 |
முனைவர் இர.வாசுதேவன் |
| |
 |
இவர், கடலூர் மாவட்டத்தின் (காட்டுமன்னார் கோயில் வட்டம், கஞ்சங்கொல்லை அஞ்சல்) தென் கோடியில், கொள்ளிட நதிக் கரையில் அமைந்துள்ள கொண்டாயிருப்பு என்னும் சிற்றூரில் வாழ்ந்திருந்த வே.இரத்தினசாமி - சின்னப்பெண் தம்பதியர்க்கு இளைய மகன்.
தன் கிராமத்திலிருந்த உயர்நிலைப் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர், இவரது பதினாறாம் வயதில் (1967), இவரின் அத்தை மகன் துரை-சிங்காரவேலு அவர்களின் ஆதரவை நாடி, சென்னைக்குப் பயணமானார். நகரங்களில் கிடைத்த அனுபவங்களினால் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தான் கற்காத கல்வியைப் பொது நூலகங்களில் கற்றார். தமிழ் இலக்கியத்தில் நாட்டம் உடையவரானார். இவரது, அத்தை மகன் திரு. பி.நாராயணன் உதவியால், இருபத்தொன்பதாம் வயதில், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவலகத்தில் பகுதி நேரப் பணியில் அமர்ந்தார். |
எட்டாம் வகுப்புடன் நின்றுவிட்ட தனது கல்வியை, இருபது ஆண்டுக்குப்பின் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து B.Litt., M.A., பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் M.Phil பயின்று ‘திருவிளையாடற் புராணத்தில் கலைக் கூறுகள்’ என்னும் ஆய்வேட்டினை அளித்தார்.. மீண்டும் சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஆய்வு செய்து, ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் அரிய ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். 1987 முதல் 2002 வரை தொடர்ந்து கல்வி கற்றார். தனது கல்வியைத் தமிழ்வழிக் கல்வியாகவே கற்றார். ஓய்வு நேரத்தைப் படிப்பதற்காகவும் தமிழ்ப் பணிக்காகவும் செலவு செய்யும் இயல்பினர்.
இவர், சிறந்த ஆய்வாளர், கட்டுரையாளர், கவிஞர், தமிழறிஞர்களால் அறியப் பெற்ற தமிழ் ஆர்வலரான இவர், சென்னை, ரிசர்வ் வங்கித் தமிழ் மன்றத்தின் செயலாளர். இணையத்தின் வழியில் கீழை மேலை நாடுகளிலுள்ள தமிழர்களுடன் தொடர்புகொண்டுள்ளார். அவர்களின் தேவைக்கு ஏற்ப தமிழ்ச் செய்திகளை அள்ளி அள்ளித் தந்துகொண்டிருக்கிறார். கிடைத்தற்கரிய பழைய சுவடிகள், நூல்களைத் தேடிச் சேகரிக்கும் பணியில் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’யுடன் இணைந்து பணியாற்றுகிறார். ‘தமிழ்க் குயில்’ என்னும் ஒலியாடல் குழுமத்தை நிறுவி, அதன் மூலம் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளை உலகத் தமிழர் இல்லங்களில் ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ் வழியே தன் வழி என வாழ்ந்துவரும் இவர், 44 ஆம் வயதில் மு,முனியம்மாள் என்னும் தமிழச்சியைக் கலப்பு மணம் புரிந்து குடும்பத் தலைவரானார். ஒரு ஆண் மகனுடன் சின்னஞ்சிறு தமிழ்க் குடிலமைத்துக் கொண்டு தமிழே தவமென வாழ்பவர். |
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள | பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள |