்சியில் தமிழகத்தில் அமைந்த ஆட்சியாளர்களால் சித்த மருத்துவம் நிலை குலைந்தது. காரணம், திருந்திய அறிவியல் மருத்துவத்தின் ஈர்ப்பாகும். பனகல் அரசரால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மருத்துவப் பள்ளி 1962-இல் மூடப் பட்டது. இந்நிலையில், சித்த மருத்துவ அறிஞர்களும், சித்த மருத்துவச் சங்கங்களும் போராடியதன் காரணமாக' 1965-இல் பாளையங்கோட்டையில், இந்திய மருத்துவக் கல்லூரி தொடங்கப் பட்டது. இக்கல்லூரி சித்த மருத்துவக் கல்வியைப் பயிற்றுவித்தது. சித்த மருத்துவக் கல்விக்குரிய பாடமுறையை டாக்டர். பு.மு.வேணு கோபால், டாக்டர். சி.எஸ். உத்தமராயன், டாக்டர். ஆர். தியாகராசன் ஆகியோர் தயாரித்தனர்.

தமிழ்நாட்டரசும் சித்த மருத்துவமும்

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியக்கலை சார்ந்த மருத்துவமும் சுதந்திரம் அடையத் தொடங்கிற்று என்று கூறத்தக்க அளவிற்கு, தமிழ் நாட்டரசு சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது.

சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளையும், கையேடுகளையும்' ஒருமுறை அச்சாகிப் பின் விற்பனைக்குக் கிட்டாத புத்தகங்களையும் சேகரிக்கவும், மருந்து செய்முறை அட்டவணை தயாரிக்கவும்' பாடநூல்கள் வெளியிடவும் ஆகிய பணிகள் செய்ய (Pharmacopocia Committee, 1966, G.O. Ms. 2163 dt. 23.8.60) ஒரு குழுவும், திரு அருட்பா' திருப்புகழ் முதலியவைகளில் உள்ள மருத்துவப் பகுதிகளை ஆய்வதற்காக ஒரு குழுவும் எனத் தமிழக அரசு குழுக்களை ஏற்படுத் தியது. அதன் விளைவாக அறுவை மருத்துவம், சூல் மருத்துவம் என்ற நூல்கள் வெளிவந்தன.

மீண்டும் விரைவில் பயன்களைக் காண வேண்டி 1973-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 23-ஆம் நாள் தமிழக அரசு மேற்கூறிய குழுக்களை ஒருங்கிணைத்து சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குழு என்னும் ஒரு குழுவைத் (G.O. Ms. No. 2571 dt. 23.10.73) தோற்றுவித்தது.

அக்குழு இதுவரை' 400 சுவடிகளையும் 200 கையெழுத்துப் படிகளையும் 230 அச்சான பழைய நூல்களையும் சேகரித்துள்ளது எனத் தெரிகிறது.155

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த அரசு, சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. சித்த மருத்துவத்தின் சிறப்பினை அண்டை மாநிலத்தவர்களும், அயல் நாட்டினரும் அறிந்து கொள்ளும் விதத்தில்' 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சித்த மருத்துவக் கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவற்றை நடத்தியது. அதன் காரணமாக, சென்னை' அரும்பாக்கத்தில் இந்திய மருத்துவத்துக்கென தனி இயக்குநரகம் ஏற் படுத்தப்பட்டு, சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்குச் சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் நாட்டு அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பேராசிரியர். க. அன்பழகன்' சித்த மருத்துவத்துக்கு ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கதாக அமைந்தது.

சித்த மருத்துவம், ஆயுர் வேதத்தின் ஒரு பிரிவு அல்ல; அது தனி மருத்துவம் என்பதை இந்திய அரசிடம் எடுத்துக் கூறி' இந்திய அரசியல் சட்ட அடிப்படையில் தனி மருத்துவமாகச் சித்த மருத்து வத்தை அறிவிக்கச் செய்தார். சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கச் செய்தார்.

பாளையங்கோட்டை கல்லூரியில் சித்த மருத்துவத்தில் உயர் கல்விப் படிப்பினை உருவாக்கினார். சித்த மருத்துவச் சுவடிகளைத் திரட்டி நூலாக வெளியிட்டார். மாவட்ட' வட்டத் தலைநகரங்களில் சித்த மருத்துவ மனைகளை உருவாக்கினார்.

திருச்சி. ஆர். சௌந்திரராசனின் முயற்சியினால் தமிழக அரசு மூலிகைப் பண்ணையை உருவாக்கியது.

சித்த மருத்துவ மருந்துகள் அறிவியல் ஆய்வுக்கு உரியவை; அதனால் மருத்துவத்துறைக்கு மிகுந்த நற்பயன்கள் உருவாகும் என்பதை டாக்டர். இலலிதா காமேஸ்வரன் உருவாக்கினார்.

அன்ன பவள செந்தூரம் என்னும் சித்த மருந்தினை உயிர் வேதியல் அடிப்படையில் ஆய்வு செய்து' அதனால் நிகழும் விளைவுகளை டாக்டர். இராதா சண்முகசுந்தரம் கண்டறிந்தார்.

1975-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சித்த மருத்துவக் கல்வியில் உயர் ஆய்வும்' அறிவியல் முயற்சிகளும் நிகழத் தொடங்கின. சென்னை' அரும்பாக்கத்தில் இந்திய மருத்துவ மனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரியும் ஏற்பட்டது.

சித்த மருத்துவப் பரம்பரை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் மருந்துச் சாலை ஒன்றை ஏற்படுத்தினர். அதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளும்' 1000-த்துக்கும் மேற்பட்ட இந்திய மருந்துகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அதேபோல, மதுரை திருமங்கலத்தில் ஒரு மருந்துச் சாலை உருவாக்கப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவத்தை ஓர் அறிவியல் பிரிவாக ஏற்று சித்த மருத்துவ அறிவியல் என்னும் அறிவியல் ஆய்வுத் துறையை உருவாக்கியுள்ளது.156

16.10.2001-இல், தேசிய சித்த மருத்துவ ஆய்வுக்கூடமும், மூலிகைப் பண்ணையும் சென்னை தாம்பரத்துக்கு அருகில் அமைப்பதென மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான களப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நாள்வரை' நோய்களுக்குச் சித்த மருந்து, மருந்து செய்முறை என்னும் பேச்சுகளும்' கட்டுரைகள் எழுதுவதும் நிகழ்ந்து கொண்டிருகின்றன. ஒரு நோய்க்குரிய சித்த மருந்தால் நோய் தீர்ந்தது என்று கூறுவதை விட்டு விட்டு' அந்த மருந்து அந்நோயை எப்படித் தீர்த்தது என்பதைக் கண்டறியும் அறிவியல் குறிப்புகள், ஒவ்வொரு மருந்துக்கும் வரையப்பட வேண்டும் என்பதை ஆய்வு முறையாகக் கொள்ளவேண்டும்.

சித்த மருந்துகள் பல சித்தர் காலத்தில் இருந்தது போலவே இரசாயனம்' சூரணம், பற்பம்' செந்தூரம் என்றிருக்கக் காண்கிறோம். அவ்வாறான மருந்துகளை' ஆங்கில மருந்துகள் பயன்படுத்தப் படுவதைப் போல ஊசிமுறை' ஒட்டுமுறை, மாத்திரை' குடிநீர், பசை போன்ற வடிவங்களாக மாற்ற வேண்டும்.

ஆங்கில மருத்துவமுறைக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் மருத்துவ முறையின் பாடங்களையும் இணைத்தே மருத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். அவ்வாறான நடைமுறையால் மண்ணின் மருத்துவமான சித்த மருத்துவம் பாதுகாக்கப்படும்.

சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் உருவாக்க' தமிழிசைக் கல்லூரியில் மருத்துவ இசைப் பாடல்களும்' தமிழகப் பாடத்திட்டத்தில் மருத்துவப் பாடங்களையும்' கல்லூரிப் பட்ட வகுப்புகளில் சித்த மருத்துவம் என்னும் தனித்தாளும், தமிழ் இலக்கியம் பட்டக் கல்வியைப் போல ""தமிழ் மருத்துவ இலக்கியம்'' என்னும் பட்டக் கல்வியும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு செயல்படுத்தப்பட்டால், மருத்துவம் மக்களிடையே சென்றடையும். அதன்பின் சித்த மருத்துவத்தில் நாட்டமும் அதிகரிக்கும்; வளர்ச்சி ஏற்படும். சித்த மருத்துவத்தின் சிறப்பு உலகுக்குத் தெரிவதுடன், தமிழ் மருத்துவம் உலகம் முழுவதும் சென்றடைந்து புகழ் பெறும்.

சித்த மருத்துவமும் ஆயுள் வேதமும்

இந்திய மருத்துவங்களில் மிகவும் தொன்மையானவை சித்த மருத்துவமும்' ஆயுள் வேதமும் ஆகும். அவற்றுள்ளிருக்கும் நோய்களின் எண்ணிக்கை' நோய் நாடும் முறை, பயன்படுத்துப்படும் மருந்துப் பொருள்கள் முதலியவற்றால் வேறுபாடுகள் காணப் படுகின்றன.

நோய்களின் எண்ணிக்கை

சுஸ்ருதர் முதலான புராதன ஆயுள்வேத மருத்துவர்கள், மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்களின் எண்ணிக்கை 1120 என்றே குறித்துள்ளனர். ஆனால், தமிழ் மருத்துவச் சித்தர்கள், தலையில் உண்டாகும்நோய்களின் எண்ணிக்கை மட்டும் 1008 எனவும், உடல் முழுவதும் 4448 நோய்கள் உண்டாகு மென்றும் கூறுகின்றனர். தமிழ் மருத்துவ நூல்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையிலும், கிடைத் துள்ள நூல்களைக் கொண்டே மேற்கண்ட நோய்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

கண்நோய்கள்

ஆயுள் வேதத்தில் சுசுருதா, வக்பாதா போன்றவர்கள் கண் மருத்துவத்தை விரிவாகக் கூறுகின்றனர். இவர்கள் கூறும் கண் நோய்கள் 94 ஆகும். சுசுருத சம்ஹிதையில் 76 என்றே கூறப்படு கின்றது.157

“ சோதியில் இருபத் தேழு தொல்கரு விழியில் பத்து

தீதுபன் மூன்றாம் வெள்ளை சிறந்திடு சந்தில் ஒன்பான்

கோதைகேள் மூவெட்டாகும் குளையின் இமையின் உள்ளே

ஏதமில் நயனம் எங்கும் எழுந்தநோய் பதின் மூன்றாமே''158

என்று கண்ணில் தோன்றும் நோய்கள் 96 என்றும்' உறுப்புகள் தோறும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்றும் தமிழ்மருத்துவம் விளக்கு கிறது. இதே போல், உடல் முழுவதும் தோன்றும் நோய்களையும் அவை உறுப்புகள் தோறும் உண்டாகும் எண்ணிக்கையும் விவரித் துள்ளது.

ஆயுள் வேதத்தில் குழந்தை மருத்துவம்

ஆயுள் வேதத்தில் குழந்தைகளின் பராமரிப்பைக் (Kaumar Bhrtyam) குறிப்பிடுகையில், சில நோய்களும் மருந்தும் (ஆத்ம ரச்சாமிர்தம்) சித்த மருத்துவத்தில் கூறப்படும் பெரும்பாலான செய்திகளைக் கூறு கின்றன. ஆயுள் வேதம்' சித்த மருத்துவம் எனப் பிரிக்க இயலாத அளவுக்கு அவை வழக்குப் பெற்றுள்ளன159 என்பவற்றால் சித்த மருத்துவத்தின் பெரும்பகுதி ஆயுள்வேதமாக வழங்கி வருவதை அறியலாம்.

மொழி மாற்றம்

அழல் என்பது ஒன்றே. ஆயினும் இடத்தாலும் செயலாலும் ஆக்கனல்' வண்ண எரி, ஆற்றலங்கி' ஒள்ளொளித் தீ, நோக்கழல் என ஐந்து வகைப்படும். அவை பாசகம், இரஞ்சம்' சாதகம், பிராசகம்' ஆலோசகம் என்று புதிதாகக் கட்டப்பட்ட (சமஸ்கிருதம்) மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக்160 குறிப்பிடப் படுகிறது.

அளிஐயம்' இயல்பாகவே தன்னிடத்தில் அமைந்துள்ள பலம்' உணவினால் உண்டாகும் வலிமை, நீரின் தன்மை ஆகியவற்றைப் பெற்று, மார்பை இருப்பிடமாகக் கொண்டு, பிடரிக்கும் இதயத்துக்கும் மிக்க ஆதரவு தந்து பாதுகாப்பது இதன் தொழிலாகும். இதன் தொழில் காரணத்தினாலேயே தமிழ் மருத்துவ நூலோர் அளிஐயம் எனக் குறிப்பிட்டனர். ஆனால், வடமொழி மருத்துவர்கள் அவலம்பகம் என மொழி பெயர்த்தனர்161 என்றதனால்' பொருள் புரிந்தும், காரணத்தை உணர்ந்தும், தமிழில் வழங்கும் பெயர்ச் சொல்லின் தன்மை அறியாது' மொழிபெயர்ப்பாளர்கள் நேர்மாறான பொருள் விளங்கும் சொற்களைப் பயன்படுத்தி, அம்முறைகள் தங்கள் மொழியில் இருந் தாலும் தங்களுடைய முறைகள் அல்ல என்பதைக் காட்டிக் கொடுத்து விடுவது தெரிகிறது.

ஒற்றுமை வேற்றுமை

ஆயுள் வேதம், வாயு, பித்தம், ஐயம் ஆகியவற்றின் அடிப் படையில் அமைந்த மருத்துவ முறையாகும். உணவின் முறை, மனத்தின் தடுமாற்றம், அசுத்தம், பழக்க வழக்கம் இவற்றால் நோய்கள் வருவதாகக் கூறுகிறது.

நாடி பார்க்கும் முறையைச் சித்த மருத்துவர்களிடமிருந்து தெரிந்து கொண்டனர். மூலிகை முறை, இரசவர்க்கம்' உலோக முறை என்னும் இவை ஆயுள் வேதம்' சித்த மருத்துவம் என்ற இரண்டிலும் உண்டு. ஆயினும் சித்த மருத்துவத்தில் உலோக வகைகள் இரச வகைகளைப் பயன்படுத்தும் தாந்திரீக முறைகளுக்கு வேறு பட்டதாகக் காணப்படுகிறது162. சித்த மருத்துவம் வாதம், பித்தம்' ஐயம் ஆகிய மூன்றும் பஞ்ச பூதங்களின் தொந்தங்களினால்(கோபாம்) வேற்றுமையடைந்து நோய்களை உண்டாக்குகின்றன. இரச, உலோக முறைகள் இரண்டு மருத்துவ முறைகளிலும் இருந்தாலும்' வாதமுறை மருத்துவம், ஆயுள்வேதத்தில் காணப்படவில்லை என்று ஆயுள் வேதத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் உள்ள வேற்றுமை உணர்த்தப் பட்டது.

ஆயுள் வேதம்

ஆயுள் வேதம் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் துணை நூலாகவும்' உபவேதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், “ஆயுள் வேதம் என்ற சொல்லாட்சி எந்த வேதத்திலும் வருவ தில்லை. வேதசார உரையில் மருத்துவம் பேஷஜ,பேஷஜ்ய என்றே அழைக்கப்பட்டுள்ளது''163 என்று பேராசிரியர் எஸ்.கே. இராமச்சந்திர ராவ் உரைக்கின்றார்.

ஆயுர்வேதம் என்ற சொல்லும் மருத்துவச் செய்திகளும் சுஸ்ருத சம்ஹிதை' சரக சம்ஹிதை ஆகியவற்றின் மூலமாகவே கிடைக் கின்றன. அதிலும் குறிப்பாகச் சரக சம்ஹிதையில் ரிஷிகள், சித்தர், முனிவர்' மருத்துவர் கூடிய கூட்டத்தில் ஆயுர்வேத சிந்தாந்தத்தின் கலந்துரையாடல் நடந்தாகவும், அதன்பின்னரே ஆயுர்வேதம் எது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சரக சம்ஹிதையின் ஆசிரியரான சரகன், கனிஷ்க அரசனின் அரச வைத்தியன் என்று, கர்நாடக அரசின் ஆயுர்வேதக் கல்லூரி வெளி யிட்ட ‘சரகசம்ஹிதா‘ கன்னட மொழிபெயர்ப்பில் (பக்.6) குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால், சரகனின் காலம் கி.பி. ஒன்று, இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.164 சரகன் மருத்துவ முறைகளைக் கூறும்போது' பிஷக் (மருத்துவன்) த்ரவ்ய (மருந்து) உபஸ்தாபிகா (துணை செய்வோன்) ரோகி (நோயாளி) என்றும், இந்தப் பாகுபாட்டை ‘பாத சதுஷ்டய' (நான்கு கால்கள்) என்றும் குறிப்பிடக் காணலாம். இந்தப் பாகுபாடு வேறு எந்த ஆயுர்வேத நூலிலும் இல்லை.165 சரகனின் இந்தப் பாகுபாட்டில் நான்கு முறைப்பாடுகள் இருப்பது சரியே. ஆனால் அதன் வைப்புமுறை, முறையான மருத்துவத்துக்குரிய வைப்பு முறையைப் போல அமையவில்லை.

சரகனுக்கும் முற்பட்ட காலத்துக்குரிய திருக்குறள், ‘உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான்' என்று மருத்துவத்துக்கே உரிய முறையில் உரைக்கப்பட்டிருப்பது கருதத் தக்கது.

‘மிகினும்' குறையினும் எனத் தொடங்கும் குறளில் ‘நூலோர்' என்று திருக்குறள் குறிப்பிடுவதனால்' திருவள்ளுவருக்கு முன்பே பல மருத்துவ நூலோர் இருந்தனர் என்பது தெளிவு.

‘நாடி தர்பணா' என்னும் சமஸ்கிருத நாடி நூலின் முன்னுரையின் நான்காவது பக்கத்தில், “பாரத தேசத்தில் நாடி பரீட்சையின் முதல் குறிப்பு நமக்குக் கிடைப்பது, சாரங்கதார சம்ஹிதையிலேயே (பூர்வ காண்டம் 3.1.10 ஸ்லோகம்). இந்நூல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அடுத்து பாவபிரகாஷ்' யோக ரத்னாகர, சர்வ ரோக நிதான (தன்வந்திரி), கதி சஞ்சீவனீ' ப்ருஹத்யோக, தரங்கணீ முதலான நூல்களில் நாடி பற்றிய செய்தி காணப்படுகிறது என்கிறது. அந்நூலின் முன்னுரை 7-ஆம் பக்கத்தில்' ""தோராயமாகத் தாந்திரிக சம்பிரதாயத்தின் காரணமாக ‘நாடிபரிட்சை'என்பது ஆயுர் வேதத்துறையில் கால்வைத் துள்ளது" என்கிறது.

‘தாந்திரிக வித்தை' என்பது சித்த மருத்துவத்தின் வேறு பெயராகும். இதனுடைய பிரிவினர் கபாலிகர், பாசுபதர், வாகுளீசர், சித்தர்' நாதர், காணபத்யர்' காளாமுகர், கொளலர் என்று அழைக்கப் பட்டனர். பிறகு இம்மருத்துவ முறை வைதிக நெறியின் எதிர்ப்பாளர் களான ஜைனர்' பௌத்தர்களிடம் பரவியது. தாந்திரிக வித்தை என்னும் சித்த மருத்துவ முறை காலத்தால் மிகவும் பழமையானது. காலத்தைச் சரியாகக் கூறமுடியாத நிலையில்' கி.பி.4-ஆம் நூற்றாண்டு முதல் 12- ஆம் நூற்றாண்டுக்குள்ளான காலத்தைத் ‘தந்திரயுகம்' என்று ‘கரு நாடகத்தில் ஆயுர்வேத இதிகாசம்' என்ற கன்னட நூல் (பக். 11) கூறுகிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையைக் கூறும் நூலாக ‘அஷ்டாங்க இருதயம்,' ‘சாரங்கதார சம்ஹிதை' ஆகிய இரண்டு நூல்கள் கூறப்படும். அஷ்டாங்க இருதயத்தை ‘வாக்பட்டன்' இயற்றியதாக வரலாறு கூறுகிறது. இந்நூலுக்கு முன் ‘அஷ்டாங்க சங்கிரகம்' என்னும் ஆயுர்வேத மருத்துவ நூல் இருந்திருக்கிறது. அந்நூலை இயற்றியவன் பெயரும் “வாக்பட்டன்' எனக் காணப்படுகிறது. ரச ரத்னாகர சமுச்சயம் என்னும் நூலை இயற்றியவனும் ‘வாக்பட்டன்' என்பர். ஆக வாக்பட்டன் என்னும் பெயரில் மூன்று ஆயுர்வேத மருத்துவ நூலாசிரியர்கள் இருந்திருக்கின்றனர் எனத் தெரிகிறது.

‘அஷ்டாங்க சங்கிரகம்' என்னும் நூலை இயற்றிய முதலாம் ‘வாக்பட்டன்' கி.பி.550-இல் வாழ்ந்தவன் என்றும், ‘அஷ்டாங்க இருதயத்தை இயற்றிய இரண்டாம் வாக்பட்டன்' கி.பி.625லிருந்து கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவன் என்றும் ஆங்கில ஆய்வாளர்களான வின்டர் நீஜ், கீத் முதலானவர்கள் கருதுகின்றனர்.

முதலாம் வாக்பட்டன் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த விக்கிரமாதித்யனின் அரசவையில் மருத்துவப் புலவனாக இருந்தாகக் கூறப்படுகிறது. முதலாம் விக்கிரமாதித்யன் கி.பி.655681 -ஆம் காலத்தவன் என்றும், இரண்டாம் விக்கிரமாதித்யன் கி.பி.734745-ஆம் காலத்தவன் என்றும் பண்டையகால இந்திய வரலாறு (5667கூறுகிறது. இவனே தென்னகத்தின் மீது படையெடுத்து பல்லவர்' சோழர், சேரர்' பாண்டியர், களப்பிரர் ஆகிய மன்னர்களை வெற்றி கொண்டவன் என்கிறது.

முதலாம் வாக்பட்டன், சரக சம்ஹிதை' சுஸ்ருத சம்ஹிதை ஆகிய நூலாசிரியர்களின் கருத்துகளை எல்லாம் தம் நூலில் அடக்கிக் கூறியிருப்பதாகக் கூறுகிறான்166 என்பதனால், சரகர்' சுஸ்ருதர், வாக்பட்டன் ஆகிய மூவருமே ஆயுர்வேத மருத்துவ முறைகளைத் தோற்றுவித்தவர்கள் எனத் தெரிகிறது. இம்மூவரின் காலத்துக்கு முன் ஆயுர்வேதம் என்றொரு மருத்துவ முறை வடமொழியின் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.

சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.167

“சிந்துவெளி நாகரிக இனத்தின் பரம்பரையினர் என்று கருதப்படு கின்றவர்கள், தமிழ்நாட்டில் ‘திராவிடர்'களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ‘சித்த வைத்திய முறை'யைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இவர்களே, ‘சைத்தவ நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள்' என்றும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்" எனப் பேராசிரியர் எஸ். கே. இராமச்சந்திரராவ் தெரிவிக்கின்றார்.168

இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஆயுர்வேத மருத்துவ முறையை விடவும், இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் தொன்மையான மருத்துவ முறையாக இருந்து, தொடர்ந்து வந்து கொண்டிருப்பது சித்தமருத்துவ முறை என்பது தெளிவு.

தமிழ் மருத்துவர்களை ‘ஆயுள்வேதர்' என்று இளங்கோ வடிகள்169 குறிப்பிடுகிறார். “ஆயுள் வேதமாகிய வைத்திய நூல்கள் தமிழில் அளவிறந்த அளவில் இருக்கின்றன. சித்தர்கள் பதினெண் மரும் ஆயுள் வேத நூல்களை இயற்றியிருக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இப்போதும் உள்ளன. சமஸ்கிருத மொழியிலும் ஆயுள்வேத நூல்கள் மிகுதியாக இருக்கின்றன. தமிழ் ஆயுள்வேதமும் சமஸ்கிருத ஆயுர்வேதமும் வேறு வேறானவை. தமிழ் ஆயுள் வேத நூல்கள் பலவற்றை இன்றும் தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத்தில் காணலாம் என்று உ.வே. சாமிநாதய்யர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

1927 வரை சித்த மருத்துவம் என்ற பெயர் இன்மையால்' இன்றைய ‘சித்த மருத்துவம்' என்னும் பெயர் ‘ஆயுள்வேதம்' என்றே வழங்கப்பட்டு வந்திருப்பதை அறியமுடிகிறது என்று கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions